Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 41 : பழந்தமிழும் தமிழரும்

 








(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 40 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி)

10. பழந்தமிழும் தமிழரும்

 மக்களைப் பிரிவுபடுத்துகின்றவற்றுள் மொழியே பிறப்பொடு வந்து இறப்பொடு செல்வதாகும். ஏனைச் சமயமும் சாதியும் நிறமும் பொருள் நிலையும் பதவியும் இடையில் மாற்றத்திற்குரியன. உலகில் உள்ள மக்கட் கூட்டத்தினருள் பெரும் பகுதியினர் மொழியாலேயே வேறு படுத்தப்பட்டு அழைக்கப்படுகின்றனர். மொழியால் மக்களினம் பெயர் பெற்றதா? மக்களினத்தால் மொழி பெயர் பெற்றதா? எனின், தமிழர்களைப் பொறுத்தவரை மொழியால்தான் மக்களினம் பெயர் பெற்றுள்ளது. தமிழ்மொழிக்குரியவர் ஆதலின் தமிழர் எனப்பட்டனர். தமிழ் என்றாலும் தமிழர் என்ற பொருள் உண்டு. பழந்தமிழ் பற்றி அறிந்த நாம் பழந்தமிழர் பற்றியும் அறிதல் இன்றியமையாதது. தமிழின் உயர்வே, தமிழர் உயர்வு; தமிழர் உயர்வே, தமிழின் உயர்வு. மக்கள் உயர்ந்தால் மொழி உயரும். மொழி உயர்ந்தால் மக்கள் உயர்வர்.1

+++

.1. So intimate is the relation  between a  language and the people who speak  it  that the two can searcely be thought of apart; A language lives only so long as there are people who speak it and use it as their native tongue and its greatness is only that given to it by these pople. A language is important because the people who speak it are important – Politically, economically, socially, culturally.

– A History of English Language – Page  2

. . . . . the most valuable service rendered by the study of language at least from the point of view of general culture, is the light with such study casts on the history of a people  and on their spritiual mental and materal civilisations.

– Foundation of Languge : Page 10

+++

வரலாறு பெற்றிலாத மக்களைப்பற்றித் தெரிதற்கு அவர்களுடைய இலக்கியமும் மொழியும் துணை செய்யும்.

  பழந்தமிழர்களைப் பற்றிய வரலாறு நமக்குக் கிடைத்திலது. ஆதலின், அவர்களுடைய இலக்கியம், மொழி ஆகியவற்றின் துணைகொண்டு அவர்களுடைய வரலாற்றை அறிய முற்படுவோம்.

  ஆரியர் வருவதற்கு முன்  தமிழர் நிலை எவ்வாறு இருந்தது என்று அறிவதற்கு அறிஞர் காலுடுவல் அவர்கள் தமிழின் துணையை நாடியுள்ளார். அவர் கூறுகின்றார்:

 வரலாறு உணரலாகாப் பழங்காலத் திராவிட மக்கள் நாகரிகமறியா இழிநிலைபெற்ற மக்களாக வாழ்ந்திருந்தவராகத் தெரியவில்லை. காடுகளில் வாழ்ந்திருந்த பழங்குடியினரின் நிலை யாதேயாயினும், திராவிடர் என்ற சிறப்புப் பெயரிட்டு அழைக்கப் பெற்ற மக்கள் ஆரியர்கள் தங்களிடையே வந்து வாழத் தொடங்குவதற்கு முற்பட்ட காலத்திலேயே, நாகரிக வாழ்வில் அடியிட்டிருந்தனர் என்பதில் ஐயம் இல்லை.

 தமிழ்மொழியிலிருந்து சமசுகிருதச் சொற்களை அறவே நீக்கிவிட்டு நோக்கினால், எஞ்சி நிற்கும் பழம்பெரும் சிறப்பு வாய்ந்த திராவிடச் சொற்களை, ஆரியக் கலப்பற்ற திராவிட நாகரிக வாழ்க்கை முறைகளை விளங்க உணர்த்தவல்ல உயிர் ஓவியம் ஒன்றை வனப்புற வரைந்து காட்டும். அம் மொழியின் பழம்பெரும் சொல்லுருவங்கள், சமசுகிருதத் தளைகளினின்றும் விடுபட்ட நிலையில் விளங்கி நிற்கும் பண்டைத் தமிழரின் மனவளம், வாழ்க்கை வளம், வழிபாட்டு வளம் ஆகியவற்றை மட்டும் ஈண்டுச் சுட்டிச் சொல்ல விரும்புகின்றேன்.

