Skip to main content

ஊரும் பேரும் 40 : இரா.பி.சேது(ப்பிள்ளை): ஆறும் குளமும்

 




(ஊரும் பேரும் 39 : மலையும்குன்றும் – தொடர்ச்சி)

ஆறும் குளமும்

     ஆண்டவன் கோயில் கொண்டுள்ள ஆற்றுப் பதிகளை ஒரு பாட்டிலே

அடுக்கிக் கூறினார் திருநாவுக்கரசர்.

      “நள்ளாறும் பழையாறும் கோட்டாற் றோடு

      நலந்திகழும் நாலாறும் திருவையாறும்

     தெள்ளாறும்”

என்று அப் பெரியார் எடுத்த திருப்பாசுரத்தில் ஆறு பதிகள்

குறிக்கப்படுகின்றன. அவற்றின் தன்மையை முறையாகக் காண்போம்.

திருநள்ளாறு

     காரைக்காலுக்கு அண்மையில் உள்ளது திரு நள்ளாறு. நளன் என்னும்

மன்னவன் ஈசனை வழிபட்டுக் கலி நீங்கப் பெற்ற இடம் நள்ளாறென்பர்.

      “வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி

      நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய் நள்ளாறே

என்பது தேவாரம். அதனால் சனி வழிபாடு அங்கு சிறப்புற

நடைபெறுகின்றது.

பழையாறு

     முன்னாளில் பல்லாற்றானும் சிறப்புற்று விளங்கிய பதிகளுள் ஒன்று பழையாறாகும். சோழ நாட்டு அரசுரிமை யேற்கும் மன்னர், மகுடாபிசேகம் செய்து கொள்ளுதற்குரிய சிறந்த நகரங்களுள் பழையாறும் ஒன்றென்று சேக்கிழார் கூறுதலால் அதன் சீர்மை விளங்கும்.1 பிற்காலத்தில் முடிகொண்ட சோழபுரம் என்னும் பெயர் அதற்கு அமைந்தது.2 முடிகொண்டான் என்ற ஆற்றின் கரையில் கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது அப்பதி.  கோட்டாறு

   திருநள்ளாற்றுக்கு அணித்தாக உள்ளது கோட்டாறு. “தேனமரும் மலர்ச்சோலை திருக் கோட்டாறு” என்று திருஞானசம்பந்தர் பாடியிருத்தலால் அப் பதியின் செழுமை இனிது விளங்கும்.4

திருவையாறு

     தஞ்சாவூருக்கு வடக்கே ஏழு மைல் அளவில் உள்ள பழம்பதி திருவையாறாகும். பஞ்சநதம் என்னும் வடமொழிப் பெயரும் அதற்குண்டு.5 தேவாரம் பாடிய மூவரும் திருவையாற்றைப் போற்றியுள்ளார்கள். சஞ்சலம் வந்தடைந்த பொழுது “அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில்” திரு ஐயாறு என்றார் திருஞான சம்பந்தர். “செல்வாய செல்வம் தருவாய் நீயே, திருவையா றகலாத செம்பொற் சோதீ” என்று போற்றினார் திருநாவுக்கரசர். “அழகார் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகளோ” என்றழைத்துத் தொழுதார் சுந்தரர். காவிரிக் கோட்டம் என்று விதந்துரைக்கப் பெற்றதனாலும் ஐயாற்றின் பெருமை விளங்குவதாகும்.6

தெள்ளாறு

      வட ஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்தில் தெள்ளாறு என்னும் ஊர்உள்ளது. பல்லவ மன்னனாகிய நந்திவர்மன் காலத்தில் தெள்ளாற்றில் நிகழ்ந்த பெரும் போர் நந்திக் கலம்பகத்தில் பாராட்டப்பட்டுள்ளது.

பாண்டியனது பெருஞ் சேனையைத் தெள்ளாற்றில் வென்றுயர்ந்தபல்லவன் பாட்டுடைத் தலைவனாயினான்; தெள்ளாறெறிந்த நந்தி என்று புகழப்பெற்றான்; இங்ஙனம் பல்லவ   சரித்திரத்திலும், நந்திக் கலம்பகத்திலும் குறிக்கப்படும் ஊர், பழையவெண்குன்றக் கோட்டத்தைச் சேர்ந்ததென்றும், அங்குள்ள ஈசன் கோயில் திருமூலத்தானம் என்னும் பெயருடைய தென்றும் கல்வெட்டுக்கள் கூறும்.7

 கடிக்குளம்

     பழமை வாய்ந்த சிவப்பதிகளுள் மூன்று குளப்பதிகள் சிறந்திருந்தன என்பது திருஞானசம்பந்தர் பாட்டால் விளங்குகின்றது. அவற்றுள் ஒன்று பாடல் பெற்றுள்ள கடிக்குளம் என்ற ஊராகும். குளிர் பூஞ்சோலையினிடையே அமைந்த கடிக்குளப்பதியில் கோயில் கொண்டிலங்கும் ஈசனை,

      “கடிகோள் பூம்பொழில் சூழ்தரு

      கடிக்குளத் துறையும் கற்பகம்

என்று போற்றினார் திருஞான சம்பந்தர். அவர் திருவாக்கின் சிறப்பினால் இப்பொழுது கற்பகனார் கோயில் என்பது கடிக்குளத்தின் பெயராக வழங்குகின்றது. ஏனைய குளங்களின் வகை, திருநாவுக்கரசரது பாட்டால் தெரிகின்றது. “வளைகுளமும் தளிக்குளமும் நல்இடைக்குளமும் திருக்குளமும்” இறைவன் கோயில் கொண்ட குளங்கள் என அவர் கூறிப் போந்தார்.

 வளைகுளம்

     இவற்றுள் வளைகுளம் என்று முன்னாளில் வழங்கிய ஊர் இந்நாளில் வளர்புரம் என்னும் பெயர் பெற்றுள்ளது. வட ஆர்க்காட்டு ஆர்க்கோண வட்டத்திலுள்ள வளர்புரத்தில் பழமையான சிவாலயம் ஒன்று  உண்டு.

தொண்டீச் சரம் என்பது அதன் பெயர்.   சுந்தர பாண்டியன் முதலாய பண்டைத் தமிழரசர் அதற்கு நிவந்தம் விட்டுள்ளார்கள்.8 எனவே, வட ஆர்க்காட்டிலுள்ள வளர்புரமே பழைய வளைகுளம் என்பது தெளிவாகும்.

 இடைக்குளம்

     முற்காலத்தில் இடைக்குளம் என வழங்கிய ஊர் இப்பொழுது மருத்துவக்குடி என்னும் பெயர் பெற்றுள்ளது. தஞ்சை நாட்டுக் கும்பகோண வட்டத்திலுள்ள மருத்துவக்குடிச் சிவன் கோயிலிற் கண்ட சாசனம் திரு இடைக் குளமுடையார் என்று அங்கு எழுந்தருளிய ஈசனைக் குறித்தலால், பழைய இடைக்குளமே மருத்துவக் குடியாயிற்று என்பது இனிது விளங்கும்.9

 திருமுக்குளம்

     இன்னும், ஈசனார் அருள் பெற்ற திருக் குளங்களில் ஒன்று திருவெண்காட்டிலுள்ள முக்குளம் ஆகும். திருஞான சம்பந்தர் அங்கு எழுந்தருளிய போது,

           “முப்புரம் செற்றார்பாதம் சேருமுக் குளமும் பாடி

           உளமகிழ்ந் தேத்தி வாழ்ந்தார்

என்று சேக்கிழார் கூறப் போந்தார். அவர் கூறுமாறே திருவெண்காட்டு முக்குளம் தேவாரப் பாட்டில் அமையும் பெருமை பெற்றுள்ளது.10

திருவரங்குளம்

     புதுக்கோட்டை நாட்டில் திருவரங்குளம் என்னும் பதியொன்றுண்டு. பழங்காலத்துப் பாண்டியர் பலர் திருவரங்குளநாதர் கோவிலுக்குப் பல வகையான நிவந்தங்கள் வழங்கியுள்ளார்கள்.11பெருங்குளம் தென்பாண்டி நாட்டிலுள்ள திருமால் திருப்பதிகளுள் ஒன்றாகிய குளந்தை யென்னும் பெருங்குளத்தில் பழமையான சிவன் கோயிலும் உண்டென்பது சாசனத்தால் விளங்கும். பண்டைப் பாண்டியன் ஒருவனால் அமைக்கப்பட்ட அக் கோயில் திருவழுதீச்சுரம் என வழங்கலாயிற்று.12

                       அடிக் குறிப்பு

1. அங்கிருந்த சோழ மாளிகையில் இராசராசனுடன் பிறந்த குந்தவை வசித்து வந்ததாகச் சானம் கூறும். 350 / 1907.

2. 172 / 1927.

3. அவ்வூரில் எழுந்த அருமொழித் தேவீச்சுரம் என்ற சிவாலயம்

இராசராசன் பெயர்தாங்கி நிலவுகின்றது. 157 / 1908. அப் பெரு வேந்தன்

இறந்த பின்னர் அவன் தேவியாகிய பஞ்சவன் மாதவி பள்ளிப்படையாக அங்கு எடுத்த கோவில் பஞ்சவன் மாதேவீச்சுரம் என்று பெயர் பெற்றது. 271/1927.

4. இப்போது கோட்டாறு திருக்கொட்டாரம் என வழங்குகின்றது.

5. பஞ்சநதிகள் பாயும் பிரதேசத்தைப் பஞ்சாப் என்றழைப்பார் வடநாட்டார். ஐயாறு என்ற தமிழ்ப் பெயரும் அப் பொருளையே தரும்.

6. இவ்வூர்ப் பெயர் ஆங்கிலத்தில் திருவாதி எனச் சிதைந்து வழங்கும்.தமிழின் சிறப்பெழுத்தாகிய வல்லின றகரம் அயல்நாட்டார் நாவில் சிதைவதற்கு இஃதொரு சான்று.

7. செ.க.ஆ.(எம்.இ.ஆர்.)1934-35.

8. 26 /1911. 

 9. “உய்யக்கொண்டார் வளநாட்டுத் திறைமூர் நாட்டு…திருவிடைக் குளமுடையார்” – 387 / 1907.

10. “வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே”

என்பது திருஞான சம்பந்தர் தேவாரம். சைவ சித்தாந்தத்தைத் தமிழ் நாட்டில் நிலைநிறுத்திய மெய்கண்ட தேவரின் தாய் தந்தையர் இம் முக்குளத்தில் நீராடி அப் பெருமானைப் பெற்றனர் என்ற வரலாறும் இதன் சீர்மையை உணர்த்துவதாகும். திருப்பெண்ணாகடத்தில் வாழ்ந்த வேளாளராய அச்சுத களப்பாளர் நெடுங்காலம் பிள்ளையின்றிக் கவலையுற்றார் என்றும், அதுபற்றி இறைவன் திருக்குறிப்பைத் தெரிந்து கொள்ளக் கருதித் தேவாரத்தில் முறைப்படி கயிறு சார்த்திப் பார்த்தபோது திருமுக்குளத்தின் பெருமையை யுணர்த்தும் திருஞான சம்பந்தர் பாட்டுக் கிடைத்ததென்றும், அவர் உடனே தம் மனைவியாரோடு திருவெண்காட்டை அடைந்து, முக்குளத்தில் நாள்தோறும் நீராடி ஆண்டவனைத் தொழுது வந்தார் என்றும், அந் நோன்பின் பயனாக மெய் கண்ட தேவர் அவர் பிள்ளையாகத் தோன்றினார் என்றும் வரலாறு கூறுகின்றது.

11. செ.க.ஆ.(எம்.இ.ஆர்.)., 1914-15. Pudukkottah Inscriptions

12. செ.க.ஆ.(எம்.இ.ஆர்.)., 1932-33.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue