இந்த வாரம்...


நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு ஆண்டுதோறும் போய்வருவது ஒரு சுகானுபவம். கோவை விஜயா பதிப்பகத்தாரின் அரங்கில் இருந்த ஒரு புத்தகம் ஈர்த்தது. புத்தகத்தின் பெயர் "அதிசயப் பிறவி வ.ரா.'. தொகுத்திருப்பவர்கள் சிட்டியும், பெ.சு.மணியும். "மணிக்கொடி' எழுத்தாளர் சிட்டி, மணிக்கொடியின் ஆணிவேராக இருந்த "வ.ரா.' பற்றி எழுதியிருக்கிறார் என்றால், அதைவிட ஆதாரபூர்வமான பதிவு வேறு இருக்க முடியாது.÷சிட்டி "மணிக்கொடி' அலுவலகத்தில் பாயில் அமர்ந்திருந்த "வ.ரா.'வை சந்தித்ததும் அதுவரை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்தவரை எப்படி "வ.ரா.' தமிழில் எழுதத் தூண்டினார் என்பதும் சுவாரஸ்யமான சம்பவங்கள்.பாரதியாரால் "ஓய்' என்று அழைத்து ஊக்குவிக்கப்பட்ட எழுத்தாளர், சுதந்திரப் போராளி என்பதும் அறிஞர் அண்ணாவால் "அக்கிரகாரத்து அதிசயப் பிறவி' என்று வர்ணிக்கப்பட்டவர் என்பதும் பலராலும் பலதடவை பதிவு செய்யப்பட்ட விஷயம்தான். வ.ரா.வின் நிஜமான வீச்சும், தமிழ் ஆளுமையும், பங்களிப்பும் என்ன, எத்தகையவை என்பதை சிட்டியைவிட அழுத்தமாக யாரும் பதிவு செய்திருக்க முடியாது.1930-இல் வ.ரா. சிறையில் இருந்தபோது பல நோட்டுப் புத்தகங்களில் பலவகை இலக்கிய வகைகளைப் படைத்திருக்கிறார். அவைகளில் ஒன்றுதான் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட "எது கவிதை?' என்கிற திறனாய்வுக் கட்டுரை. சிறையில் அவருக்குப் பல நூல்களைக் கொடுத்துதவிய அதிகாரி டேவிட் அபர்நதி கிரீன்வுட் என்பவருக்கு அந்தக் கட்டுரையைச் சமர்ப்பணம் செய்திருந்தார். வ.ராமசாமி ஐயங்கார், கைதி எண் 1557 என்கிற குறிப்பும் காணப்படுகிறது."அதிசயப் பிறவி வ.ரா.' புத்தகத்திலேயே என்னை பிரமிக்க வைத்தது அவரது அந்த ஆங்கிலக் கட்டுரைதான். ஆங்கிலத்தில் "வ.ரா.'வுக்கு இருந்த ஆளுமையும், சொல்ல வந்த விஷயத்தை அழுத்தமாகப் பதிவு செய்யும் தேர்ச்சியும் என்னை வியப்பில் மூழ்கடித்தது. கட்டுரையின் தலைப்பு "எது கவிதை?'சில புத்தகங்களைப் படித்து ரசித்துவிட்டு மறந்து விடுகிறோம். சிலவற்றில் குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொள்கிறோம். வேறு சில, தகவல் தேவைப்படலாம் என்று பார்வை படும் இடத்தில் பத்திரப்படுத்துகிறோம். கடைசியாக, ஒரு ரகம் உண்டு. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வகையைச் சார்ந்த புத்தகங்கள். அந்தப் பிரிவைச் சேர்ந்ததுதான் "அதிசயப் பிறவி வ.ரா.'*******நெய்வேலி போவது என்று முடிவெடுத்தபோதே, குறிஞ்சிப்பாடி செல்ல வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.  குறிஞ்சிவேலனைப் பற்றி ஏற்கெனவே ஒருமுறை எழுதி இருந்தேன். குறிஞ்சிப்பாடியில் இருந்து "திசை எட்டும்' என்கிற மொழிபெயர்ப்பு இலக்கிய மாத இதழைத் திறம்பட நடத்திவரும் அற்புத மனிதர் இவர். மொழிபெயர்ப்பு இலக்கியத்தைப் பட்டணத்தில்தான் போற்றிப் பேண முடியும் என்கிற மாயையைத் தகர்த்து உடைத்த பெருந்தகையாளர்.குறிஞ்சிப்பாடியில் போய் விசாரித்தால், "யார் குறிஞ்சிவேலனா, அவர் இருப்பது மீனாட்சிப்பேட்டையிலாயிற்றே!' என்கிற தகவல் கிடைத்தது. மீனாட்சிப்பேட்டையில் ஓர் ஓட்டு வீடு. இதை வீடு என்பதைவிட நினைவகம் என்று கூறுவதுதான் சாலப் பொருந்தும். வள்ளலார் வந்து அமர்ந்த திண்ணை, இந்த வீட்டின் ஓர் அங்கம் என்று சொன்னால், அதன் பெருமையை என்னென்பது? வள்ளலாரின் பரிபூரண ஆசி இருப்பதால்தானோ என்னவோ, குறிஞ்சிவேலனால் செயற்கரிய சாதனைகளை மீனாட்சிப்பேட்டையில் அமர்ந்தபடி சாதிக்க முடிகிறது.÷வள்ளலார் அமர்ந்த திண்ணையை ஓர் அறையாக மாற்றி இருக்கிறார். அந்த இடத்தில் அமர்ந்துதான் குறிஞ்சிவேலன் சாகித்ய அகாதெமிக்காக மலையாளத்தில் எஸ்.கே.பொற்றோக்காடு எழுதிய நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தாராம். அதற்குப் பரிசும் கிடைத்தது என்பதைப் பெருமையுடன் பகிர்ந்துகொண்டார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, வங்காளி என்று இவருக்கு இருக்கும் பன்மொழிப் புலமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கால்நடைப் பராமரிப்புத் துறையில் வேலை பார்க்கும்போது பல ஊர்களுக்கும் இடமாற்றம் கிடைத்தது, தன்னைப் பல மொழிகளையும் கற்றுத் தேர்ச்சி அடைய உதவியதாகக் கூறுகிறார் குறிஞ்சிவேலன். மொழிபெயர்ப்பு இலக்கியத்தை மையமாக வைத்து "திசை எட்டும்' இதழைத் தொடங்கியபோது, முதலில் இருந்த தயக்கம், கட்டுரைகளும், கதைகளும், கவிதைகளும் வந்து குவியத் தொடங்கியபோது மறைந்து விட்டதாகக் கூறினார் அவர்.மகனும் மகளும் சென்னையில். இவர் மட்டும் மனைவியுடன் மீனாட்சிப்பேட்டையில். வள்ளலார் வந்து தங்கிய இடத்தைவிட்டு நகர அவருக்கு மனம் ஒப்பாததில் வியப்பில்லை. வள்ளலார் அமர்ந்திருந்த திண்ணையில் தங்கி இருக்க இதுவரை ஒரே ஒருவரைத்தான் அனுமதித்திருப்பதாகக் கூறினார் குறிஞ்சிவேலன். அவர் வல்லிக்கண்ணன்!*******இப்போதெல்லாம் ஆனந்தவிகடனைக் கையில் எடுத்தால் முதலில் புரட்டுவது "சொல்வனம்' பகுதியைத்தான். சில வாரங்களில் "குட்டியா...கியூட்டா' வெளியுலகுக்கு அறிமுகமாகாத வாசகக் கவிஞர்களின் கவிதைகளுக்குப் பதிலாக, பிரபலங்களின் கவிதைகள் வெளியாகி இருந்ததால் "ப்ச்ச்சச்' சென்று மனம் சோர்வடைந்து விடுகிறது.பிரபலமாகிவிட்ட கவிஞர்களிடம், தங்களது அறிவு ஜீவித்தனத்தைத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்தான் முனைப்பு காணப்படுகிறதே தவிர, யதார்த்தமாக மனதிலிருந்து நீரூற்றுப் பிரவாகமாகப் பொங்கி எழும் கவிதை நயம் "மிஸ்ஸிங்'. வலிய வார்த்தைகளைப் போடுவது, கைதட்டல் பெறவேண்டும் என்பதற்காகவே சில வரிகளைச் சிரமப்பட்டு சேர்ப்பது போன்ற அனாவசிய ஒப்பனைகள் இல்லாமல், "சுருக்'கென்று நெஞ்சில் தைப்பதுபோல நறுக்கென்று நாலே வார்த்தைகளில் வாசகர்கள் எழுதும் கவிதைகளில் இருக்கும் ஈரம் இருக்கிறதே, அதுதான் நிஜமான கவிதை! இதுவும் எனது தனிப்பட்ட கருத்து.கடந்த மாதம் "சொல்வனம்' பகுதியில் லதாமகன் எழுதிய "பழக்கம்' என்கிற கவிதையும், ரேணுகா சூரியகுமார் எழுதிய "நதி நனைந்த காலம்' கவிதையும் என்னில் ஏற்படுத்தி இருக்கும் சலசலப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. இந்தக் கவிஞர்களைச் சந்தித்துக் கைகுலுக்கிப் பாராட்ட வேண்டும் போலிருக்கிறது... படித்துப் பாருங்கள். என்னை நீங்கள் வழிமொழிவீர்கள்.பழக்கம்பொம்மை அலைபேசியைப்பெற்றதுமேஎல்லோரையும் விலக்கிதனியே பேசிக்கொண்டிருக்கப்பழகிவிடுகிறதுகுழந்தை!***நதி நனைந்த காலம்கொல்லைப்புறத்தின்குழாயடியில்திரைச்சீலையில் மறைந்தபடிவேப்பம்பூ மணம் கமழகுளித்ததொரு காலம்...தோழிகளுடன்கூட்டமாகப் போய்குளக்கரையில் துணி துவைத்துகரையோரக் கல்லில்மஞ்சள் இழைத்துப் பூசியபடிகுளித்த நாட்கள் இனி மீளாது...கடலில் மூழ்கி எழுந்தால்தான்கல்யாணம் ஆகுமெனஜோசியர் கூறஅலைகளுக்குப் பயந்தபடிஅம்மாவின் கால் பிடித்துக்குளித்ததுஞாபகமிருக்கிறது இன்னும்.நகரத்தின் வாசத்தில்ஒட்டிவைத்த ஸ்டிக்கர் பொட்டுகளுக்கு நடுவேபல்லிகளுக்கும்கரப்பான் பூச்சிகளுக்கும்பயந்தபடியேகுளிப்பதிலும் சுகமெனக்கு!குளிப்பது சுகமெனினும்கல்யாணமாகிஆறு மாதங்களாகியும்இன்னும் குளிப்பதைக்குத்திக் காட்டிகண்ணீரில் குளிப்பாட்டுகிறாள்மாமியார் தினமும்!
கருத்துக்கள்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue