மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 32
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 31 தொடர்ச்சி)
குறிஞ்சி மலர் 12 தொடர்ச்சி
“அவர் உளறவில்லை! உண்மையைத்தான் சொல்லுகிறார். அன்று உங்களைப் பார்த்ததும் பார்க்காததுபோல் வேண்டுமென்றேதான் நான் எழுந்து போனேன். சந்தர்ப்பம் அப்படி அமைந்துவிட்டது. அன்று உங்களை ஏமாற்றிய வேதனை இன்னும் என்னை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையினால்தான் இந்தக் காய்ச்சல் வந்தது. அதுதான் என்னைப் படுக்கையில் தள்ளியது.” பேச முடியாமல் தொண்டைக் கரகரத்துக் குரல் வந்தது பூரணிக்கு. கண்களில் நீர் பனிக்க அரவிந்தனின் முகத்தைப் பார்த்தாள் அவள். அவன் அமைதியாக இருந்தான். தலையணைக்கு அடியிலிருந்து அந்தப் பாழும் கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அவன் பொறுமையாக முழுவதும் படித்தான். “இந்தா! நீயும் படி” என்று முருகானந்தத்திடமும் கொடுத்துப் படிக்கச் சொன்னான். பூரணிக்கு அதைத் தடுக்க வேண்டுமென்று தோன்றவேயில்லை. முருகானந்தம் யாரோ வேற்று மனிதனாகத் தோன்றினால் தானே தடுப்பதற்கு? அவனைப் புரிந்து கொண்ட பின் அப்படி வேற்று மனிதனாக எண்ண மனம் ஒருப்படவில்லை அவளுக்கு.
“இந்தக் கடிதம் மங்கையர் கழகத்துக் காரியதரிசி அம்மாளுக்கு வந்தது. என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அன்று எனக்கு ஏற்பட்ட வேதனைக்கு அளவே இல்லை. குழம்பிய மனத்தோடு நான் கோயிலில் உங்களைப் பார்த்தேன். பக்கத்தில் காரியதரிசி அம்மாளும் இருந்தாள். அந்தச் சமயத்தில் உங்களைப் பார்த்ததும் பேசாமல் இருந்தால் நல்லதென்று முட்டாள்தனமாக ஓர் எண்ணம் ஏற்பட்டது. அப்போதிருந்த ஆத்திரத்தில் அப்படியே செய்துவிட்டேன். அதற்காக உங்களிடமிருந்து மன்னிப்புக் கேட்கும் தகுதி எனக்கு உண்டோ இல்லையோ? நீங்கள் என்னை மன்னித்துதான் ஆகவேண்டும்.”
இதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான். முருகானந்தம் கொதிப்போடு பூரணியை நோக்கிக் கூறினான், “அக்கா! அண்ணன் உங்களை மன்னித்துவிடலாம். ஆனால் உங்களையும் அண்ணனையும் பற்றி இப்படி ஒரு கடிதம் எழுதின கைகளை நான் மன்னிக்க முடியாது. அந்தக் கீழ்மை நிறைந்த விரல்களை என் கைகளாலேயே தேடிப்பிடித்து முருங்கைக் காயை முறிப்பது போல் முறித்தெறிய வேண்டும்.”
“பொறு முருகானந்தம்! காலம் வரும். இந்த மொட்டைக் கடிதம் எழுதியதற்கே அந்தக் கைகளின் மேல் நீ இத்தனை ஆத்திரப் படுகிறாயே? அந்தக் கையால் இந்தக் கன்னத்தில் மூக்கு உடையும்படி அறை வாங்கியும் பொறுத்துக் கொண்டிருக்கிறேன் நான். ஆத்திரப்படுவதனால் மனிதர்களைத் திருத்த முடியாது. மாறாக அவர்களை இன்னும் கெட்டவர்களாக வளர்க்கத்தான் ஆத்திரம் பயன்படும்” என்று அரவிந்தன் கூறியதை முருகானந்தம் ஒப்புக் கொள்ளவேயில்லை. “நீ சும்மா இரு அரவிந்தா! கருணையால் வாழ முடிந்த காலமெல்லாம் போய்விட்டது. கருணையும் அறமும் ஆற்றலழிந்து பயன்படாமல் போய்விட்டது. கருணையும் அறமும் ஆற்றலழிந்து பயன்படாமற் போன தலைமுறையில் நாம் வாழ்கிறோம். இன்றைய வாழ்க்கையில் கருணை காட்டுகிறவர்கள் தோற்கிறார்கள். கன்னத்தில் அறைகிறவர்கள் வாழ்கிறார்கள். வயிற்றுப் பசிக்குக் கொடுத்தவர்கள் வருந்துகிறார்கள். வயிற்றில் அடிப்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். மருந்துக் கடைகளில் ஒவ்வொரு மருந்துப் புட்டிக்கும் அது பயன்படுகிற காலத்தின் எல்லை குறித்திருப்பார்கள். இந்தக் கால எல்லை கழிந்த பின் கடைக்காரர் அதை விற்க முடியாதவாறு அரசினால் அனுப்பப்பெறும் ஆய்வாளர் வந்து கண்காணித்து வெளியில் தூக்கி எறிந்தோ, அப்புறப்படுத்தியோ அழித்தல் உண்டு. இதைப் போல் அறம், நியாயம், கருணை என்கிற மாபெரும் மருந்துகள் நம்முடைய சமுதாய வாழ்வுக்குப் பயன்படுகிற காலம் அழிந்துவிட்டதோ என்று சந்தேகமாயிருக்கிறது. இல்லாவிட்டால், இப்படியெல்லாம் நடக்குமா?” என்று குமுறலோடு பேசினான் முருகானந்தம்.
“பூரணி! முருகானந்தம் எப்போதுமே இப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு விடுவான். நிதானத்துக்கும் இவனுக்கும் வெகுதூரம்” என்றான் அரவிந்தன்.
“உணர்ச்சிவசப்பட்டாலும் நன்றாகப் பேசுகிறாரே! உங்களுடைய சாயல் இவர் பேச்சில் இருக்கிறதே. இந்த மாதிரிக் கொதிப்பும், குமுறலும் ஆயிரம் இளைஞர்களுக்கு இருந்தால் தமிழ்நாடு என்றோ சீர்திருந்தியிருக்குமே?” என்று பூரணி முருகானந்தத்தை வியப்புடன் இமைக்காமல் பார்த்துக் கொண்டே அரவிந்தனுக்குப் பதில் சொன்னாள்.
“எல்லாம் அண்ணன் இட்ட பிச்சை அக்கா. அரவிந்தனின் பழக்கமில்லாவிட்டால் வெறும் தையற்காரனாய் மட்டும் இருந்திருப்பேன். இந்தத் தையற்கடையையும் நடத்திக் கொண்டு இரண்டு மூன்று தொழிற்சங்கங்களுக்கும் தலைவனாக இருக்கிறேன் என்றால் எல்லாம் அண்ணன் கொடுத்த அறிவு” என்று முருகானந்தம் பூரணியிடம் கூறினான். அரவிந்தன் சிரித்தவாறே அதை மறுத்துச் சொல்லலானான்.
“அப்படிச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளாதே தம்பீ! உன் வாயிலிருந்து தப்புத் தப்பாக வெளிப்படுகிற கருத்துகளுக்கும் நான் தான் ஆசிரியனோ என்று பூரணி சந்தேகப்படப்போகிறாள்.”
பூரணி இதைக் கேட்டு கலகலவென நகைத்தாள். அரவிந்தனிடம் அமைதியான அறிவையும், பண்பு நிறைந்த கவிதை நயங்களையும் கண்டிருந்த அவள், முருகானந்தத்திடம் கொதிக்கும் உள்ளத்தைக் கண்டாள். குமுறும் உணர்ச்சிகளைக் கண்டாள். அவற்றோடு தீமைகளைச் சாடி நொறுக்கிவிடத் துடிக்கும் கைகளையும் முருகானந்தத்திடம் அவள் பார்த்தாள். அரவிந்தன் இயற்கை அழகு நிறைந்த பசுமையான மலைச்சிகரம் போல் அவளைக் கவர்ந்தான் என்றால், முருகானந்தம் எரிமலை போல் தோன்றினான். அரவிந்தனின் இலட்சியங்களுக்கு நடுவே அன்பு மையமாயிருந்தது. முருகானந்தத்தின் இலட்சியங்களுக்கு நடுவே வெறி மையமாக இருந்தது.
காலைவரையும் படுக்கையில் நோயுற்றுக் கிடந்தவளுக்கு எங்கிருந்துதான் அந்த உற்சாகம் வந்ததோ? இருவருக்கும் தானே தேநீர் தயாரித்துக் கொடுத்தாள் பூரணி.
“நீ ஏன் இந்தக் காய்ச்சல் உடம்போடு சிரமப்படுகிறாய்? தேநீர் வேண்டாம். . .” என்று அரவிந்தன் தடுத்தும் அவள் கேட்கவில்லை. அவர்கள் இருவரும் புறப்படும்போது பதினொன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. “வருகிறேன் அக்கா” என்று ஆயிரங்காலம் பழகிவிட்டாற்போன்ற உரிமையோடு விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான் முருகானந்தம்.
அன்று மாலை மூன்று மணி சுமாருக்கு ஓதுவார்க்கிழவர் வந்து சொல்லிவிட்டுப் போன செய்தி தம்பி திருநாவுக்கரசைப் பற்றி அவளுக்குப் புரிய வைத்தது.
“என்னம்மா இந்தப் பயலை இப்படிக் கழிச்சடையாக விட்டுவிட்டாய்? சரவணப் பொய்கைப் பக்கமாகப் போயிருந்தேன். டூரிங் சினிமா வாசலில் அந்தப் பாழ் மண்டபத்தில் இரண்டு மூன்று விடலைப் பிள்ளைகளோடு காசு போட்டு மூன்று சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான் உன் தம்பி! வாயில் பீடி வேறு. என்னைப் பார்த்ததும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறான். கண்டிக்கக் கூடாதா நீ? இப்படி தறுதலையாய்த் தலையெடுக்கிறதே இந்த வயசில். பள்ளிக்கூடமே போவதில்லை போலிருக்கிறது. கெட்ட பழக்கம், நல்ல சேர்க்கையில்லை. கண்ணால் பார்த்து விட்டேன். உன்னிடம் சொல்லாமல் போக மனமில்லை” என்று கூறிவிட்டுப் போனார் ஓதுவார்க் கிழவர். அவள் உள்ளம் துடித்தது. தவித்து வருந்தினாள். ‘இறைவா! என் வாழ்வில் மனநிறைவே இல்லையா? சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது போல் ஒன்றில் நிறைவு கண்டால், இன்னொன்றில் துன்பங்களை அள்ளிக் கொட்டுகிறாயே! நான் பெண், தனியாள், ஒருத்தியாக என்ன செய்வேன்? எதைச் சமாளிப்பேன் என்று நெஞ்சு நெகிழ்ந்தாள்.
ஐந்து மணிக்கு மங்கையர்க்கரசியும் ஐந்தரை மணிக்கு சிறிய தம்பி சம்பந்தனும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தார்கள். ‘அண்ணன் பள்ளிக்கூடத்துக்கே வரவில்லை’ என்று தலைமையாசிரியர் புகார் செய்ததாகச் சம்பந்தன் அக்காவிடம் சொன்னான். ஓதுவார்க் கிழவர் சொன்ன இடத்தை அடையாளம் சொல்லி சம்பந்தனை அங்கே போய்ப் பார்த்து வருமாறு துரத்தினாள் பூரணி. அவன் போய்ப் பார்த்துவிட்டு “அண்ணனை அங்கே காணவில்லை” என்று சொன்னான். திருநாவுக்கரசை எதிர்பார்த்து இரவு பதினோரு மணிவரை வீட்டு வாயிற்படியில் காத்திருந்தாள் பூரணி. அவன் வரவே இல்லை. ‘எங்கே போய்த் தேடுவது? எப்படித் தேடுவது?’ என்று அவள் கலங்கிக் கொண்டிருந்தபோது, மங்களேசுவரி அம்மாளின் வண்டி வந்து நின்றது. அந்த நள்ளிரவில் வெளிறிப் பயந்து போன முகத்தோடு காரிலிருந்து இறங்கிய அந்த அம்மாளைப் பார்த்தபோது, பூரணிக்கு ஒன்றும் புரியவில்லை. திகைப்பாக இருந்தது, பயமாகவும் இருந்தது.
“பூரணி! இந்தப் பெண் வசந்தா தலையில் கல்லைப் போட்டுவிட்டுப் போய்விட்டாளடி! காலையில் கல்லூரிக்குப் போனவள் வரவே இல்லை. கல்லூரிக்கும் வரவில்லையாம். நிறையப் பணம் எடுத்துக் கொண்டு போயிருக்கிறாள். எங்கே போனாளென்று தெரியவில்லை. நான் ஒருத்தி எங்கேயென்று தேடுவேன்? வெளியில் சொன்னால் வெட்கக் கேடு” என்று அழுகிறாற் போன்ற குரலில் கூறினாள் அந்த அம்மாள்.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Comments
Post a Comment