இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 44 : பழந்தமிழும் தமிழரும் 4
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 43 : பழந்தமிழும் தமிழரும் 3 தொடர்ச்சி)
பழந்தமிழும் தமிழரும் 4
பெண்களுக்கு அக்காலத்தில் எல்லா உரிமைகளும் இருந்தன. விரும்பிய கணவனை மணக்கும் உரிமையும் இருந்தது. மணவினைச் சடங்குகளும் நிகழ்ந்தன. மணவினை நிகழ்வதற்கு முன்னர்ச் சிலம்புகழி நோன்பு என்ற ஒரு சடங்கு நிகழ்ந்துளது. அது மணமகன் வீட்டிலோ மணமகள் வீட்டிலோ நடைபெறும். அச் சடங்கில் புரோகிதர்களோ பொருள் விளங்கா மந்திரங்களோ இல்லை. பெண்களே நடத்தி வைத்தனர்.
அத் திருமணச் சடங்கு பற்றி நல்லாவூர் கிழார் கூறியுள்ளார்.
உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர் தருமணல் ஞெமிரி
மனைவிளக்கு உறுத்து மாலை தொடரிக்
கனை இருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்துஅகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழா நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை ஆகுஎன
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல்லிரும் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரில் கிழத்தி ஆகுஎனத் தமர்தர
ஓரில் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஒர்புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரையென
இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின்
செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர
அகமலி உவகையள் ஆகி முகன்இகுத்து
ஒய்யென இறைஞ்சி யோளே மாவின்
மடம்கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்கு ஈர் ஓதி மாஅ யோளே. (அகம்86)
இப்பாடல் யாவராலும் கற்கப்பட வேண்டியதொன்று. வாழ்வின் தலையாய நிகழ்ச்சி திருமணமன்றோ. அதுபற்றிக் கூறும் பழம் தமிழ்ப் பாடலை அறியாதார் வாழ்வும் ஒரு வாழ்வாகுமா? இப் பாடற் பொருள் வருமாறு:
வருவோர்க்கெல்லாம் வழங்குவதற்கு உழுந்துக் களியும் பெருஞ்சோறும் (விருந்துச்சோறு) ஆரவாரத்தோடு ஆயத்தப் படுத்தப்பட்டுள்ளன. வரிசையாகக் கால்களை நட்டுப் பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது. பந்தலிலே நல்ல புதிய மணல் பரப்பப்பட்டுள்ளது. மாலைகள் தொடர் தொடராகத் தொங்கவிடப்பட்டுள்ளன. வீட்டில் விளக்கேற்றப்பட்டுள்ளது. இருள் அகன்று பொழுது விடிந்த அழகிய காலை நேரம் வந்தது. நல்ல நேரம் வந்துவிட்டது. அந்நேரம் கோள் (கிரகம்) திங்களை விட்டு விலகிய நேரமாகும். அதனை அறிந்தனர் வயது மிகுந்த பெண்கள். ஒரே ஆரவாரம். தலையில் ஆளுக்கொரு குடம் கொண்டனர். கையில் அகன்ற புதிய மண்டைகளை (ஒருவகைப் பாத்திரம்) எடுத்தனர். நீருடன் பூவும் நெல்லும் பொருந்த எடுத்துக்கொண்டனர்; வரிசையாக நின்றனர். நான்கு பெண்கள் குழந்தைகளைப் பெற்றவர்களாய் மங்கல அணியாம் தாலியை உடையவர்களாய் வந்தனர். குடங்களில் உள்ள நீரை மணமகள் மீது ஊற்றினர்; முழுக்காட்டினர். முழுக்காட்டும்போது உன்னையடையும் கணவனுக்குத் தகுந்த சோடியாக இருப்பாயாக என்று வாழ்த்தினர். இதுதான் திருமணச் சடங்கு. இது கழிந்தது. எங்கும் பேரொலி; பெருமுழக்கம்; உடனே சுற்றத்தார் மணமகளை மணமகனிடம் தந்தனர்.
அன்றிரவு ஓர் வீட்டில் ஒரு பகுதியில் இருவரும் கூடினர். மணமகள் புதிய ஆடையை உடுத்தியவளாய்ப் போர்த்திக் கொண்டு முடங்கிப் படுத்துக் கிடந்தனள் ஒரு பக்கத்தில்; அவளைத் தழுவிக் கொண்டு ஆடையால் மூடப்பட்டிருந்த முகத்தைத் திறந்தனன் தலைவன். தலைவி அஞ்சிப் பெருமூச்சு விட்டாள். உன் உள்ளத்தில் உள்ளதை யெல்லாம் அஞ்சாமல் கூறுக என்றான் அவன். அவள் இருக்கைக்குப் பின் நின்று ஆர்வத்தோடு வினவினான்; புன்னகை பூத்திருந்த அவள், உளம் நிறைந்த மகிழ்ச்சியை உடையவளாய் முகத்தைச் சாய்த்து உடனே வணங்கினாள். அழகிய பார்வையினையும் நன்கு சீவப்பட்ட தலைமயிரினையும் உடையவளாய் மாமை நிறம் பெற்றுள்ள அவள் காதுகளில் ஒளிமிக்க அணிகள் ஊசலாடின. இவ்வாறு, தலைமகன் ஒருவன் தான் திருமணக்காலத்தில் பெற்ற நிகழ்ச்சியை எண்ணி இன்புற்றிருக்கும் நிலையை எய்தினான்.
இப் பாடலில் வாலிழை மகளிர் நால்வர் என்பது குறிப்பிடத்தகுந்தது. வாலிழை என்பதற்கு உயர்ந்த தூய அணிகலன் என்று பொருள். வெறும் அணிகலனை வாலிழை என்று அழைக்க மாட்டார்கள். மங்கல நாண் எனப்படும் தாலியைத்தான் வாலிழை எனக் குறிப்பிட்டுள்ளார். தாலி கட்டுவது தமிழர்கட்கே உரியது. ஆரியர் வருகைக்கு முன்னரும் தமிழர் தாலிகட்டும் பழக்கம் பெற்றிருந்தனர்.
இப்பாடலில் தாலிகட்டிய நிகழ்ச்சி சுட்டப்படவில்லையே என்று வினவலாம் சிலர். திருமணம் என்றால் தாலிகட்டும் நிகழ்ச்சியில்லாமலா நடக்கும். ஆகவே அது கூறாமலே விளங்கும் என்று விட்டு விட்டார். தாலியோடு விளங்கும் பெண்கள்தாம் (கட்டுக்கழுத்திகள்) திருமணம் முதலிய நற்சடங்குகளில் பங்கு கொள்ள வேண்டுமென்பது இன்றும் உள்ள முறைதானே. இம் முறை அன்றும் இருந்தது.
திருமணத்தின் பெரும் பயன்களுள் ஒன்று மக்களைப் பெறுதல். மக்களே நாட்டின் செல்வம். மக்களில்லாத வாழ்வை மாண்பற்ற வாழ்வாகக் கருதினர். அறிவுடைநம்பி என்னும் புலவர் பெருமான் புகழ்வதை நோக்குங்கள்.
படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே (புறம்188)
இப் பாடலால் மக்கள் செல்வத்தின் மாண்பை அறிவதோடு மக்கள் வாழ்க்கை நிலையையும் அறியலாம். பெருஞ்செல்வர்கள் பலர் இருந்தனர். பெருஞ்செல்வராய் இருப்போர் இல்லாதவரோடு உடன் உண்ணும் வாழ்க்கையராய் இருந்தனர். நெய் சேர்த்து உண்ணும் முறையை அன்று முதலே தமிழர் அறிந்திருந்தனர் என்பன போன்ற செய்திகளை அறிவிக்கும் இப்பாடல் குழந்தையைப் பற்றிக் கூறுமிடத்தில குழந்தையையும் அதன் நிகழ்ச்சியையும் நம் அகக்கண் முன்பு அப்படியே கொண்டு வந்து நிறுத்தும் இயல்பினதாய் உள்ளது.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Comments
Post a Comment