ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி)
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 21
திறனாய்வு (தொடர்ச்சி)
3
இவ்வாறு 1940 ஆம் ஆண்டுகளிலேயே நவீன இலக்கிய விமர்சன முயற்சிகள் தொடங்கப்பட்டன எனினும் 50 ஆம் 60 ஆம் ஆண்டுகளில்தான் ஈழத்தில் அவை சிறப்பாக வளர்ச்சியுற்றன. 50ஆம் ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக 1956க்கப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஈழத்தில் ஏற்பட்ட தேசிய பண்பாட்டு உணர்ச்சியின் விளைவாக இலக்கியத்திலும் தேசிய தனித்துவச் சிந்தனை வளர்ச்சியுள்ளது. இதன் பெறுபேறாக தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு வடிவம் பெற்றது. 50 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்து 60 ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரை, ஈழத்தின் இலக்கிய மேடைகளிலும், பத்திாிகை சஞ்சிகை போன்ற பொதுத் தொடர்புச் சாதனங்களிலும் தேசிய இலக்கியம் பற்றிய சருச்சைகள் நடைபெற்றன. ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். ஆங்கில இலக்கியத்துக்கும் அமொிக்க இலக்கியத்துக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை உதாரணமாகக் கொண்டு தமிழக இலக்கியத்துக்கும் ஈழத்து இலக்கியத்துக்கும் இடையே அழுத்திக் கூறினர். தேசிய இலக்கியம் பற்றி எழுதிய அ.ந.கந்தசாமி பின்வருமாறு குறிப்பிட்டார்.
“ஒரு மொழிக்கு ஓர் இலக்கியம் என்பது மொழிகள் கடந்து பரவி நிலைபெற்ற இக்காலத்துக்கு ஒவ்வாது. கடந்த இருநூறு ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றுவரும் ஆங்கில மொழி பல தேசிய இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இன்று நாம் வெறுமனே ஆங்கில இலக்கியம் என்று கூறினால் அது அமொிக்க இலக்கியத்தையோ ஆத்திரேலிய இலக்கியத்தையோ கனேடிய இலக்கியத்தையோ குறிக்காது.
தேசிய இலக்கியம் என்ற நமது இயக்கம் சருவதேசியத்துக்கு முரண்பட்ட ஒன்றல்ல. உயிருள்ள இலக்கியத்துக்குத் தேசிய சமுதாயப் பின்னணி அவசியம். இவ்விதப் பின்னணியில் உருவாகும் தேசிய இலக்கியமே காலத்தையும் கடலையும் தாண்டி சருவ தேசங்களையும் ஈர்க்கும் வல்லமை பெற்றதாகும்.”
இக்காலப் பகுதியிலே நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியத்துறையில் ஈழத்து வாழ்க்கை யதார்த்த பூர்வமான வடிவம் பெற்றது என்பதை முன் அத்தியாயங்களில் பார்த்தோம். அதைப் பலப்படுத்துகின்ற பிரக்ஞை பூர்வமான இலக்கியச் சித்தாந்த வௌிப்பாடாகவே இத்தேசிய இலக்கியக் கோட்பாடு அமைந்தது.
தேசிய இலக்கியம் என்பது எவ்வித வேறுபாடும் காட்டாது முழு மொத்தமான தேசியப் பண்பாட்டையும் உள்ளடக்கும் ஓர் இலக்கியக் கோட்பாடாகும். ஆனால் அதற்குள்ளே வருக்க முரண்பாடுகள் உள்ளன. வருக்க முரண்பாடுகளுக்கு இலக்கியத்தில் முதன்மை கொடுக்கும்போது, தேசிய இலக்கியத்தின் அடியாகப் பிறிதொரு இலக்கியக் கோட்பாடு உதயமாகிறது. அதுவே முற்போக்கு வாதமாகும். பரந்துபட்ட வெகுசனங்களின் நலனையும், அவர்களின் பிரச்சினைகளையும், அவர்களது விமோசனத்துக்கான வேட்கையையும் இலக்கியத்திற் பிரதிபலிக்க வேண்டும் என்ற கொள்கையே முற்போக்கு வாதத்தின் சாராம்சமாகும். காலத்துக்குக் காலம் முற்போக்கு என்ற சொல்லுக்கு உாிய பொருள் வேறுபடலாம். நமது காலத்திலே முதலாளித்துவ சமூக முறையில் இருந்து, சோசலிச சமூக முறைக்கு மாறிச் செல்லும் போக்கினையே இது குறிக்கும். ஆகவே முற்போக்கு வாதம் தவிர்க்க முடியாமல் மார்க்குசீய சித்தாந்தத்துடன் பிணைந்துள்ளது. அவ்வகையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டைவிட முற்போக்கு இலக்கியக் கோட்பாடு திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட அரசியல் சார்பு உடையதாகின்றது.
ஈழத்து இலக்கிய விமர்சனத் துறையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டைப் பிரசாரப் படுத்துவதில் முன்னணியில் நின்ற விமர்சகர்களே 1950, 60 களில் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்கு வாதத்தை, அல்லது மார்க்குசீய அணுகுமுறையைப் பிரயோகித்தனர். க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகிய இருவரும் இதில் முதன்மையாகக் குறிப்பிடத் தக்கவர்கள். அ.ந. கந்தசாமி, கே.கணேசு இளங்கீரன், ஏ.சே. கனகரத்தினா, பிரேம்சி. சில்லையூர் செல்வராசன், எச்.எம்.பி. முகையதீன் முதலியோரும் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்குக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தினர்.
முற்போக்கு விமர்சகர்கள் இயல்பாகவே இலக்கியத்தின் சமுதாய உள்ளடக்கத்தில் அதிக அக்கறை காட்டினர். இலக்கியத்தை ஒரு கலை வடிவமாக மட்டுமின்றி அதை ஒரு சமூக சாதனமாகவும் இவர்கள் கண்டனர். ஒரு படைப்பு வௌிப்படுத்தும் தொனிப் பொருளைத் தங்கள் கண்ணோட்டத்தில் மதிப்பிடுவது மட்டுமின்றி, இலக்கியத்தின் நோக்கம், பணி, பயன்பாடு ஆகியவற்றை வரையறுத்துக் கூறுவது மட்டுமன்றி, பரந்த அருத்தத்தில் இலக்கிய வடிவங்களின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை இயக்கும் சமுதாயக் காரணிகளை மார்க்குசீய அடிப்படையில் விளக்குவதும் இவர்களின் நோக்கமாய் இருந்தது, 60-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலேயே முற்போக்கு விமர்சனம் இதைச் சாதிக்கக் கூடிய முதிர்ச்சி பெற்றது. இதனால் 60க்குப் பிறகு இலக்கிய ஆய்வு, இலக்கியப் புலமை, இலக்கிய வரலாற்றுணர்வு ஆகியன ஈழத்தில் வளர்ச்சியுற்றன. கலாநிதி க. கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம், அடியும் முடியும், ஒப்பியல் இலக்கியம், பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் ஆகிய நூல்களும், கலாநிதி கா.சிவத்தம்பியின் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், நாவலும் வாழ்க்கையும். ஈழத்தில் தமிழ் இலக்கியம் ஆகிய நூல்களும் முல்லைசான்ற கற்பு, திணைக்கோட்பாட்டின் சமுதாய அடிப்படை முதலிய அவரது கட்டுரைகளும் இவ்வகையில் முதன்மையான ஆக்கங்களாகும். இவற்றிலே இலக்கிய ஆய்வுக்கு சமுதாய வரலாற்றை ஆதாரமாகக் கொள்ளும் போக்கினையும் சமுதாய பண்பாட்டு வரலாற்று ஆய்வுக்கு இலக்கியத்தைச் சான்றாக கொள்ளும் போக்கினையும் நாம் அவதானிக்கலாம்.
முற்போக்கு விமர்சகர்கள் பொதுவாகவே உள்ளடக்க ஆய்வுக்கே முதன்மை கொடுத்ததால், தனிப்பட்ட படைப்புக்களையும் படைப்பாளிகளையும் மதிப்பிடுவதில் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். சிலவேளை வௌிப்படையாக அரசியல் கோசங்களையும் கருத்துகளையும் வௌிப்படுத்தும் படைப்புக்களும் படைப்பாளிகளும் விதந்துரைக்கப்பட்டும், உயர்ந்த சில கலைஞர்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டும் உள்ளனர். இக்குறைபாடு 70 களில் முற்போக்கு விமர்சகர்களாலேயே பரவலாக உணரப்பட்டது.
உருவ உள்ளடக்கப் பிரச்சினை இலக்கிய விமர்சனத்தில் ஒரு சிக்கலான பிரச்சினையாகவே இருந்துவருகின்றது. இது பற்றிக் கொள்கையளவில் சாியான கருத்துகள் முன்வைக்கப் படினும், மதிப்பீட்டின் அகநிலைத்தன்மை காரணமாக செயல்முறையில் தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. எவ்வாறெனினும் 70 களில் இலக்கியத்தில் உருவ உள்ளடக்க இயைபினையும் இலக்கியத்தின் கலைப் பெறுமானத்தையும் அழுத்தும் விமர்சனக் குரல்கள் முற்போக்கு விமர்சன உலகில் ஒலிக்கத் தொடங்கின. எம்.ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம், ஏ.சே. கனகரத்தினா முதலியோர் இவ்வகையில் குறிப்பிடத் தக்கவர்கள். ஏ.சே. கனகரத்தினா மாக்குசீய அழகியல் பற்றிய சில கட்டுரைகளை பாடும்மீன், அலை, மல்லிகை முதலிய இதழ்களில் எழுதினார். சண்முகம் சிவலிங்கம், நுஃமான் ஆகியோாின் கருத்துகள் கவிஞன் இதழ்களிலும் ஏனைய சஞ்சிகைளிலும் வௌிவந்தன. சண்முகம் சிவலிங்கம் இது பற்றி எழுதுகையில்,
“. . . . . .எங்களுடைய இலக்கியம் எங்கள் வாழ் நிலையை எங்களின் அனுபவம் ஆக்கித்தர வேண்டும். எங்களின் உண்மையான வாழ்நிலை பிரதிபலிக்கப் பட்டால் அந்தப் படைப்பு நிச்சயமாக இயக்க இயல்ரீதியான சமூக மாற்றத்துக்கு இட்டுச் செல்கிறது. இந்த உண்மையை முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் சில விமர்சகர்கள் புாிந்து கொண்டதாகத் தொியவில்லை. அவர்கள் முற்போக்கு இலக்கியம் பற்றிய சில வாய்ப்பாட்டு உருக்களைச் செபித்துக் கொண்டு எமது உழைப்பாளர் வருக்கத்தின் கலைவளத்தை வறளச் செய்து விடுவார்களோ என்ற அச்சம் எம்மிற் பலருக்கு உண்டு” என்று குறிப்பிட்டார்.
பிரசாரப் பாங்கான கருத்து நிலையில் இருந்து அனுபவ நிலைக்கு முற்போக்கு இலக்கியம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே இவர்களின் பொதுக் கோட்பாடாக அமைந்தது.
Comments
Post a Comment