பூங்கொடி 2 – கவிஞர் முடியரசன்: புகழ்மாலை
14 June 2023 அகரமுதல
(பூங்கொடி 1 – கவிஞர் முடியரசன் – தொடர்ச்சி)
புகழ்மாலை
(பூங்கொடி வெளியீட்டு விழாவில்-1964)
இன்று நாட்டிலுள்ள நிலையை-தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்களை, பேராசிரியர்களை, அரசியல் தலைவர்களை, அறிஞர்களை, நாவலர்களை, கலைஞர்களை வெவ் வேறு பெயர்களால் காட்டுகிறது. பூங்கொடி.
- பண்டாரகர் அ. சிதம்பரநாதனார் எம்.ஏ.,பி.எச்.டி.
தமிழ் வாழ, தமிழர் குறிக்கோள் வாழ வழி காட்டுகிறது பூங்கொடி.
- பண்டாரகர் மா. இராசமாணிக்களுர் எம்.ஏ.,பி.எச்.டி.
ஆற்றொழுக்கனைய கவிதை யோட்டமும் ஆழ்ந்த கருத்துச் செறிவும் நிறைந்த காப்பியம் பூங்கொடி. அறப்போர்க்கும் மறப்போர்க்கும் விளக்கங்கரும் வரிகள் இதனை உறுதிப்படுத் தும். ஆருயிர் கொடுப்பது அறப்போர் ஆகும், வேறுயிர் எடுப்பது மறப்போர் ஆகும்”.
– பண்டாரகர் மு. வரதராசனர் எம்.ஏ.,பி.எச்.டி.
தாய்மொழிக்காகப் போராடிச் சிறை செல்வோரையும், பேரிடரைத் தாங்கிக் கொள்ளும் தலைவர்களையும் நினைவூட்டு கிறது இப் பூங்கொடி. இஃது உலக ஒருமைப்பாட்டுக் காப்பியமே என்பதற்கு அகச் சான்றுகள் பல உள.
- பண்டாரகர் தமிழண்ணல்எம்.ஏ.,பி.எச்.டி.
உலக மொழிகளில் தேசியக் காப்பியம் என்று கூறத்தக்க நூல்கள் மூன்று. அம்மூன்றனுள் ஒன்று பூங்கொடி.
-பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் எம்.ஏ.
தமிழன், யார் வேண்டுமானலும், எது வேண்டுமானலும் வரட்டும் என்று சொல்லும் பரந்த மனப்பான்மை படைத்தவன். அதற்காக எந்த மொழியாவது வந்து நம்மிடம் அமர்ந்து குழப்பம் செய்தால் கிளர்ந்கெழுவோம் என்று கூறுகிறாள் பூங்கொடி. -செல்லபாண்டியனார் பி.ஏ.பி.எல்,
சட்டமன்ற அவைத்தலைவர்-தமிழ்நாடு
எப்பக்கம் சுவைத்தாலும் இனிப்பது கற்கண்டு; எப்பக்கம் படித்தாலும் இனிப்பது பூங்கொடி.
-உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
பாரதியார் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி. அச் செடியிலிருந்து தழைத்தது முடியரசன் என்ற கொடி. அக்கொடி பூங்கொடியாகி எங்கும் படர்ந்து மணம் பரப்புகிறது.
– பேராசிரியர் க அன்பழகன் எம்.ஏ.
இப்புதிய காப்பியப் படைப்பு, தமிழுக்கு மறுமலர்ச்சி அளிக்கும் ஒரு சீரிய பணியாகும். பூங்கொடி தமிழகப்பெண்டிர்க்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளாள். இக்காப்பியம் இலக்கிய இலக்கண வளஞ் செறிந்து, உவமை நலத்தாற் சிறப்புற்று விளங்குகிறது. பண்டைத் தமிழ்க் காப்பியங்களைப் போல் பிற்காலத்தில் தமிழில்புதுக்காப்பியங்கள் தோன்றிற்றில. அக்குறைபாட்டினை நீக்குமுறையில் இற்றைநாள் பூங்கொடி’ தழைத்துள்ளாள். .
-செந்தமிழ்ச் செல்வி, சனவரி 1965
சித்திரத்தில் பார்ப்போம்; சிலை செய்து கும்பிடுவோம் என்னும்படியாகத் திகழும் இப்பூங்கொடி நல்லாளாகிய நம் உடன்பிறப்பாட்டி, தன்னைத் துறந்து, தமிழைக் காக்கின்ற செயல் செறியே இவள் நமக்கு உணர்த்திச் செல்லும் தத்துவ மாகும.
-தமிழ்ப்பாவை 7-1-1965 .
தமிழ்த் தெய்வ வணக்கத்துடன் தொடங்கித் தமிழணங்கின் உணர்ச்சி மொழிகளுடனும் விடுதலை மொழிகளுடனும் முடிவு பெறுகின்றது இந்நூல். புதுமை வழிகளில் செல்லாது பண்டைத்தமிழ் மரபை ஒட்டி அமைந்திருக்கும் இந்நூலும் இன்றைய தமிழுக்கு ஒரு நல்ல அணிதான்.
– “ -சுதேசமித்திரன் (பி-சிரீ.) 16-6-1965 –
துள்ளும் நடையில் எழுதப்பட்டுள்ள சுவை நிறைந்த இக் காவியம் (பூங்கொடி) படிக்கப் படிக்க இன்பம் ஊட்டுகிறது.
-வீரகேசரி 8-8-1965
இக் நூலினுள் உவமைகள் பாங்குற எடுத்தாளப்பட்டுள்ளன. ஒசை நயம் மிகுந்த பகுதிகள் பல் இந்நூலகத்து உண்டு. இயற்கைக்காட்சி வருணனைகள் எழிலுறத் தரப்பட்டுள்ளன.
-திருச்சி வானொலி நிலையம் 4-9-1965
இந்தக் கவிஞரின் அகவலில் ஒர் இன்பம் பெருகுகின்றது. சிறந்த சொல்லாட்சி மிளிர்கின்றது. கவிதை உள்ளம் பேசுகின்றது. ஆனால், தமிழ்ப் பெருமையைப் பரப்புவதற்கே உற்ற கருவியாய் இத்தக் காப்பியம் அமைந்து விட்டது. தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறும் என்பதற்கு ஐயம் இல்லை. அந்தி மாலைச் சிறப்பைப் பற்றி இவர் தரும் சித்திரம் நம் மனத்தை விட்டகலாது. இந்த இலக்கிய யாழ் முழுவதும் இன்பமாய் ஒலிப்பது நம் தமிழணங்கின் தெய்வக் குரல்தான். அக் குரலினுக்குச் செவி சாய்த்துத் தமிழ்த் தேவியை நாம் வணங்கு வோமாக.
-தினமணி (இரா. சிரீ. தேசிகன்) 26-10-1965
இருபதாம் நூற்றாண்டில் எழுந்த புதிய காப்பியங்களில் இதற்குத் தனியிடம் உண்டு. ஒரு நாற்பதாண்டுக் காலத் தமிழ் நாட்டின் வரலாற்றை அது சுவைபட எடுத்துக் காட்டுகிறது. இக் காப்பியம் தமிழுக்குக் கிடைத்த ஒரு பெறற்கருஞ் செல்வம் எனலாம்.).
-‘தாமரை’யில் எழில் முதல்வன், ஏப்பிரல் 1967
காவிய நயத்துடனும் கவிதை மணத்துடனும் அமைந்துள்ள இந்நூல் முடியரசனைக் கவியரசனுக்குகிறது. ஒரு முறை படித்து பிறகு, நயத்துக்காகவும் சொல்லழகிற்காகவும் இன்னொருமுறை படிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.
-முத்தாரம் 1-5-1968
This is the Summary of the story in 31 Kathais or chapters in a chaste Flowing style with clear discriptions and picturesque situations. A close imitation of a master-piece of literature in all its parts in the same language can become stale. Otherwise the work which seems to be meant mainly in praise of the Tamil language is one which is laudable on its several Fronts.
THE HINDU 24–1–1965
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment