Skip to main content

தமிழ்நாடும் மொழியும் 44 : சீர்திருத்தம்- அ.திருமலைமுத்துசாமி

 




(தமிழ்நாடும் மொழியும் 43 : . தமிழ் நெடுங்கணக்கும் பிறவும் – தொடர்ச்சி)

சீர்திருத்தம்

தமிழ் நெடுங்கணக்கு இத்தனை மாற்றங்களைப் பெற்ற போதிலும், இன்னும் முழுமையான உருவைப் பெறவில்லை. அதில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் சில உள. இன்று தமிழ் நெடுங்கணக்கிலே சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று கூறுவோரை இருவகைப்படுத்தலாம். தமிழையும், அதன் எழுத்தையும் சிதைக்கவேண்டும் என்ற தீய எண்ணத்தோடு ஒரு சாரார் தமிழ் நெடுங்கணக்கிலே திருத்தம் வேண்டும் என்கின்றனர். தமிழ் நெடுங்கணக்கு மேலும் அழகும் எளிமையும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே சிலர் சீர்திருத்தம் வேண்டும் என்கின்றனர்.

உயிர் எழுத்துகள்

உயிர் எழுத்துகளிலே இகர நெடில் தவிர, ஏனைய வற்றின் நெடில் எல்லாம் குறிலின் வடிவத்தையே பெற்றுள்ளன. இகரத்தின் நெடில் மட்டும் வேறு வடிவம் ஒன்றைப்பெற்றுள்ளது. அதனால் நெடுங்கணக்குப் படிப்புக்குத் தடங்கல் ஏற்படும். எனவே ஏனைய நெடில்களைப் போலவே இகரநெடிலையும்

” “



என்று திருத்தி விடலாம்.அடுத்து ஐ, ஒள என்ற இரண்டு கூட்டொலி எழுத்துக்கள் உள. இவற்றிலே ஒள என்பதைச் சிலர் இரண்டு எழுத்துகளாக-உயிரும் உயிர்மெய்யுமாகக் கருதி ஒ, ள, என்று ஒலிக்கின்றனர். எனவே ஒள என்ற எழுத்தை அவ் என்று எழுதிவிடலாம் ஐ என்பதைச் சிலர் அய் என்றெழுதலாம் என்கின்றனர். அது அவ்வளவு பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. ஏன்? தையல் என்பதைத் தய்யல் என்று எழுதும்போதும், படையல் என்பதைப் படய்யல் என்றெழுதும்போதும் படிப்பார் அவ்ற்றை உரிய ஒலியோடு ஒலிப்பதில்லை.

அ என்ற எழுத்தின் நெடிலை, ஆ என்றெழுத வேண்டியதில்லை;


என்றெழுதலாம்.

உ கரத்தின் நெடிலை ஊ’ என்றெழுதாமல்



என்றெழுதலாம். எ கரத்தின் நெடிலை



என்றெழுதலாம். ஐ என்பதைனை



என்றெழுதலாம்.

” அ, இ, உ, எ, ஏ, ஒ, ஓ, ஒ ஒ, ஓ, ஐ, அவ் ” என்றிவ்வாறு உயிரெழுத்துக்கள் சீர்திருத்தம் பெறலாம்.

மெய்யெழுத்துகள்

மெய்யெழுத்துகளிலே விரைவிற் சீர்திருத்தம் பெற வேண்டிய எழுத்துகள் கை கெள, முதலிய உயிர்மெய் கவ் (க் – அவ்) என்றும் ஐ காரமும், ஒள காரமும் ஆம்.

இன்னும் சில சீர்திருத்தங்கள் தமிழின் நெடுங்கணக்கிலே கொள்ளல் ஏற்புடைத்தாம். சீர்திருத்தம் செய்வார் மிகவும் மெதுவாக நன்கு ஆராய்ந்து அறிந்து விரைவின்றிச் சீர்திருத்தம் மேற்கொள்ளல் வேண்டும். ஆத்திரமும், அவசரமும் கொண்டால் பெருங்குழப்பமும் வீண் துன்பமும் ஏற்படும்.

திணைபால் பாகுபாட்டின் சிறப்பு

பிறமொழிகளுக்கு, குறிப்பாக வடமொழிக்கு இல்லாத சிறப்புகள் பல தமிழுக்குண்டு அவற்றுள் திணை, பால் பாகுபாடு ஒன்றாகும். இப்பாகுபாடுகள் பிறமொழிகளிலே அறவே இல்லை என்பதன்று பொருள். அவற்றிலும் இருக்கின்றன. ஆனால் சிறந்த முறையில் இல்லை; அவ்வளவே. தமிழிலே திணை, பால் பாகுபாடு சிறந்த முறையில் உள்ளது. திணை, பால் பாகுபாட்டிற்குத் தமிழைப் பொறுத்தவரையில் பொருளே அடிப்படை. வடமொழியிலோ சொல்லமைப்பே அடிப்படை, பொருளுக்காகச் சொல்லா? சொல்லுக்காகப் பொருளா? இதிலிருந்து விளங்கும் வடமொழித்திணை, பால் பாகுபாட்டின் பொருந்தாமையும், தமிழ்த் திணை, பால் பாகுபாட்டின் சிறப்பும். தமிழிலே திணை உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும். ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலர்பால் என்பது பால் வேறுபாடு. இத் திணை, பால் பாகுபாடு எழுவாயில் மட்டுமல்ல, பயனிலையிலும் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. ஒரு பயனிலையை மட்டும் கொண்டு ஆங்கில மொழியிலே எழுவாய் எத்திணையைச் சேர்ந்தது என்றோ. எப்பாலினைச் சேர்ந்தது என்றோ காணல் முடியாது. ஆனால் தமிழிலோ வினைச் சொல் பயனிலையாக வருமாயின், செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் என்ற ஆறு கூறுகளையும் நாம் கண்டுபிடித்துவிடலாம்.

எடுத்துக்காட்டு: வெட்டினான்.

இத்துணைச் சிறப்புக்கள் பிறமொழிகளில் பெரும்பாலும் கிடையா. இத்திணைப் பாகுபாடு பற்றிக் காலுடுவெல் கூறுவதாவது:-

“திராவிட மொழிகளின் திணைப் பாகுபாடு இந்திய ஐரோப்பிய மொழிகளிலும், செமிடிக் மொழிகளிலும் உள்ள பாகுபாடு போன்று கற்பனையால் ஆகியதன்று; சிறந்த தத்துவ உணர்வால் ஆகியது என்பது தெளிவு. பகுத்தறிவு உடையவை, பகுத்தறிவு இல்லாதவை என்ற பிரிவு சிறப்பும் இன்றியமையாமையும் உடையதன்றோ?” உயர்திணையில் மட்டும் ஆண்பால், பெண்பால் என்று பிரிவினை செய்த தமிழர்கள், அஃறிணையில் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று ஒருவர் வினவலாம். வினாச் சரியே. அஃறிணையிலே உயிருள்ளனவும் உயிர் இல்லனவும் சேர்க்கப்பட்டுள்ளன. உயிரற்றனவற்றிலே ஆண், பெண் வேற்றுமை அறவே கிடையாது. உயிருள்ளனவற்றிலே ஒருசிலவே ஆண், பெண் வேற்றுமையுடையன. இலக்கணம் பொதுவாகப் பெரும்பான்மை பற்றியதாகும். எனவே தான் பண்டைத் தமிழ்ப் புலவர்கள், உயர்திணைக்கு ஆண், பெண் வேறுபாடு கற்பித்து, அஃறிணைக்கு அவ்வேறுபாடு கற்பியாது விட்டுவிட்டனர். இதுகாறும் கூறியவற்றால் தமிழின் கண் விளங்கும் திணை, பால் பாகுபாடு பகுத்தறிவின் அடிப்படையில் எழுந்தது என்பதும், பிறவற்றில் அவ்வடிப்படையில்லை என்பதும் விளங்கும்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்