மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!: இதிகாசம் வேறு; காப்பியம் வேறு!

First Published : 25 Jul 2010 01:49:00 AM IST


ஐம்பெரும் காப்பியங்களுள் "கம்பராமாயணம்' ஏன் இடம்பெறவில்லை?ஐம்பெருங்காப்பியங்கள் என்ற வழக்கை முதன்முதல், கி.பி.14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயிலைநாதரின் நன்னூல் உரையில் காண்கிறோம். ""ஐம்பெருங்காப்பியம், எண்பெருந்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு'' என்று எழுதுகிறார் மயிலைநாதர்.ஐம்பெருங்காப்பியம் என்று மயிலைநாதர் குறிப்பிடுகிறாரே தவிர, எவை ஐம்பெருங்காப்பியங்கள் என்று குறிப்பிடவில்லை. தமிழ்விடுதூது பாடிய கவிஞரும் ""கற்றார் வழங்குபஞ்ச காப்பியமும்'' என்று பாடுகிறாரே தவிர, ஐம்பெருங்காப்பியங்கள் எவை எனக் குறிப்பிடவில்லை.கி.பி.19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கந்தப்ப தேசிகரே, தாம்பாடிய திருத்தணிகை உலாவில்,""சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்கந்தர மணிமே கலைபுனைந்தான் - நந்தாவளையா பதிதருவான் வாசகனுக் கீந்தான்திளையாத குண்டல கேசிக்கும்'' என்று பாடி, ஐம்பெருங்காப்பியங்கள் எவை என்று குறிப்பிட்டுள்ளார்.தமிழ் இலக்கிய வரலாற்றையும், வடமொழி இலக்கிய வரலாற்றையும் ஆழமாகக் கற்றால் ஒன்றை அறியலாம். அதாவது, இதிகாசம் வேறு; காப்பியம் வேறு. ஒப்பாய்வின் முன்னோடி பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, "காவிய காலம்' என்ற நூலில், "இதிகாசம் வேறு, காப்பியம் வேறு' என்பதை நன்கு புலப்படுத்துகிறார். அனேக அறங்களோடு, வீரத்துக்கும் போருக்கும் மட்டும் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்துப் பாடப்படுவது இதிகாசம். தமிழில் உள்ள கம்பராமாயணம், வடமொழியில் உள்ள மாபெரும் இதிகாசமாகிய வால்மீகி ராமாயணத்தின் வழிநூலாகும். வழிமுறை இதிகாசம் என்றும் இதை அழைப்பர். உலகக் காப்பியங்களையும் இதிகாசங்களையும் நன்கு கற்ற வ.வே.சு.ஐயர், "கம்பராமாயண ரசனை' என்ற தம் நூலில், ""கம்பராமாயணத்தின் பெருமை எல்லாம் இவ் யுத்த காண்டத்தில்தான் காணப்படும்'' என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது.கம்பராமாயணத்தில் முதல் 5 காண்டங்களின் பாடல்கள் 6358; கடைசியாக உள்ள யுத்தகாண்டத்தின் பாடல்கள் 4310 என்பதை நினைவில் கொண்டால், கம்பனின் ராமாயணம் இதிகாசம் என்பதை உணரலாம். எனவே, இலக்கியநெறி அல்லது வகைநிலை காரணமாக (வழிமுறை), இதிகாசமாகிய கம்பராமாயணத்தை ஐம்பெருங்காப்பியங்களுள் சேர்க்கவில்லை.இத்தொகுப்பு நெறியை வடமொழி இலக்கிய வரலாற்றோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். வடமொழியிலும் சிறப்புமிக்க ஐந்து காவியங்களைத் தொகுத்து "பஞ்சகாவியம்' என்றனர். இத்தொகுப்பில், ஹர்ஷ கவியின் நைடதம், பாரவியின் கிராதார்சுநீயம், காளிதாசரின் ரகுவம்சம், குமாரசம்பவம், மாககவியின் சிசுபாலவதம் உள்ளனவே தவிர, வால்மீகி ராமாயணம் இடம்பெறவில்லை.காரணம், ஆதிகவியின் ராமாயணம், இதிகாசம் என்ற இலக்கியவகையைச் சேர்ந்தது என்பதுதான். வடமொழி பஞ்சகாவியத் தொகுப்பை மனதில் கொண்டு, தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியத் தொகுப்பைச் சிந்தித்தால், கம்பராமாயணம், இதிகாசம் என்ற இலக்கிய வகைநிலை என்பதன் காரணமாகவே சேர்க்கப்படவில்லை என்பது புலனாகும்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்