பழ.பழனியப்பன், கவிஞர் க.அம்சப்பிரியா
கோவை செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் உமா பதிப்பகத்தாரின் அரங்கில் நுழைந்ததும் கண்ணில் தட்டுப்பட்டது ஒரு புத்தகம். கம்பன் என்று சொன்னாலே எனக்குக் கரும்பு தின்பதுபோல. அதிலும் "கம்பன் அடிசூடி' பழ.பழனியப்பன் எழுதிய "கம்ப நிதி' என்கிற புத்தகம் எனும் போது என்னை அறியாமலேயே காந்தத்தை நோக்கி இழுக்கப்படும் இரும்பாக அந்தப் புத்தகம் ஈர்த்தது. சென்னை கம்பன் கழகத்தின் செயலாளராக ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் இருந்தவர். இப்போது காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளராக இருந்து "கம்பன் அடிப்பொடி' விட்டுச்சென்ற பணிகளை தொய்வில்லாமல் தொடர்பவர். கம்பனைப் பற்றி பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருப்பவர்.கம்பனைப் பற்றிப் பேசுவதற்காகவே பழ.பழனியப்பன் பல இளம் தலைமுறைப் பேச்சாளர்களை இனங்கண்டு வாய்ப்பளித்துப் பிரபலப்படுத்தியவர். இன்று அவர்களில் பலரும் பணத்தாசையால் தங்கள் புகழை விலைபேசத் துணிந்துவிட்டனர் என்பது வேறு விஷயம். ஆனாலும் சற்றும் மனம் தளராமல், ஆண்டுதோறும் அரை டஜன் புதிய பேச்சாளர்களை இலக்கிய மேடைக்கு அறிமுகப்படுத்தும் பழனியப்பனின் அரும்பணி தொடர்கிறது.எல்லோரையும் மேடையேற்றி கம்பன் புகழ் பாடவைக்கும் "கம்பன் அடிசூடி' கம்பனைப் பற்றிப் பேச, அதைநான் கேட்கவேண்டும் என்று எனக்குக் கடந்த சில மாதங்களாகவே இரகசிய ஆவல். ஏனைய கம்பன் கழகத்தார் யாராவது இவரை அழைப்பாளர்களா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் நான்.பேசித்தான் கேட்கவில்லை - படித்துத்தான் பார்ப்போமே என்று "கம்ப நிதி'யைப் புரட்டத் தொடங்கினால், குகைக்குள் நுழைந்தபோது அலிபாபாவுக்கு ஏற்பட்ட பிரமிப்பும், அளப்பரிய ஆனந்தமும் எனக்குள் ஏற்பட்டது.கம்பராமாயணம் திருமுடிசூட்டுப்படலம் 38வது பாடல், தாங்குதல், ஏந்துதல், களித்தல், பற்றுதல், ஓங்குதல், கொடுத்தல், புனைதல் ஆகிய ஏழு செயல்களை அனுமன், அங்கதன், பரதன், இலக்குவ சத்துருக்கனர், சீதாப்பிராட்டியார், சடையப்பர் மரபினோர், வசிட்டர் ஆகிய எண்மர் செய்வதைக் குறிப்பிடுகிறது.ஒரு அரசு அமைகிறபோதே, அதன் அங்கங்கள் குற்றமற்றவை என்று காட்டினால்தானே, அவ்வரசாட்சி குற்றமற்றதாக நடைபெறும் என்பதற்கு கட்டியம் கூறும் என்பது கம்பநாடன் கருத்து என்று பழனியப்பன் சுட்டிக்காட்டியிருப்பது பளிச்சென்று பதிகிறது.எட்டு அற்புதமான கம்பகாவியம் பற்றிய கருத்துக் கண்ணோட்டமும், "கம்ப நிதி' என்கிற பொதுத் தலைப்பில் ஒன்பது கட்டுரைகளும்... அடடா... பழ.பழனியப்பன் கம்பனைப் பற்றிப் பேசிக் கேட்கவேண்டும் என்கிற ஆவல் மேலும் அதிகரிக்கிறதே...********ஒருசில ஒப்பற்ற தலைவர்களின் பங்களிப்பு முழுமையாக வெளியில் தெரியாமல் போய்விடுகிறது. மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முக்கிய காரணகர்த்தா சி.பி.ராமசாமி ஐயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதேபோல, தீரர் சத்தியமூர்த்தி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. போன்றவர்களின் பங்களிப்புகளும் உரிய அங்கீகாரம் பெறவில்லை என்பதுதான் உண்மை. இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய இன்னொரு தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி.யை சைவ வெள்ளாளராகவும், பெருந்தலைவர் காமராஜை நாடாராகவும், அறிஞர் அண்ணாவை முதலியாராகவும் ஜாதிக் கூண்டில் அடைக்க முற்படும் அவலம் அரங்கேறி வருகிறது. இந்த மாபெரும் தவறால் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது "பசும்பொன்' தேவரின் புகழ்தான் என்பது வருத்தத்துக்குரிய உண்மை.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தந்தையார் ஒரு மிகப்பெரிய ஜமீன்தார். ஏகப்பட்ட நிலபுலன்கள். 19 வயதே நிரம்பிய முத்துராமலிங்கம் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றுக்கு சில ஆவணங்களைக் கொடுப்பதற்காக சென்னை வந்திருந்தார். அவர் வந்தது சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்து கொண்டிருந்த நேரம்.1927-இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சென்னை வந்திருந்தார். பிரபல காங்கிரஸ்காரராக இருந்த தேவரின் குடும்ப வழக்கறிஞர் ஸ்ரீநிவாச ஐயங்காரின் வேண்டுகோளுக்கு இணங்க, விருந்தினராக வந்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸýக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பு தேவருக்குக் கிடைத்தது. அன்று அவர்களிடம் ஏற்பட்ட நட்பு குரு-சிஷ்ய மனோபாவம் கடைசிவரை தொடர்ந்தது என்பதுதான் சரித்திரம்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றிய முழுமையான விவரங்கள் தெரிந்தவர்கள் ஒருசிலரே. சில மறைக்கப்பட்டன. பல மறக்கடிக்கப்பட்டன. அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம், இலக்கியம் என்று தேவரின் ஆளுமை விரிந்து பரந்தது மட்டுமல்ல, ஆழங்கால் பட்டதும்கூட.தமிழக சட்டப் பேரவையில் அவர் ஆற்றிய உரைகளும், அவர் எழுப்பிய கேள்விகளும் நாடாளுமன்ற இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாய் மேற்கோள் காட்டப்பட வேண்டியவை. பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் ஒருங்கே அமையப்பெற்றதுடன் ஒரு துறவிபோன்று தன்னை முழுமையாக சமுதாயப் பணிக்கு அர்ப்பணித்துக்கொண்ட மாமனிதர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்பது வெளியில் தெரியாமல் போனதற்கு முக்கியமான காரணம் அவருக்குப் பூசப்பட்ட ஜாதி முலாம்தான் என்று தோன்றுகிறது.ஆர்.சக்திமோகன் நடத்திவந்த "கண்ணகி' இதழில் "பசும்பொன்' தேவர் எழுதிய கட்டுரைகள் கே.ஜீவபாரதியால் தொகுக்கப்பட்டு, "பசும்பொன் தேவரின் கட்டுரைகள்' என்கிற பெயரில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. அதில் தேவர் எழுதி இருக்கும் கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்தாலே நாம் அதிர்ந்துவிடுவோம், பசும்பொன் தேவருக்கு இத்தனை பரிமாணங்களா என்று."பரிசுத்த வள்ளல் தியாகி வ.உ.சி.', "கிழக்காசியாவும் வருங்காலமும்', "காஷ்மீரில் மூன்று பாகிஸ்தான்', "பாகிஸ்தான் கேட்டவனும் முட்டாள், கொடுத்தவனும் முட்டாள்', "வட அட்லாண்டிக் மாநாடு', "பணவீக்கமும் உணவுக் கொடுமையும்', "ஜெனிவா மாநாடும் மத்தியக் கிழக்கும்', "மாசேதுங்கின் மாஸ்கோ பயணம்' என்று பல கட்டுரைகள். போதாக்குறைக்கு பசும்பொன் தேவரின் நேதாஜி பற்றிய ஒரு பேட்டியும் இந்தப் புத்தகத்தில் இடம்பெறுகிறது.இப்படி ஒரு புத்தகத்தைத் தொகுத்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்தியதற்கு ஜீவபாரதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழகத்தின் முதல்வராக இருப்பதற்கான எல்லாத் தகுதிகளும் இருந்த மாமனிதர் பசும்பொன் தேவர் என்பதை ஜாதிக் கண்ணாடியை அகற்றிவிட்டு பார்த்தால் மட்டுமே புரியும்!********கவிஞர் க.அம்சப்பிரியா ஒரு பள்ளி ஆசிரியர். இலக்கிய ஆர்வம் இவரை ஒரு சிற்றிதழ் நடத்த வைத்திருக்கிறது. கவிதைகளை எழுதிக் குவிக்கிறார் இந்தப் பொள்ளாச்சிக்காரர்.சமீபத்தில் "இரவுக் காகங்களின் பகல்' என்கிற இவரது கவிதை நூலைப் படிக்க நேர்ந்தது. அதிலிருந்து ஒரு கவிதை-நீச்சல் குளத்துச் சிறுமிதவறிப் போனஆற்றின் பேரழகை -புறக்கணிக்கப்பட்டகிணற்றின் சுடர்மிகு ஆழத்தைமறுக்கப்பட்டகுளத்தின் பெரும் அமைதியைதேடித் தேடி நீந்துகிறாள்சுற்றுலாத் தலத்தின்செயற்கை நீச்சல் தொட்டியில்சிறகுகளைக் குறுக்கியபடிஅச் சிறுமியொருத்தி!
கருத்துக்கள்