Skip to main content

பூங்கொடி 3 – கவிஞர் முடியரசன்: பதிப்புரையும் முன்னுரையும்

 




(பூங்கொடி 2 – கவிஞர் முடியரசன்: புகழ்மாலை – தொடர்ச்சி)

பூங்கொடி 3 : பதிப்புரை

உலகில் பிறந்தவருட் சிலர், அவர் தம் நாட்டை, மொழியைக் காக்க உடல், பொருள், ஆவியை ஈந்துள்ளனர் என்பதை உலக வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன. அவ்வகையில் தமிழ்நாடும் குறைந்ததன்று என்று பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நின்று எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறலாம்.

அந் நிகழ்ச்சிகளில் நினைவூட்டுவன சில; உணர்ச்சி யூட்டுவன சில; மறைந்தன பல. ஆனால், மறக்க முடியாதன சில வுள. அவ்வரலாற்று நிகழ்ச்சிகளை உள்ளத்திற் கொண்டு உணர்ச்சி குன்றா வகையில் எளிய, இனிய நடையில் தமிழ்மொழி வளர்ச்சி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது இப் பூங்கொடி. இப் பூங்கொடி வாயிலாகத் தமிழ்மொழியைப் பாரெங்கும் பரப்பக் கவிஞர் முடியரசன் முனைந்துள்ளார். கவிஞர் அவர்கள் புத்தம் புதிய போக்கில், மறு மலர்ச்சி எழுச்சி கொள்ள இதனைப் படைத்துள்ளார். இதன் சுவையை எல்லாரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் ஆவல்.

வழக்கம் போல உங்கள் ஆதரவு உண்டு என்ற நம்பிக்கையுடன் இரண்டாம் பதிப்பாக இதனை வெளியிடுகின்றாேம். வணக்கம்.

புதுக்கோட்டை : பு. அ. சுப்பிரமணியன், 14 — 3 — ‘70

பதிப்பக உரிமையாளர்.

000

முன்னுரை

மொழிவளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, இல்லறந் துறந்து, தன்னலம் வெறுத்துப் பொதுநலம் ஒன்றே பேணித்தன் வாழ்வையே கொடுக்க வல்ல பெண்மகளொருத்தி நம் தமிழகத்துக்கு வேண்டுமென எண்ணினேன். அவ்வெண்ணத்தின் விளைவே இப் பூங்கொடி

சமயங்கட்கெல்லாம் தனித்தனிக் காப்பியம் பெற்று மிளிரும் நம்தாய்மொழி, மொழிக்காக ஒரு காப்பியம் பெறுவதும் ஆக்கந்தானே!

மொழி நலங்கருதி முற்பட்டு வரும் இப்பூங்கொடி, இக்காலத்து நிகழ்ச்சிகள் பலவற்றை உள்ளத்தில் இறுத்தி, ஊருக்கு உரைத்து நிற்பாள். உலகம் அவற்றைச் செறாது, வெறாது சிந்திப்பதாக அவள் நடைபற்றிக் காய்தல் உவத்தல் அகற்றி, நடுகின்று உண்மை உரைப்பதாக.

இப் பூங்கொடியை ஒப்பனை செய்து, தமிழகத்தே உலாவரச் செய்த வள்ளுவர் பதிப்பகத்தார்க்கும் இவள் நன்கனம் உருப்பெற்றாெளிர உற்றதோர் நற்றுணையாய் நின்ற புலவர்கள் தமிழண்ணல், முத்தரசன், ஆ. பழநி முதலிய அன்பர்கட்கும் என் உளங்கனிந்த நன்றி உரித்தாகுக

காரைக்குடி, அன்பன்,

14–3—1970. முடியரசன்.

(தொடரும்)

கவிஞர் முடியரசன்பூங்கொடி

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்