  இவ்வாறு கூறிவிட்டு, அரண், கோ, கோன், விழா, இசை, பாணர், எழுத்தாணி, எழுத்து, நூல், கோயில், அறநூல், ஒப்புரவு, மணம், மருந்து, சிற்றூர், பெருநகரம், திமில், கட்டுமரம், கலம், நாவாய், உழவு, போர், வில், கணை, வேல், வாள்,  நூல், நூற்றல், நெய்தல், வண்ணம், ஊட்டல், கல்லறை, கலங்கள், வனைதல் ஆகிய சொற்களைக் கொண்டு அவற்றால் அறியப்படும் நாகரிகம் இது வென அறிவிக்கின்றார்.

  தமிழ்ச்சொற்களிலிருந்து அறியலாகும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட திராவிட மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய இவ் விளக்கங்கள், நாகரிக வாழ்க்கையில் இன்றியமையாச் சிறப்பியல்புகள் அத் திராவிடரிடையே அத்துணைப் பழங்காலத்திலேயே நிலவி  இருந்தன என்பதை நிலைநாட்டப் போதியனவாகும் என்று இயம்புகின்றார்.

  அறிஞர் காலுடுவல் தொல்காப்பியத்தை அறியார்; தொல்காப்பியத்திற்கு முன்பு தோன்றியுள்ள இலக்கியங்களை அறியார். ஆதலின் தமிழ்ச்சொற்களைக் கொண்டு அறியலாகும் நாகரிகக் குறிப்பினை எடுத்துக் காட்டினார். நாம் இன்று தொல்காப்பியத்தை அறிந்துள்ளோம்.  அஃது ஆரியர் தமிழகத்திற்கு வந்து குடியேறத் தொடங்கிய காலத்தில் இயற்றப்பட்டது என்று வரையறுத்துக் கூற இயலுகின்றது. வரலாற்றாசிரியர்கள் முடிபுக்கேற்ப அக்காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு அளவில் இருக்கலாம் என்று கணித்தறிய முடிகின்றது. கிடைத்துள்ள சங்க இலக்கியத் தொகுப்பினுள் ஆரியர் வருகைக்கு முன்னர் இயற்றப்பட்ட இலக்கியப் பாடல்களும் அடங்கியுள்ளன என்று அறிந்து அவற்றைப் பிரித்தறியவும் கூடுகின்றது. ஆதலின் பழந்தமிழரின் வரலாறு அறிவதற்குப் பழந்தமிழ்ச் சொற்களை மட்டும் நாடாமல், அவை உயிருடன் வாழத் துணைசெய்யும் இலக்கியத்தையும் கருவியாகக் கொள்ளலாம்.

 ஆரியர் வருகைக்கு முன்பு இயற்றப்பட்ட இலக்கியங்கள் அத்துணையும் நமக்குக் கிடைத்தில. கிடைத்துள்ள இலக்கியங்களிலிருந்து அறிவியல், வரலாற்று முறையில் ஆராய்ந்து எடுக்கப்பட்டனவே இவை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப்படுவனவற்றுள் அடங்கிய பாடல்கள் (2381) ஈராயிரத்து முந்நூற்று எண்பத்தொன்றாகும். இவற்றுள் ஏறக்குறைய ஒரு எண்ணூற்றுக்குக் (800)க்குறையாத பாடல்கள் ஆரியர் வருகைக்கு முன்னரும், தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரும் இயற்றப்பட்டனவாய் இருக்கலாம் என்று கருதக்கூடிய நிலையில் உள்ளன. இவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்களை முந்திய இயலில் தந்துள்ளோம். இவற்றையும் தொல்காப்பியத்தையும் ஒப்பிட்டு ஆராய்கின்றபோது இவை தொல்காப்பியத்திற்கு முற்பட்டன என்பதும் இவற்றையும் இவை போன்ற பிறவற்றையும் அடிப்படையாகக்கொண்டே தொல்காப்பியர் தம் இலக்கணத்தை இயற்றியுள்ளார் என்பதும் தெள்ளிதின் விளங்கா நிற்கும். பனம்பாரனார் தம் பாயிரத்தில் முந்து நூல் என்று குறிப்பிட்டிருப்பது இவற்றையே சுட்டுமன்றி வையாபுரிப்பிள்ளை கருதுவது போல் வடமொழி நூல்களைச் சுட்டாது. ஆதலின், கிடைத்துள்ள இவற்றின் துணைகொண்டு பழந்தமிழர் பண்பாட்டு நாகரிகச் சிறப்பினை அறிய முற்படுவோம்.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்