Skip to main content

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):37 – தேவும் தலமும் தொடர்ச்சி

 





(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 36 – தேவும் தலமும் தொடர்ச்சி)

தேவும் தலமும் தொடர்ச்சி

தலையாலங்காடு

   தேவாரப் பாமாலை பெற்ற தலையாலங்காடு தென்னிந்திய வரலாற்றிலும் பெயர் பெற்ற ஊராகும். அது சங்க இலக்கியங்களில் தலையாலங்கானம் என்று குறிக்கப் படுகின்றது. அப் பதியில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும், ஏனைய
தமிழ் வேந்தர் இருவருக்கும் கடும்போர் நிகழ்ந்ததென்றும், அப்போரில் பாண்டியன் பெற்ற வெற்றியின் காரணமாகத் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் என்னும் பட்டம் பெற்றான் என்றும் பண்டைய இலக்கியம் கூறும். இத்தகைய ஆலங்காட்டைத் திருநாவுக்கரசர் பாடியருளினார்.16
 

சாய்க்காடு

     புலவர் பாடும் புகழுடைய பூம்புகார் நகரத்தைச் சார்ந்தது திருச்சாய்க் காடாகும். தேவாரத்தில் பூம்புகார்ச் சாய்க்காடு என்றும், காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காடு என்றும், அப்பதி குறிக்கப்படுகின்றது.17  இக் காலத்தில் சாயா வனம் என்பது அதன் பெயர்.18
 

திருக்கொள்ளிக்காடு

    திருநெல்லிக்காவுக்குத் தென் மேற்கேயுள்ளது கொள்ளிக்காடு. அப்
பதியைப் பாடி யருளிய திருஞானசம்பந்தர்,

           “வெஞ்சின மருப்போடு விரைய வந்தடை
           குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே”
 

என்று ஒரு பாசுரத்திற் குறித்தமையால் ‘கரியுரித்த நாயனார் கோவில்’ என்னும் பெயர் அதற்கு அமைவதாயிற்று. இப்பொழுது அவ்வூர் தெற்குக்காடு என வழங்கும்.19
 

திருவாலங்காடு

     தொண்டை நாட்டுப் பழம் பதிகளுள் ஒன்று திரு ஆலங்காடு. அது
பழையனூரை அடுத்திருத்தலால் பழையனூர் ஆலங்காடு என்று தேவாரத்திற் குறிக்க பெற்றுள்ளது.20 அது தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்தில் அமைந்த ஊர் என்று சாசனம் கூறும். மூவர் பாமாலையும் பெற்ற அம் மூதூர் காரைக்கால் அம்மையார் சிவப்பேறு பெற்ற பெருமையும் உடையதாகும்.
 

பனங்காடு

    பழங்காலத்தில் தொண்டை மண்டலத்துக் கலியூர்க்கோட்டத்தைச் சேர்ந்த கழுமல நாட்டில் பனங்காடு என்னும் பதி அமைந்திருந்த தென்று சாசனம் கூறும்.21 பனங் காட்டின் இடையே பரமன் கோயில் காண்டமையால் பனங்காட்டூர் என்பது அவ்வூரின் பெயராயிற்று.22 அப்பதியில் அமர்ந்த பெருமானை,

            “பாட்டூர் பலரும் பரவப் படுவாய்
            பனங்காட் டூரானே
            மாட்டூர் அறவா மறவா துன்னைப்
            படப் பணியாயே”

என்று சுந்தரர் பாடியுள்ளார். இக் காலத்தில் வட ஆர்க்காட்டுச் செய்யார் வட்டத்தில் உள்ளது திருப்பனங்காடு.
 

திருவெண்காடு

    மற்றொரு பனங்காட்டூரும் தேவாரப் பாடல் பெற்றதாகும். விழுப்புரத்திற்கு வடக்கே ஐந்து கல் அளவிலுள்ள பனையபுரம் என்னும் ஊரும் பனங்காட்டூர் என்பர். இப்பகுதியைப் பாடியருளிய திருஞானசம்பந்தர், “புறவார் பனங்காட்டூர்” என்று பாசுரந்தொறும் குறித்தலால், அதுவே அதன் முழுப் பெயர் என்று கொள்ளலாகும்.23

மூவர் தேவாரமும் பெற்றுள்ள மூதூர்களில் ஒன்று திருவெண்காடு. வடமொழியில் அது சுவேதவனம் எனப்படும். ‘வேலைசூழ் வெண்காடு’ என்று தேவாரம் பாடுதலால் அத் தலம் கடலருகேயமைந்த காடு என்பது இனிது விளங்கும்.24 சுவேதகேது என்னும் மறையவன் ஈசனை வழிபட்டுக் காலனைக் கடந்த இடம் திருவெண்காடு என்பர்.25 அங்குள்ள முக்குளம் என்னும் தடாகமும் தேவாரத்தில் போற்றப்படுகின்றது.
 

திருவேற்காடு

    சென்னைக்கு அணித்ததாக வுள்ள காடுவெட்டியாற்றின் கரையில் அமைந்துள்ளது திருவேற்காடு. அறுபத்து மூன்று திருத்தொண்டர்களுள் ஒருவராகிய மூர்க்க நாயனார் பிறந்தருளிய அப் பதி திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றுள்ளது.
 

திருக்காரைக்காடு

    இன்னும், காஞ்சி மாநகரின் ஒருசார், காரைச் செடிகள் நிறைந்த கானகத்தில் ஒரு நறுமலர்ப் பொய்கையின் அருகே ஈசன் திருக்கோயில் எழுந்தது.
         “தேர்ஊரும் நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
        நீர்ஊரும் மலர்ப்பொய்கை நெரிக்காரைக் காட்டாரே”
 
என்ற தேவாரத் திருப்பாட்டில், அந் நகர வீதியின் அழகும், நன்னீர்ப் பொய்கையின் நீர்மையும் நன்கு காட்டப்பட்டுள்ளன. அப் பொய்கை இப்பொழுது வேப்பங்குளம் என்னும் பெயரோடு திருக்கோயிலுக்குத் தெற்கே நின்று நிலவுகின்றது.26  

ஆலம் பொழில்

   ஆல மரங்கள் நிறைந்த சோலையும் அரனார்க்கு உறைவிடமாயிற்று. ன்பரம்பைக்குடி என்னும் ஊரின் அருகே நின்ற ஆலம் பொழிலில் அமர்ந்தருளிய ஈசனைப் பாடினார் திருநாவுக்கரசர்.
        “திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய
        திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே”
என்பது அவர் திருவாக்கு. ஆலமர் கடவுளாகிய ஈசன் அமர்ந்தருளும்
ஆலந் துறைகளும், ஆலக் கோயில்களும் பிறவும் பின்னர்க் கூறப்படும்.
 

முல்லை வனம்
    முல்லைக் கொடிகள் செழித்துத் தழைத்து நறுமலர் ஈன்ற பதிகளுள் ஒன்று திருக் கருகாவூர். செம் பொருளாகிய சிவ பெருமான் அம்முல்லை வனத்தில் எழுந்தருளிய கோலத்தை,
          “கடிகொள் முல்லை கமழும் கருகா வூர்எம்
          அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே”
என்று பாடினார் திருஞான சம்பந்தர். இன்றும் அவர் முல்லை வனநாதர் என்றே அழைக்கப்படுகின்றார்.

   (தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

                  

அடிக் குறிப்பு

16.    “தடங்கடலைத் தலையாலங் காடன் தன்னை
      சாராதே சாலநாள் போக்கினேனே”

என்பது அவர் பாட்டு – தலையாலங்காட்டுத் திருத்தாண்டகம், 6.

17.   “விண்புகார் எனவேண்டா வெண்மாட நெடுவீதித்
     தண்புகார்ச் சாய்க்காட்டெம் தலைவன்தாள் சார்ந்தாரே”
     “மொட்டலர்ந்த தடந்தாழை முருகுயிர்க்கும் காவிரிப்பூம்
     பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே”
                       -திருச்சாய்க்காட்டுப் பதிகம், 1, 4.

18. சாயாவனம் பூம்புகார் நகரைச் சேர்ந்த தென்று சாசனமும் கூறும். 269 of 1911.

19. தஞ்சை நாட்டுத் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ளது. (M.E.R., 1935-36.)

20. ‘பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே’ -திருஞானசம்பந்தர் தேவாரம்.

    இப்பொழுது காணப்படுவதுபோலவே முன்னாளிலும் பழையனூரும் ஆலங்காடும்தனித்தனித் தலங்களாக விளங்கின போலும். அதனாலேயே சுந்தரர், “பழையனூர் மேயஅத்தன் ஆலங்காடன்” எனப் பிரித்துரைத்துப் போந்தார்; திருநாவுக்கரசர் வாக்கும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது.

  “பழனைப் பதியா வுடையார் தாமே
   செல்லு நெறிகாட்ட வல்லார் தாமே
   திருவாலங் காடுறையும் செல்வர் தாமே”

என்பது அவர் தேவாரம். இந் நாளில் பழையனூர், திருவாலங்காட்டுக்குத்
தென்கிழக்கே முக்கால் மைல் தூரத்தில் உள்ளது.

21. 235 / 1906.

22. அங்கமைந்த பனைமரங்கள் சோழ மன்னர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டன என்பது கல்வெட்டுகளால் தெரிகின்றது. பச்சைப் பனைகளை வெட்டுவோர் தண்டனைக்கு ஆளாவர் என்ற அரசன் ஆணை திருப்பனங்காடுடையார் ஆலயத்துக்கு முன்னுள்ள மண்டபத்தில் எழுதப்பட்டுள்ளது. 246 / 1906.

23. ‘பங்கயம் மலரும் புறவார் காட்டூர்’, ‘பைந் தண்ணாழல்கள் சூழ் புறவார் பனங்காட்டூர்’ முதலிய தொடர்கள் பதினொரு பாட்டிலும் வருதல் காண்க-
திருப்புறவார் பனங்காட்டூர்ப் பதிகம்.

    ஒவ்வொரு சித்திரைத் திங்களிலும், முதல் வார மழுமையும் காலைக்
கதிரவன் ஒளி அக்கோயிலில் உள்ள மூர்த்தியின்மீது வீசும் என்பர்.

24. சுந்தரர்-திருவெண்காட்டுப் பதிகம்.

25.  ‘வேலிமலி தண்கானல் வெண்காட்டின் திருவடிக்கீழ்
    மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறைய வன்தன்
    மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
    ஆலமிடற் றான் அடியார் என்றடர அஞ்சுவரே”
         -திருஞானசம்பந்தர், திருவெண்காட்டுப் பதிகம் 7.

26. திருக்காரை யீசுரன் கோயில் என்பது திருக்காலீசுரன் கோயில் என
மருவியுள்ளது. காரைக்காடு திருக்காலிக்காடு என வழங்கும்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்