Skip to main content

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 53

 அகரமுதல




(அகல் விளக்கு – மு.வரதராசனார். 52. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 22 தொடர்ச்சி

 

முதலில் தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொன்னபோது எனக்கு அவர்மேல் வெறுப்புத் தோன்றியது. அன்பும் இரக்கமும் இல்லாத கல் நெஞ்சராக இருக்கிறாரே. கதர் உடுத்தும் காந்தி நெறியராக இருந்தும் இப்படி நடக்கக் காரணம் என்ன என்று வருந்தினேன். அடிப்படைக் காரணத்தை நான் உணரவில்லை. ஆனால் பாக்கிய அம்மையார் எவ்வாறோ உணர்ந்து கொண்டார். அதனால்தான் அந்தப் போக்கில் பேசி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அம்மையாரின் நுட்பமான அறிவை எண்ணி வியந்தேன். படிப்புப் பல படித்துப் பரந்த உலகத்தில் பழகிய நான் உணராத, சிக்கல்களை எல்லாம், மூலைவீட்டில் தொண்டு செய்து வாழும் ஒருவர் உணர்ந்தது வியப்பாக இருந்தது. அவர் மேலும் பேசத் தொடங்கவே, ஆர்வத்தோடு கேட்டேன்.

“இப்போது உண்மை வெளிப்படையாகத் தெரிந்து விட்டது அல்லவா? உன் கணவர் ஏன் கோடு போடுகிறார் என்று காரணம் தெரிந்ததா? அவர் தம் குடும்பத்துக்கு என்று தனி வழி வகுத்துக் கொண்டு கவலை இல்லாமல் வாழ முயற்சி செய்கிறார். நல்லதுதானே?”

“சரி, அக்கா! சிக்கனமாக வாழ வேண்டியதுதான். ஒப்புக் கொள்கிறேன். பட்டு உடுத்த வேண்டா என்கிறார். திருமணங்களுக்குப் போனாலும் வேறு அலுவல்களுக்குப் போனாலும் பருத்தியாடையே போதும் என்கிறார். தாம் கதர் உடுத்திக்கொண்டே எதற்கும் போகவில்லையா என்று தம்முடைய பழக்கத்தைக் காட்டுகிறார். அவர் ஆண்மகன், எப்படிப் போனாலும் மதிப்பு உண்டு. நான் அப்படிப் போனாலும் மற்றப் பெண்கள் மதிக்கமாட்டார்களே என்று சொன்னால், அப்படிப் பட்டுக்காக மதிக்கின்றவர்களாக இருந்தால் அவர்கள் நல்லவர்கள் அல்ல என்கிறார். அப்படிப்பட்டவர்களின் உறவும் பழக்கமும் இல்லாமலிருப்பதே நமக்கு நல்லது என்கிறார்.

ஆடம்பரக்காரரோடு பழகினால் ஒரு வேளையாவது மனத்தில் ஏக்கம் வரும்; கவலை வரும்; பழகாமலே இருந்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்கிறார். நாட்டு எலி நகரத்து எலியோடு பழகாமல் இருப்பதே நல்லதாம், பட்டுச் சேலைக்காக நீங்கள் பணம் செலவிட வேண்டா; எங்கள் தாய்வீட்டார் கொடுக்கும் பட்டுச் சேலை போதும் என்று சொன்னேன். அதற்கும் என்னை விடவில்லை. மனத்திலேயே ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்தால்தான் சிக்கன வாழ்க்கையும் கவலையற்ற வாழ்க்கையும் முடியுமாம். தாய்வீட்டுப் பட்டாக இருந்தாலும், அதை விரும்புகிற மனமே நல்ல மனம் அல்லவாம். இன்றைக்கு அந்த ஆசைக்கு இடம் கொடுத்தால் நாளைக்கு வேறு பல ஆடம்பர ஆசைகள் மனத்தில் வருமாம். நாம் தனிச்சாதி போல் ஆடம்பரக்காரரிடமிருந்து பிரிந்து வாழலாம் என்கிறார். இது நடைமுறையில் முடியுமா?”

எனக்கு இந்தப் பேச்சு ஒரு முறையீடுபோல் இருந்தது. தங்கையின் நிலைமை இரங்கத்தக்கதாக இருந்தது. அதே நேரத்தில் அவளுடைய கணவரைக் குறை கூறவும் முடியவில்லை.

