ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 39 – மலையும் குன்றும் – தொடர்ச்சி
17 June 2023 அகரமுதல
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 38 – மலையும் குன்றும் தொடர்ச்சி)
மலையும் குன்றும் – தொடர்ச்சி
காளத்தி மலை
தென் கயிலாயம் என்று கருதப்படும் திருக்காளத்தி மலை அன்புருவாய கண்ணப்பர் வழிபட்டுப் பேறு பெற்ற அரும் பெரும் பதியாகும்.12
“கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடும்” காளத்தி மலையைக்கண்களிப்பக் கண்ட திருஞான சம்பந்தர், அங்குக் கண்ணப்பர் திருவுருவைத் தரிசித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, அவரடியில் விழுந்து போற்றிய பான்மையைத் திருத்தொண்டர் புராணம் விரித்துரைக்கின்றது.13
திருவாட் போக்கி மலை
திருச்சி நாட்டுக் குழித்தலை வட்டத்தில் உள்ளது வாட்போக்கி மலை.14 அதனை மாணிக்க மலை என்று சாசனம் கூறும்.15 இக் காலத்தில் அஃது இரத்தினகிரியென வழங்குகின்றது. இன்னும், அரதனாசலம் சிவாயம், காகம் அணுகாமலை என்னும் பெயர்களும் அதற்குண்டு. அம் மலைக் கோயில் பண்டைத் தமிழ் வேந்தரால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட தென்பது அங்குள்ள கல்வெட்டுகளால் விளங்கும்.
திருப்பரங்குன்றம்
முருகனுக்குரிய படை வீடுகளுள் முதலாக வைத்துப் போற்றப்படுவதும், தேவாரப் பாமாலை பெற்றதுமாகிய திருப்பரங்குன்றம், மதுரையம்பதிக்கு அருகேயுள்ளது. அப் பரங் குன்றத்து மேவிய பரமனைத் தமிழ்நாட்டு மூவேந்தருடன் சென்று வழிபட்டுத் திருப்புகழ் பாடினார் சுந்தரர். “முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த பாடல்” என்று அவர் தாமே கூறுதலால் இவ்வுண்மை அறியப்படும். பரம்பொருளாகிய ஈசன் கோயில் கொண்டமையால் அது பரங்குன்றென்னும் பெயர் பெற்றதென்றும் தோன்றுகின்றது.
பருப்பதம்
இந் நாளில் ஆந்திர தேசத்துக் கருனூல் நாட்டில் சிறந்து விளங்கும் சிரீசைலம் என்னும் பதியே பருப்பதம் ஆகும். கல்லார்ந்த வழி நடந்து, அரிதிற் காண்டற்குரியது அப் பதி. “செல்லல் உற அரிய சிவன் சீபர்ப்பத மலை” என்று சுந்தரர் பாடியதன் கருத்து இதுவே போலும்! கிருட்டிண நதிக்கரையிலுள்ள குன்றுகளிடையே நிவந்தோங்கி நிற்கும் பருப்பதத்தின் நடுநாயகமாக மல்லிகார்ச்சுனம் என்னும் திருக்கோயில் விளங்குவதாகும். அதைச் சார்ந்த அளகேச்சுரம் முதலான பல ஆலயங்களும் மண்டபங்களும் ஆற்றின் இருமருங்கும் உள்ளன.
செங்குன்றம்
கொங்கு நாட்டுத் திரு மலைகளுள் ஒன்று திருச்செங்குன்றம். அம்மலையைச் சார்ந்த தலத்தைக் கொடிமாடச் செங்குன்றூர் என்று தேவாரம் போற்றுகின்றது. செந்நிறமுடையதாயிருத்தலால் செங்குன்றம் என்னும் பெயர் அதற்கு வந்தது போலும்! இந் நாளில் சேலம் நாட்டில் திருச்செங்கோடு என வழங்கும் ஊரே பழைய செங்குன்றூர் ஆகும்.
நெற்குன்றம்
நெற்குன்றமும், நற்குன்றமும் இறைவன் கோயில் கொண்ட மலைப்பதிகள் என்று திருஞான சம்பந்தர் கூறியருளினார்.16 நெற்குன்றம் என்னும் பெயர் வாய்ந்த ஊர்கள் தமிழ் நாட்டிற் பலவாகும். ஆயினும், அவற்றுள் ஒன்று திருநெற்குன்றம் என்று சாசனத்திற் குறிக்கப்படுவதால் அதனையே வைப்புத் தலமாகக் கொள்ளலாம். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முசிரி வட்டத்தில் இப்பொழுது தின்னகோணம் என வழங்கும் ஊரே திருநெற்குன்றம் எனத் தோன்றுகின்றது.17
கந்தமாதனம்
இன்னும்
“கயிலாய மலையுளார் காரோணத்தார்
கந்தமா தனத்துளார் காளத்தியார்”
என்று திருவீழி மிழலைப் பதிகத்தில் திருநாவுக்கரசர் கூறிய கந்தமாதனம் என்பது திருச்செந்தூர்க் கோவிலின் வடபால் உள்ளது. கந்தவேள் விடுத்த தூதுராகிய வீரவாகு தேவர் கந்தமாதனக் குன்றினின்றும் எழுந்து விண்ணாறாக வீர மகேந்திரத்தை நோக்கிச் சென்றார் என்று கந்த புராணம் கூறும்.18
பொதியமலை
தமிழ் நாட்டு மலைகளுள் மிகப் பெருமையுடையது பொதிய மாமலை.19 மலையம் என்னும் பொதுப் பெயரைத் தனக்கே உரிமையாக்கிக் கொண்ட பொதிய மலையை இமய மலைக்கு இணையாகக் கண்டனர் தமிழ்ப் புலவர். “பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று” என்று வாழ்த்தினார் ஒரு புலவர்.20 தமிழ் முனிவர் என்று புகழப்படுகின்ற அகத்தியர் வாழும் அம் மலையைத் தமிழகம் முழுவதும் தொழுவதாயிற்று.
“திங்கள்முடி சூடும்மலை தென்றல்விளை யாடுமலை
தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை”
என்று புகழ்ந்து மகிழ்ந்தாள் அம் மலைக் குறவஞ்சி.21 இத்தகைய மலையைத் திருநாவுக்கரசரும் தேவாரத்திற் குறித்துள்ளார்.
“பொய்த்தார் புரமூன் றெரித்தானைப்
பொதியில் மேய புரணனை”
என்னும் திருவாக்கால் திரிபுர மெரித்த பழம் பொருளாகிய பரமசிவன் பொதிய மலையையும் கோயிலாகக் கொண்டவன் என்பது விளங்கும். இப் பொதிய மலையின் அடிவாரத்தில், பொருநையாறு சவியுறத் தெளிந்து செல்லும் துறையில், பாபநாசம் என்னும் தலம் அமைந்திருக்கின்றது.22
குடுமியான் மலை
புதுக்கோட்டை நாட்டில் குடுமியா மலை என்னும் மலையொன்று உண்டு. அம் மலை திருநலக் குன்று23 என்று சாசனங்களிற் குறிக்கப்பட்டுள்ளது. அங்குத் திருமேற்றளி முதலாய சிவாலயங்கள் உள்ளன.
குன்றின் சிகரத்தைக் குடுமி என்னும் சொல் உணர்த்துவதாகும். எனவே, குடுமியான் என்று அக்குன்றுடைய பெருமான் குறிக்கப் பெற்றார்.24 நாளடைவில் பழம் பெயர்மறைந்து குடுமியான் மலை என்ற பெயர் வழங்கலாயிற்று. மலைக் குடுமியைத் தலைக் குடுமியெனப் பிறழவுணர்ந்த பிற்காலத்தார் சிகாநாதர் என்று அங்குள்ள ஈசனை அழைக்கலாயினர்.
குன்றக்குடி
பாண்டி நாட்டில் ஒரு குன்றின் அடிவாரத்தில் அமைந்த ஊர் குன்றக்குடி என்று பெயர் பெற்றது. அங்கு எழுந்தருளியுள்ள ஈசன், திருமலையுடையார் எனவும், தேனாற்று நாயகர் எனவும் சாசனங்களிற் குறிக்கப்படுகின்றார்.25 தேனாற்று நீர் பாயும் ஊர்களில் குன்றக் குடியும் ஒன்றாதலால் அங்குள்ள இறைவன் அப்பெயர் பெற்றார் போலும்!
பழங்காலத்துப் பாண்டியர்கள் அக் கோயிலுக்கு விட்ட நிவந்தங்கள் பலவாகும். இப்பொழுது அவ்வூரின் பெயர் குன்னக்குடியென மருவி வழங்குகின்றது; அக் குன்றப் பகுதியில் அமர்ந்த குமரவேலை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
அடிக் குறிப்பு
12. திருக்காளத்தி, தெக்கண கயிலாயம் என்று சைவ உலகத்தில் வழங்கப் பெறும். “தென்திசையிற் கயிலையெனும் திருக்காளத்தி” என்று திருத்தொண்டர் புராணம் குறிக்கின்றது. திருஞான சம்பந்தர் புராணம், 1028. 13. “சூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித்
தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி
விழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்
மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்”
என்றார் சேக்கிழார். திருஞானசம்பந்தர் புராணம், 1022.
14. இத் தலத்திற் கோயில் கொண்டருளும் முடித்தழும்பர் என்னும் இறைவனுக்குத் தம்வருவாயுள் பன்னிரண்டில் ஒரு பங்கை அளித்து வரும் செட்டியார் குலம் பன்னிரண்டாம் செட்டிமார் என்று வழங்கப்பெறும். அவர்கள் விரும்பியபடி வாட்போக்கிக் கலம்பகம் என்னும் பிரபந்தம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்டது. மீ. ச. முதற்பாகம், 139.
15. 186 / 1914. இம்மலைக்கோயிலை அடைவதற்குச் சாதனமாகவுள்ள படிக்கட்டு கி.பி. 1783 -இல் அமைக்கப்பட்டது. 952 படிகள் உள்ளன.(I.M.P.,p.1517.)
16. திருஞான சம்பந்தர் திருச்சேத்திரக் கோவை, 9.
17. (M.E.R., 1932-33.) தென் ஆர்க்காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்தில் ஒரு நெற்குன்றம் உண்டு. அது நெற்குணம் என வழங்கும். (M.E.R.,1934-35.)
18. “அலங்கலந் திரைகொள் நேமி
அகன்கரை மருங்கின் மேரு
விலங்கலின் உயர்ந்த கந்த
மாதன வெற்புத் தன்னில்
பொலங்குவ டுச்சி மீது
பொள்ளென இவர்த லுற்றான்
கலன்கலன் கலனென்று அம்பொன்
கழலமர் கழல்கள் ஆர்ப்ப.
-கந்தபுராணம், மகேந்திர காண்டம்.
19. புலவர் புராணம், பொதிகாசலப் படலம், 44.
20. புறநானூறு, 2.
21. மீனாட்சியம்மை குறம், 13.
22. பாபநாசம் ஒரு வைப்புத் தலம், தஞ்சை நாட்டிலும் ஒரு பாபநாசம் உள்ளது.
23. திருநீலக்குன்று எனவும் குறிக்கப்படும்.
24. திருக்காளத்திமலை மீதிருந்த இறைவனைக் குடுமித்தேவர் என்று கண்ணப்பர் புராணம் கூறும்.
25. 25 / 1909
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
Comments
Post a Comment