திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது. காந்திஜி தூவிய விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது'' என்று மூதறிஞர் ராஜாஜி பாராட்டியுள்ளார். பாரதி, வ.உ.சி., நாமக்கல் கவிஞர் முதலான தமிழ்மொழிக் காவலர்கள் ராஜாஜி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். "நாமக்கல் கவிஞர்' என்று மக்களால் பாராட்டப்பட்ட வெ.இராமலிங்கம் பிள்ளை, மிகமிக எளிய சொற்களால் கவிதை பாடி, காந்தியக் கொள்கையைத் தமிழ்நாட்டில் பரப்பிய ஒரே கவிஞர் என்று சொல்லலாம். காந்திமகான் மறைந்தவுடன் ஒவ்வொரு வாரமும் தினமணியில் காந்திக்கு அஞ்சலி செலுத்தி 52 வாரங்கள் இசைப்பாடல்கள் எழுதினார். அவர் எழுதிய கவிதைத் தொகுதியில் "காந்தி மலர்' என்ற நாற்பது கவிதைகளுக்கு மேல் காந்தியடிகளை வாழ்த்தி எழுதியுள்ளவை தொகுக்கப்பட்டுள்ளன.சேலம் மாவட்டத்தில், 1888-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி வெங்கட்ராமன்-அம்மணி அம்மாள் தம்பதிக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு முன் பிறந்தவர்கள் எழுவரும் பெண் குழந்தைகள். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் இராமலிங்கம். தாயார், கருப்பண்ணன் என்ற பெயரிட்டே அழைத்தார். இவரது குடும்பம் நாமக்கல்லில் வாழ்ந்து வந்ததால், "நாமக்கல் கவிஞர்' என்றே அழைக்கப்பட்டு புகழ் பெற்றார்.இராமலிங்கத்தின் தாயார் அவருக்குச் சிறு பிள்ளையாய் இருக்கும்போதே அறிவுரைகள் கூறினார். காந்தியடிகளின் தாயார் காந்தியாரிடம் பெற்ற சத்திய வாக்குகளைப் போல அவை அமைந்தன.""நீ என்ன வேணுமானாலும் செய். ஆனால், பொய் மட்டும் சொல்லாதே; போக்கிரி என்று பெயர் எடுக்காதே. இந்த இரண்டைத் தவிர வேறு நீ எது செய்தாலும் பரவாயில்லை'' என்ற முதல் அறிவுரைப்படி இராமலிங்கம் கடைசி வரை செவ்வனே நடந்து கொண்டார்.புலால் உணவில் விருப்பம் கொண்ட கவிஞர், பிற்காலத்தில் திருக்குறளைப் படித்தும், சமயச் சொற்பொழிவுகள் பல கேட்டும் புலால் உண்பதை நிறுத்திக் கொண்டார்.கவிதையில் இயற்கையாகவே நாட்டம் கொண்ட இராமலிங்கம், இளமையிலேயே சித்திரக் கலை கைவரப் பெற்றார். பள்ளியிலும், பொது வாழ்விலும் அவர் நல்ல சித்திரக்காரர் என்றே அறிமுகமானார். பாராட்டுதலையும், பரிசுகளையும் பெற்றார்.தந்தை வெங்கட்ராமன், காவல் துறையில் தலைமைக் காவலராகப் பதவி வகித்ததால், தன் மகனையும் காவல்துறையில் பணியாற்றச் செய்ய வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்ட அவரது எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது.புகைப்படம் போல் அதே வடிவில் தோற்றமிருக்குமாறு வரையும் திறமைபெற்ற கவிஞர், நாடகக் கலையிலும் நாட்டமுடையவர். அப்போது நாமக்கல்லில் வாழ்ந்து வந்த பிரபல நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா, கவிஞருக்குப் பிள்ளைப் பிராய நண்பர். அவரின் நடிப்பையும், குரல் வளத்தையும் கண்டு வியந்த கவிஞர், நாடகத்தில், எஸ்.ஜி.கிட்டப்பாவுக்குப் பல பாடல்கள் எழுதிக் கொடுத்தார். எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகத்தைப் பார்க்கப் பார்க்க இராமலிங்கத்துக்கும் நாட்டு நடப்பில் நாட்டம் ஏற்பட்டது.1904-இல் வைஸ்சிராயாக இருந்த கர்ஸன், வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இந்தப் பிரிவினை அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த பாரத மக்களைச் சுதந்திர வேட்கை கொள்ளச் செய்தது.அரவிந்தர், சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நெüரோஜி, கோகலே, பாலகங்காதர திலகர் போன்றவர்களின் சொற்பொழிவுகள் பத்திரிகைகளில் வெளிவரும். கவிஞர் அவற்றைப் படித்தார். அவருக்கு நாமக்கல் நாகராஜ ஐயங்கார் என்ற தேசப்பற்றுமிக்கவர் இளமைப் பருவம் முதல் இறுதி வரை உற்ற நண்பராயிருந்தார். இவற்றைப் படித்த இருவரும் முழு மூச்சுடன் தேசத் தொண்டில் இறங்கினர். கவிஞர் பேச்சுத் திறத்தால் திருச்சி மாவட்டத்தில் பிரபலமாகிவிட்டார். திலகரும், காந்தியடிகளும் மக்களிடையே தேசப்பற்றுக் கனலை வளர்க்கத் தொடங்கினர். காந்தியடிகளின் அஹிம்சை, சத்தியாக்கிரகம் என்ற இரு கொள்கைகளும் கவிஞரை ஈர்த்தன. அதுமுதல் முழுக்க முழுக்கக் காந்தியக் கவிஞராக மாறிவிட்டார்.வேதாரண்யம் கடற்கரையில் உப்புக் காய்ச்சுவதற்கான பாதயாத்திரையை ராஜாஜி தலைமையில், பாரதியாரின் பாடல்களைப் பாடிக்கொண்டே தொண்டர்கள் அணிவகுத்து நடைப்பயணம் சென்றனர். அப்போதுதான் நாமக்கல் கவிஞர் எழுதிய "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்' என்ற பாடலையும் தொண்டர்கள் உற்சாகத்தோடு பாடிக்கொண்டே சென்றனர். பிற்காலத்தில் அந்தப் பாடலை எழுதியவர் மகாகவி பாரதியாரோ என்ற ஐயம் ஏற்படும் அளவுக்கு அந்தப் பாடலும், எழுதிய கவிஞரும் புகழ் பெற்றனர்.1932-ஆம் ஆண்டில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட நாமக்கல் கவிஞர், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.1937-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். கவிஞர் சேலம் நகராட்சி உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து கவிஞரின் காங்கிரஸ் பணி தீவிரமானது.காரைக்குடிக்கு பாரதியார் வந்திருப்பதாக அறிந்த நாமக்கல் கவிஞருக்கு பாரதியாரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஓவியம் வரைவதிலும் கெட்டிக்காரர் என்று பாரதியாருக்கு நாமக்கல் கவிஞரை அறிமுகப்படுத்தினர். கவிதையும் எழுதுவார் என்று குறிப்பிட்டனர். கவிதை ஒன்று சொல்லுமாறு பாரதியார் கேட்டார். எஸ்.ஜி.கிட்டப்பா நாடகத்துக்காக தாம் எழுதிக் கொடுத்த "தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்' என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். பாடல் முழுவதையும் கேட்ட பாரதியார், "பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. "தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...' பலே, பலே இந்த ஓர் அடியே போதும்'' என்று பாராட்டித் தட்டிக் கொடுத்தார்.காங்கிரஸ் இயக்கத்துக்குக் கவிஞரின் கவிதைகள் பெரிதும் உறுதுணையாக இருந்தன. காங்கிரஸ் கவிஞர், தேசத் தொண்டர் என்றெல்லாம் தமிழகத் தேசியவாதிகளால் பாராட்டப்பட்ட கவிஞருக்கு வாழ்வளித்தது ஓவியக்கலையே. தன் வறுமையை வெளியே புலப்படுத்தாமல் கெüரவமாக வாழ்க்கையைக் கம்பீரமாக நடத்தியவர் கவிஞர். அவர் கவிதையின் பெருமையை உணர்ந்த தேசபக்தர் சின்ன அண்ணாமலை அவருடைய நூல்களை வெளியிடத் தொடங்கிய பிறகுதான் கவிஞர் வாழ்க்கையில் மெல்ல மெல்ல வறுமை விலகத் தொடங்கியது. தேவகோட்டை தியாகி சின்ன அண்ணாமலை, சென்னைக்குக் குடியேறி, "தமிழ்ப்பண்ணை' என்ற புத்தக வெளியீட்டகத்தைத் தொடங்கினார்."அவளும் அவனும்' என்ற சிறு காவியத்தை நாமக்கல் கவிஞர் எழுதியிருப்பது பலருக்குத் தெரியாது. காவியம் என்றால் காவியத்துக்கான அமைப்புடன் கடவுள் வாழ்த்து, ஆற்றுப்படலம், நாட்டுப் படலம் என்ற லட்சணங்களுடன் எல்லாம் அமைய வேண்டும் என்ற காவிய இலக்கணத்தை மீறிய எளிய நடையில் அமைந்த கதைப் பாடல் "அவளும் அவனும்' அந்த நாளில் இளைஞர்களால் பாராட்டப்பட்டது. கவிஞராகவும் ஓவியராகவும் திகழ்ந்த கவிஞர், திருக்குறளுக்குப் புதிய உரை எழுதியவர். பல்சுவைப் பாடல்கள் எழுதியவர். தவிர, அவர் சிறந்த நாவலாசிரியர். அவருடைய தன் வரலாறான "என் கதை'யே நாவல் படிப்பதுபோல் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். இவர் எழுதிய "மலைக்கள்ளன்', "மரகதவல்லி', "கற்பகவல்லி', "காதல் திருமணம்' ஆகிய புதினங்கள் வாசகர்களால் ரசித்துப் பாராட்டப்பட்டவை. இவரது மலைக்கள்ளன் திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது.1949-ஆம் ஆண்டு கவிஞர், சென்னை மாகாண அரசின் ஆஸ்தானக் கவிஞராக நியமிக்கப்பட்டார். 1956-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி நிர்வாக உறுப்பினரானார். 1956 முதல் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 1971-ஆம் ஆண்டு பாரத அரசு அவருக்கு "பத்மபூஷண்' விருது வழங்கிச் சிறப்பித்தது.இன்று தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. "தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்' என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை இன்று பெருமையாக முணுமுணுக்காதவர்களே கிடையாது.84 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்த தேசிய, காந்தியக் கவிஞர், காவிய ஓவியர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை 1972-ஆம் ஆண்டு ஆகஸ்டு 24-ஆம் தேதி சென்னையில், தாம் போற்றிய தமிழ்கூறு நல்லுலகைவிட்டு விண்ணுலகு அடைந்தார்.
கருத்துக்கள்