“நல்ல கதைதான்” என்றாள் என் மனைவி.

பாக்கிய அம்மையாரின் குரலில் இரக்கம் புலப்பட்டது. “என்ன செய்வது அம்மா! அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது. அப்படி நடந்தால் நல்லது என்றுதான் சொல்வேன். ஆனால் நீ இங்கே குழந்தை போல் செல்வமாக வளர்ந்துவிட்டாய். உன் மனத்துக்கு எல்லாம் புதுமையாக இருக்கும். பயப்படாதே, கவலை வேண்டா. முதலில் அவர் சொன்னபடியே நட, எதிர்த்துப் பேசாதே, உன்மேல் அன்பு வளரட்டும்; நாளடைவில் உன்மேல் அவருக்கே இரக்கம் ஏற்பட்டு விடும். ஆனால் அதுவரையில் பொறுக்க வேண்டும். பொறுப்பது துன்பமாகத்தான் இருக்கும். ஆனாலும் பொறு” என்றார்.

“அவர் நெஞ்சம் கல் நெஞ்சம்; அவருக்கு இரக்கம் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை.”

“அப்படிச் சொல்லாதே மணிமேகலை; அம்மாவிடம் முதல் முதலில் அப்பா எப்படி இருந்திருக்கிறார் தெரியுமா? இன்றைக்கு எப்படி இருக்கிறார்? அம்மாவுக்கு காய்ச்சல் என்றால் மளிகைக் கடையை விட்டு நான்கு முறை வந்து பார்க்கிறார். யாருக்குமே நாளடைவில்தான் அன்பும் இரக்கமும் வளரும். நீ மட்டும் கொஞ்சம் பொறுமையைக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுமையும் விட்டுக் கொடுத்தலும் இல்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை.

காதல் காதல் என்று ஒரே நிலையில் நின்று திருமணம் செய்து கொள்கிறார்களே, அவர்களுக்கும் இந்தப் பொறுமையும் வேண்டும் விட்டுக் கொடுத்தலும் வேண்டும். நம் ஊரிலேயே பார், அந்த நெல்மண்டிக்காரர் பிள்ளை எதிர்வீட்டுப் பெண்ணோடு பழகிக் காதல் ஏற்பட்டு மணம் செய்து கொண்டான். ஊரெல்லாம் தெரியும். இப்போது அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறதாம் தெரியுமா? அந்த வீட்டு வேலைக்காரி ஒரு நாள் இங்கு வந்திருந்தபோது சொன்னாள். எலியும் பூனையுமாக இருக்கிறார்களாம். வேறு வழி இல்லை என்று இப்போது வாழ்கிறார்கள்.

காதல் ஒரு வகை ஆசை. அது வெறிபோல் வளரும்போது குற்றங்களே தெரிவதில்லை. அது தணியும்போது மற்றக் குடும்பங்களின் நிலை வந்து விடுகிறது. அப்போது பண்புகள் இருந்தால்தான் வாழமுடியும். இல்லையானால் வாழ்வு இல்லை. ஆகவே முதலிலே அன்பு இல்லை, இரக்கம் இல்லை என்று நீ கவலைப்படாதே. நம்பிக்கையோடு நான் சொல்வதைக்கேள். எந்த ஆண்களை நம்பக்கூடாது தெரியுமா? தன்னலம் மிகுந்தவர்களைத் தான் நம்பக்கூடாது.

அவர்கள் இன்றைக்கு அன்போடு நடப்பதுபோல் இருக்கும். நாளைக்கு கைவிட்டு விடுவார்கள். உன் கணவர் கொள்கை உடையவர்; ஒரு நெறியை நம்புகிறவர்; சொல்கிறபடி நடக்கிறவர். ஆகையால் நீ அவரை நம்பலாம். உனக்கு ஒரு வழி அவருக்கு ஒரு வழி என்று நடந்தால், அப்படிப்பட்ட ஆளை நம்பக்கூடாது. சில ஆண்கள் வீட்டிலேயே சிக்கனம் பிடிக்கச் சொல்லி வெளியே சீட்டு ஆடிக் காசைத் தொலைப்பார்கள். மனைவி மக்கள் வெறுஞ்சோறு உண்ணச் செய்து தாம் மட்டும் ஓட்டலில் சுவையாகத் தின்பார்கள். மனைவி மக்களை வீட்டில் ஏமாற்றிவிட்டுத் தாம் மட்டும் நாடகமும் சினிமாவும் விடாமல் பார்ப்பார்கள்.

மனைவி மக்களுக்குக் கந்தை போதும் என்று விட்டு விட்டுத் தாம் மட்டும் அலமாரியிலிருந்து மடிப்பு மடிப்பாக எடுத்து உடுத்திக்கொண்டு ஊர் சுற்றுவார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் நம்பக்கூடாது. அவர்களுக்கு ஒரு நாளும் உண்மையான அன்பு ஏற்படாது. உயிரையே விடுவது போல் உருகி உருகிப் பேசினாலும் அவர்களை நம்ப முடியாது; நம்பக்கூடாது. உன் கணவர் அப்படிப்பட்டவரா, மணிமேகலை! உனக்குப் பட்டு வேண்டா என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் ஆடம்பரமாகத் திரிகிறாரா? திருமணத்தின்போதே அவர் வெள்ளைக் கதர் தவிர வேறு உடுத்தவில்லையே.

அப்பா போட்ட மோதிரத்தையும் மறுநாளே கழற்றி உன் கையில் கொடுத்துவிட்டார் என்று சொன்னாயே. பட்டாசை பொன்னாசை இல்லாமல் அவர் தம் மனத்தைப் பயன்படுத்திக் கொண்டார். நீயும் அப்படி ஆகிவிட்டால், வாழ்க்கை கவலை இல்லாததாக இருக்கும் என்று நம்புகிறார். அது உண்மைதான். காந்தியடிகள் பெரிய பெரிய போராட்டம் எல்லாம் நடத்தியும் கவலை இல்லாமல் இருப்பதற்கு அதுதானே காரணம்? கத்தூரிபாவின் வாழ்க்கை எவ்வளவு உயர்ந்த வாழ்க்கை!

அவ்வளவு தொலைவு உன்னால் நடக்கமுடியாதிருக்கலாம். இருந்தாலும், அந்த வழி நல்ல வழி, நேர் வழி, கவலையற்ற வழி, துணிவான வழி, வீரர் நடக்கும் வழி. அதனால்தான் சத்தியசோதனை படி படி என்று உனக்குப் பலமுறை சொன்னேன். நீ அக்கறையோடு படிக்கவில்லை. அன்று காலையில் தாயுமானவர் பாடலில் ஒரு பாட்டுப் படித்து அப்படியே மனம் உருகிவிட்டது. ‘ஓடும் செம்பொன்னும் ஒன்றாகக் கண்டவர்கள், நாடும் பொருளான நட்பே பராபரமே.’ அந்த நிலை எவ்வளவு பெரிய நிலை! நாம் அவ்வளவு தொலைவுக்குப் போகவேண்டா. ஆடம்பரத்தில் ஆசை குறைந்தால் போதுமே. உடனே எனக்குத் திருக்குறள் நினைவுக்கு வந்தது. “வேண்டாமை அன்ன விழுச் செல்வம் வேண்டின் உண்டாகத் துறக்க.” மனப்பாடம் செய்தாயே, நினைவு இருக்கிறதா? இனிமேல் கொஞ்சம் ஆழ்ந்து படி. மற்றப் பெண்கள் மதிப்பதைப் பற்றிக் கவலைப்படாதே. நீ அவர்களை விட மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று வாழ்ந்து காட்டு. அதுவே பெரிய செல்வம்!”

பாக்கியம் பேச்சைக் கேட்டதும், என்னால் படுக்கையில் அமைதியாக இருக்க முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தால் அதனால் அவர்களின் பேச்சு நின்று விடுமே என்று எண்ணி மறுபடியும் அப்படியே கிடந்தேன். சில புத்தகங்களையும் சில இதழ்களையும் படித்துவிட்டு அந்த அம்மையார் எப்படி இவ்வளவு விரைவில் அறிவை வளர்த்துக்கொள்ள முடிந்ததோ என்று வியந்தேன். கல்லூரியிலும் பல நூல்களைப் படித்தேன். அறிவை வளர்த்துக்கொண்டேன்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue