தந்தை பெரியார் சிந்தனைகள் பின்னிணைப்பு 1 & 2
(தந்தை பெரியார் சிந்தனைகள் 41 இன் தொடர்ச்சி)
தந்தை பெரியார் சிந்தனைகள் 42
பின்னிணைப்பு-1
சவகர்லால் நேரு மறைந்த போது அவர் நினைவாக நேரு அவர்களைப் பற்றி அறிஞர் கருத்துகளைத் திரட்டி ‘இந்தியப் பேரொளி’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டது கழகம். அங்ஙனமே அறிஞர் அண்ணா மறைந்தபோது அம்முறையில் தொகுத்து ‘தமிழ்ப் பேரொளி’ என்ற தலைப்பில் வெளியிட்டது. தந்தை பெரியார் மறைவு நினைவாக இங்ஙனமே ஒருநூல் வெளிவரத் திட்டமிட்டது கழகம். ஆனால் எக்காரணத்தாலோ நூல் வெளிவரவில்லை. அதற்குக் கழகம் வேண்டியபடி 18.2.1974இல் தந்தை பெரியாரைப்பற்றி எழுதிய குறிப்பு இது:
“தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்த பெரியார்”
(பேராசிரியர் டாக்டர் ந.சுப்புரெட்டியார், தமிழ்ப் பேராசிரியர்,
துறைத் தலைவர், திருவேங்கடவன் பல்கலைக் கழகம், திருப்பதி)
தமிழ் கூறு நல்லுலகில், பெருமையுடனும் புகழுடனும் வாழ்ந்து புகழை மட்டிலும் இம்மண்ணுலகில் நிறத்தி விட்டுப் பொன்னுலகு புக்கவர் தந்தை பெரியார் அவர்கள். ‘மகாத்மா’ என்ற பெயர் காந்தியடிகளின் பெயருடன் முன்னொட்டாக நிலைத்து நிற்பது போல் ‘பெரியார்’ என்ற பெயரும் ‘இராமசாமி’ என்ற பெயருடன் முன்னொட்டாக நிலைத்து நிற்கின்றது. ‘மகாத்மா’ என்றாலே காந்தியை நினைவூட்டும்; ‘பெரியார்’ என்றாலே ஈரோட்டு அண்ணலை நினைவூட்டும். ‘பெயர்மாற்றம்’ நிறைந்த தமிழுலகில் பெயர் மாற்றமின்றித் திகழ்ந்தவர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள். பெரியாழ்வாரை ‘விட்டுசித்தன்’ என்று சொல்வது மரபு. அங்ஙனமே தந்தை பெரியாரை ‘இராமசித்தன்’ என்று சொல்லி வைக்கலாம். முன்னவர் ‘விட்டுவை’ நேசித்துப் போற்றியவர். பின்னவர் ‘இராமனை’ தூசித்துப்போற்றியவர். இதுவே இவர்தம்முள் வேறுபாடு. வைதாரையும் வாழவைப்பவன் இறைவன் என்ற கருத்து உண்மையாக இருப்பின் இராமசித்தனுக்கும் திருநாட்டில் இடமுண்டு. இராமபக்தனாகிய மாருதியின் திருநாளன்று (ஞாயிறு) பெரியார் அமரரானமையே இதனைக் குறிப்பாகப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்.
‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்ற ஓர் அதிகாரம் ‘திருக்குறள் அரசியல் பகுதியில்’ உள்ளது. அரசனுக்குப் பெரியார் துணையின் இன்றியாமையை வற்புறுத்துவது அப்பகுதி. வள்ளுவத்தின் இந்த உண்மையை அறிந்தோ அறியாமலோ அவரைத் துணையாகக் கொண்டு கட்சித்தலைவர்களும், ஆட்சித்தலைவர்களும், கல்வித்துறை நிபுணர்களும், பிறரும் இவரது நட்பினையும், ஆசியையும் பெற்றே இருந்தனர் என்பது நாடு நன்கறிந்த உண்மை. கொள்கையளவில் எதிர்த்துருவங்களில் நிற்பதுபோல் தோன்றும் ‘இராசாசி’ அவர்களும் பெரியார் அவர்களும் கூட தனிப்பட்ட மனித உறவில் உள்ளன்புடன் பழகினர் என்பதை இருவர் மறைந்த நாள் நிகழ்ச்சிகளும் உலகிற்கு உணர்த்திவிட்டன. ‘சிதம்பர இரகசியம்’ போல் இருந்து வந்த இருவர் நட்பையும் அவை அனைவர்க்கும் தெளிவாக்கி விட்டன. ‘உணர்ச்சிதான், நட்பாங் கிழமை தரும்’ என்ற வள்ளுவத்தை இவர்தம் ஆருயிர் நட்பால் நாடு நன்கறிந்து கொண்டது.
தந்தை பெரியார் மிகவும் கண்டிப்பானவர்; உழைப்பை வற்புறுத்துபவர். ஆனால் அன்பும் பண்பும், அடக்கமும் சீலமும், நேர்மையும் ஒழுங்கும் நிறைந்த உயர்குணச் செம்மல். தம் கருத்துகளை மூடிமறைக்காமல், விளக்கெண்ணெய் கலக்காமல், துணிவுடன் எடுத்துக் கூறுபவர். தம் வாழ்வின் தொடக்க காலத்திலேயே நாட்டுத்தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு; நாட்டுத்தொண்டிலும் இவருக்கு நிறைந்த பங்கு உண்டு. மதுவிலக்கு, தீண்டாமை, நாட்டுப்பற்று, கடவுட்கொள்கை, சமய நம்பிக்கை, கல்வி, எழுத்துச்சீர்திருத்தம், சினிமாத்தொழில் முதலிய துறைகளிளெல்லாம் இவருக்கெனத் தனி முத்திரை உண்டு. சிக்கனத்தால் சேர்த்த நிதி இவர் பெயரால் அமைந்த கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் வடிவில் நாட்டுக்கு நன்கு பயன்பட்டு வருகின்றன. நிறை வாழ்வு வாழ்ந்த தந்தை பெரியாரின் நினைவும் புகழும் தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
‘உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து யெல்லாம் உளன்’ (குறள் – 294)
என்ற வள்ளுவரின் இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்பவர் தந்தை பெரியார் அவர்கள். அவர்தம் புகழ் நீடு நின்று நிலவுவதாகும்.
பின்னிணைப்பு-2
துணை நூல் பட்டியல்
சிதம்பரனார், சாமி:
தமிழர் தலைவர்-1939 (11ஆம் பதிப்பு)
தந்தை பெரியார்:
பெரியாரின் குரல் (முல்லைப் பதிப்பகம்)
தந்தை பெரியார்:
வாழ்க்கை ஒப்பந்தம் (1999)
கண்ணன். மா:
பெரியார் கணிணி-1 (1998)
பெரியார் கணிணி-2 (1998)
பெரியாரியல்-4 கலை (1993)
பெரியாரியல்-5 தாம் (1998)
பெரியாரின் குட்டிக் கதைகள் (1998)
பெரியாரின் பழமொழிகள் (1998)
நாச்சியப்பன். நாரா:
ஈரோட்டுத் தாத்தா (1995)
பழநி.மு:
வீரமணியின் பதில்கள் (1997)- (முல்லைப் பதிப்பகம்)
விடுதலை:
தந்தை பெரியார்-121ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மலர்
வீரமணி. கி:
பெரியார் களஞ்சியம்
Periyar:
An Anthology தொகுதி-1 (1992) கடவுள் (1997)
(தொடரும்)
Comments
Post a Comment