பரிமேலழகரின் உரைச்சிறப்பு


திருக்குறள் எழுந்த காலத்திலிருந்து உரைகள் பல எழுந்தாலும் உரை வீச்சாளராகத் திகழ்பவர் பரிமேலழகர். திருக்குறளுக்கு பழைய உரைகளாக பதின்மர் உரையே சிறந்ததாகவும், அவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே முத்தாய்ப்பாக உள்ளது என்றும் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் போன்ற அறிஞர் பெருமக்கள் கூறுவர். நாகரிகம் என்ற சொல் தற்போது பண்பாட்டிலிருந்து சற்று வேறுபட்டு புற அமைப்பில், ஆடைகளில், ஆபரணங்களில், வாழக்கூடிய வாழ்க்கை முறைகளில் அதன் தாக்கம் இருக்கிறது. ஆனால், திருவள்ளுவர், கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீஸ் போன்றவர்கள் வாழ்ந்த காலத்திலும், சங்க இலக்கிய காலத்திலும், நாகரிகம் என்ற சொல் பண்பாட்டை மையப் பொருளாகக் கொண்டது. அதனால்தான் வள்ளுவ ஆசான்,""பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர்''  (580)என்ற குறளை "பண்புடைமை' என்று அதிகாரப்படுத்தி வைத்துள்ளார். சிறந்த நாகரிகத்தை (அதாவது பண்பாட்டை) விரும்புபவர்கள், விஷத்தைக் கொடுத்தால் கூட பிறர் நலனுக்காக விரும்பி உட்கொள்வார்கள். சிவபெருமான் போல - சாக்ரடீஸ் போல. இதற்கு உரை எழுதப்புகுந்த பரிமேலழகர், ""முந்தையிருந்து நட்டோர் கொடுப்பினும் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்'' எனும் தொகை நூலான நற்றிணையை (355) மேற்கோள் காட்டுவார். கடுமையான தவம் மேற்கொண்டவர்களின் திருவாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம் போன்றதாகும். அத்தகைய பெரியோர்கள் வாய்மொழி அவ்வப் பயன்களை அப்படியே பயந்துவிடும் (அதாவது நடந்துவிடும்).உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கவுந்தியடிகளின் வாக்கையும் (நரியாக சபித்தது), கொங்கணவ மகரிஷிகளின் திருக்கண் பார்வையால் (எண்ணத்தால்) பட்ட மாத்திரத்திலேயே பஸ்மமாகிய பறவையையும் கூறலாம். இவ்வாறு ஞான நிலை பெற்றவர்களின் மந்திரச் சொல் இம்மண்ணுலகில் தக்க சமயத்தில் வெளிப்படும் என்பதை வள்ளுவப் பெருந்தகை,""நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்'' (28)எனும் பொய்யாமொழிக்கு உரை எழுதப்புகுந்த பரிமேலழகர்,""நிறைமொழி மாந்தர்தம் ஆணையிற் கிளந்தமறைமொழி தானே மந்திரம் என்ப''(தொல்.செய்.178)எனும் தொல்காப்பிய இலக்கணத்தின் நூற்பாவை சுட்டிக் காட்டுவார். ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்'' என்பார் ஒüவையார். எழுத்தே இறைவன் என்றுகூடச் சொல்லலாம். இறைபொருளுக்கும் அழிவில்லை, எழுத்துக்கும் அழிவில்லை என்பதை விவிலியம் (யோவான் 1:1) கூறுகிறது.இதை சூக்கும வாக்கு என்று சைவசித்தாந்தம் கூறுகிறது. இந்த வாக்கே அழியாத எழுத்தாகும். அதனால்தான் அழியாத இறை வாக்காகிய எழுத்தை "அட்சரம்' என்று வடமொழி கூறும். "சரம்' என்ற சொல்லுக்கு அழியக்கூடியது என்று பொருள். "அ' என்ற எதிர்மறைப் பொருள் தரக்கூடிய "உபசர்க்கத்தை' சேர்க்கும்போது அழியாத என்று பொருள்படும். இந்த எழுத்துக்கு முன் எண் இருந்தது. அதாவது எண்ணம்-இதுவே வாக்கு. இந்த "எண்' கருத்தாகவும் உள்ளது. ""எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்'' என்ற ஒüவையின் வாக்கை திருவள்ளுவர் முப்பாலில், ""எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்னென்ப வாழும் உயிர்க்கு''  (392)இக்குறள் வெண்பாவுக்கு உரை எழுதும் பரிமேலழகர், கருவியும் செய்கையும் ஆகும் என்றும், மேலும் இதை நன்கு விரிவாக அறிய "ஏரம்ப' முதலிய நூல்களில் காண்க என்றும் குறிப்பிடுகிறார். எவ்வளவு செல்வம் இருந்தாலும், அது பிள்ளைச் செல்வத்துக்கு ஈடாகுமோ? அதனால்தான், மாதானுபங்கி தமது உலகப் பொதுமறையில்,""பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட் பேறுஅல்ல பிற''  (61)என்று கூறும் குறட்பாவுக்கு, ""பெண்ணொழித்து ஆணைக் குறித்து நின்றது'' என்ற பரிமேலழகர் உரை மூலமும், ""ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்'' (69)என்னும் வாயுறை வாழ்த்திற்கு, இயல்பாக பெண்ணுக்கு தம் மகனைப் பற்றிய ஆற்றலின் எடைபோடுவதில் அறிவு குறைவு என்ற பொருளிலும், பிறர் சொல்லிக் கேட்டு தனது மகனை-அறிவாற்றலை, பிறர் சொல்லி அறிந்து கொள்வதால் "கேட்ட தாய்' என்பார் உரையாசிரியர் பரிமேலழகர். அக்காலத்தின் நிலைமையை. "காலத்தின் கண்ணாடி இலக்கியம்' என்பதற்கொப்ப எடுத்துக் காட்டியிருக்கிறார் பரிமேலழகர் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்