Skip to main content

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 52

 அகரமுதல




(அகல் விளக்கு – மு.வரதராசனார். 51. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 22

அங்கங்கே வேலைகளுக்கு முயன்றேன். சில இடங்களுக்கு எழுதினேன். சில இடங்களில் நேரில் சென்றும் முயன்றேன். பணியாளர் தேர்வாணையத்துக்கு  விண்ணப்பம் எழுதினேன். அதற்கு உரிய தேர்வும் எழுதினேன். தொழிலும் இன்றிக் கல்வியும் இன்றி வாலாசாவில் பொழுது போக்குவது ஒரு துன்பமாக இருந்தது. பெரிய குடும்பத்தில் ஒரு சின்னக் குடும்பமாக எங்கள் இல்வாழ்க்கை நடந்தது. ஆகையால் குடும்பச் சுமை உணரவில்லை.

மனைவி கயற்கண்ணிக்கு எங்கள் வீடு புதிது அல்ல; எனக்கும் அவள் புதியவள் அல்ல. இடையிடையே வேளூர்க்கும் வேலூர்க்கும் போய் வந்தது தவிர மாறுதல் ஒன்றும் இல்லை. மாலன் வீட்டுக்கு ஒருமுறை குடும்பத்தோடு போய்வர எண்ணினேன். முதலில் அவன் அல்லவா குடும்பத்தோடு இங்கே வந்து போகவேண்டும். அவன் வந்தபிறகு வேண்டுமானால் நாம் போகலாம் என்று போலி மானம் தடுத்தது. ஆகையால் அங்கும் போகவில்லை. அவனுக்கு ஒரு மகன் பிறந்த செய்தி தெரிவித்திருந்தான். அதற்கு மறுமொழியாக என் வாழ்த்தை அறிவித்திருந்தேன். அதற்குப் பிறகு தேர்வுக்குப் படித்து வருவதாக எழுதியிருந்தான். பிறகு தன் மனைவி எங்கே இருப்பதைப் பற்றியும் அவன் குறிக்கவில்லை. தேர்வு எழுதி முடித்த செய்தியைத் தெரிவித்து இந்த முறை நம்பிக்கையோடு இருப்பதாகக் குறித்திருந்தான்.

அவன் தேர்வில் வெற்றி பெற்ற செய்தியை அறிந்ததும் அவனுக்குக் கடிதம் எழுதி என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். வேலை தேடும் முயற்சியைக் குறித்து என் அறிவுரையைக் கோரி மறுமொழி எழுதினான்.

என் நிலையே சோர்வாக இருக்கும்போது, நான் எப்படி அவனுக்கு வழி காட்டுவது என்று அவனுக்கு ஒன்றும் எழுதாமல் இருந்தேன். எதிர்பாராத வகையில், என்னை நேரில் வருமாறு பணியாளர் தேர்வாணையம் அழைத்திருந்தது. அவர்கள் கேட்ட வினாக்களுக்குத் தக்க விடைகள் தந்தேன். சில நாட்களுள் வேலைக்கு உத்தரவும் வந்தது. கோயமுத்தூரில் கூட்டுறவுத் துணைப்பதிவராக வேலை வந்திருந்தது. மனைவியை வீட்டிலேயே விட்டுக் கோவைக்குப் புறப்பட்டுத் தொழிலில் சேர்ந்தேன்.

தொழில்துறை புதியது ஆகையால் இரவும் பகலும் என் சிந்தனை அதில் மூழ்கியிருந்தது. ‘செய்வன திருந்தச் செய்’ என்ற அறிவுரையைக் கடைப்பிடித்துத் தொடக்கத்திலிருந்தே சிறு கடமையையும் செம்மையாய்ச் செய்து வந்தேன். இரண்டு வாரங்களுள் வேலையில் பழகிவிட்டேன். எனக்கு மேலதிகாரியாக வாய்த்தவர் நல்லவராகவும் திறமையுடையவராகவும் இருந்தார். ஆகையால் வேலையைக் கற்றுக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஊக்கமாகவும் இருந்தது. கோவையில் மூன்று மாதங்கள் பயிற்சி போல் இருந்து கற்றுக் கொண்ட பிறகு வேறு எந்த இடத்திற்காவது மாற்றுவார்கள் என அறிந்தேன். ஆகையால் மனைவியை அழைத்துக் கொண்டு போய்க் கோவையில் குடும்பம் நடத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லை.

இடையே ஒருமுறை ஊர்க்குப் போயிருந்தேன். தங்கை மணிமேகலை அப்போது புக்ககத்திலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். ஒருநாள் நான் பகலுணவுக்குப் பிறகு கட்டிலில் படுத்துறங்கி விழித்தபோது தங்கையும் கயற்கண்ணியும் பாக்கிய அம்மையாருடன் பேசிக்கொண்டிருந்தது கேட்டது. தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருந்தாள்.

“எதிலும் பிடிவாதக்காரராக இருக்கிறார். எதை எடுத்தாலும், ஒரு கோடு போட்டாற்போல் இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிறார். இல்லாவிட்டாலும் இது தப்பு அது தப்பு என்கிறார்” என்றாள் தங்கை.

“ஐயய்யோ! இதைக் கேட்டாலே பயமா இருக்குது அம்மா” என்றாள் என் மனைவி.

“என் அண்ணன் ஒரு நாளும் அப்படிக் கண்டிப்பாக நடக்கமாட்டார். நான் சொல்கிறேன் அண்ணி” என்றாள் தங்கை.

“மணிமேகலை! நீ சொல்வதைப் பார்த்தால் அவர் ஒன்றும் கெட்டவராகத் தெரியவில்லையே” என்றார் பாக்கியம்.

“கெட்டவர் அல்ல. பிடிவாதக்காரர். உலகத்தில் அங்கங்கே குடும்பங்களில் மனைவியின் விருப்பம்போல் விட்டு விட்டுக் கணவன்மார் எதிலும் தலையிடாமல் இருக்கிறார்கள். நம் வீட்டில் அப்பா இல்லையா? என் வீட்டுக்காரர் நான் கட்டுகிற புடைவை முதல் வாங்குகிற பொருள்கள் வரையில் எதற்கும் இப்படி அப்படி என்று கட்டளை போடுகிறார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கொடுத்த உரிமைகூட இவர் கொடுப்பதில்லை. சிவப்பு மையில் எழுத வேண்டியதைக் கறுப்பு மையில் எழுதினால் ஆசிரியர்கள் பெரிய குற்றமாகக் கருதுவதில்லை. இரண்டு பக்கம் எழுத வேண்டியதை இரண்டரைப் பக்கமாக எழுதினால் கோபித்துக் கொள்வதில்லை. ஒரு நாள் இரண்டு நாள் படிக்காமலே வந்தாலும், நேரம் கழித்து வந்தாலும் மன்னித்து விடுகிறார்கள். இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறதே.”

தங்கையின் இந்தப் பேச்சைக் கேட்டு என் மனைவி சிரித்தாள்.

பாக்கிய அம்மையாரின் சிரிப்புக் கேட்கவில்லை. “ஊ-ம்?” என்ற குரல் மட்டும் பெருமூச்சோடு கலந்து கேட்டது. “கோடு போட்டு வாழ்க்கை நடத்துவது நல்லதுதானே அம்மா! போட்ட கோட்டில் நடப்பது எளிது அல்லவா? ஒரு காட்டில் நடக்க வேண்டுமானால், வழி இல்லாமல் நடந்து போவதுதான் துன்பம். ஒற்றையடிப்பாதை ஒன்று இருந்தால், அதில் நடந்து போவதில் கவலையே இல்லை. ஒரு பாதையும் இல்லாத இடத்தில் இப்படி நடப்பதா அப்படி நடப்பதா, வலக்கைப் பக்கம் திரும்பலாமா இடைக்கைப் பக்கம் திரும்பலாமா, இந்தத் திசையா அந்தத் திசையா என்று நூறு முறை தயங்கித் தயங்கிப் போகவேண்டும். அப்போதும் மனக்குறை தீராது. அல்லலாக முடியும். ஒற்றையடிப்பாதை இருந்துவிட்டால் போதுமே. கவலை இல்லாமல் போகலாமே” என்றார்.

“மெய்தான் அக்கா! உலகத்தார் போகிய போக்கில் நாம் போகலாமே. துன்பம் இல்லாமல் இருக்குமே!”

“நீ சொல்வது நல்லதுதான். நம்முடைய முன்னோர் காலத்தில் அப்படித்தான் வாழ்க்கை நடத்தினார்கள். கவலையே இல்லாமல் இருந்தது. பெண்களுக்குக் குடும்பப் பண்பாடு என்று இருந்தது. ஆண்களுக்கு உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று இருந்தது. இப்போது நம் நாட்டில் பலவகையான நாகரிகம் வந்து கலந்துவிட்டன. பணம் ஏற்பட்டு வாழ்க்கையைப் பலவகையாகப் பிரித்துவிட்டது. யாரை யார் பின்பற்றுவது என்று தெரியவில்லை. ஐம்பது உரூபாய் வருவாய் உள்ளவர் ஐந்நூறு உரூபாய் வருவாய் உள்ளவரைப் பின்பற்ற முடியுமா? அவர் ஐயாயிர உரூபாய் வருவாய் உள்ளவரைப் பின்பற்ற முடியுமா?” எல்லாரும் ஒரே ஊரில் அடுத்தடுத்து வாழவேண்டியுள்ளது.

போக்கு வரவுக் கருவிகள் பலரைக் கொண்டுவந்து கலந்துவிட்டன. பத்திரிகை, திரைப்படம் முதலானவை பல கருத்துகளைக் கொண்டு வந்து கலந்துவிட்டன. இப்போது குடும்பப் பண்பாடு என்று ஒன்று தனியே எப்படிக் கற்றுக் கொள்வது? உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று சொன்னாலும் உலகில் எந்த வகையான மக்களைப் பார்த்து நடப்பது? முன்காலத்தில் நம் நாட்டு நாகரிகமே ஒரு கிராம அமைப்புப் போல் தெளிவாக எளிமையாக இருந்தது.

இப்போது நம் நாட்டு வாழ்க்கை ஒரு சந்தைபோல் பெருங் கலப்பாக ஆவாரமாக ஆகிவிட்டது. ஆகையால் இப்போது உலகத்தாரைப்போல் நடப்பது என்றால் யாரைப் பார்த்து நடப்பது? கணவன் மனைவி என்ற இரண்டே பேர் தனிக்குடும்பம் நடத்துகிறவர்கள் இதோ நம்முடைய பெரிய குடும்பத்தைப் பார்த்துப் பின்பற்ற முடியுமா? கிராமத்துக் குடும்பம் நகரத்துக் குடும்பத்தைப் பார்த்துப் பின்பற்ற முடியுமா? நகரத்தில் பேருந்து பயணத்துக்குக் காசு இல்லாதவர்கள் கார் வைத்து வாழ்பவர்களைப் பின்பற்ற முடியுமா?”

“இதே போராட்டம்தான். எல்லாம் வரவு செலவு வகையில் வரும் துன்பங்கள்தான்.”

“பார்த்தாயா, மணிமேகலை! இப்போது தெரிந்து கொண்டாயா? அடிப்படையில் இந்தக் குறை இருக்கும்போது உலகத்தைப் பார்த்து வாழவேண்டும் என்று ஏன் சொல்கிறாய்?”

“நான் வரவு செலவு வகையில் தலையிடப் போவதே இல்லை அம்மா! பேசாமல் சமைத்துப் போட்டுக்கொண்டு கவலை இல்லாமல் இருக்கப்போகிறேன்” என்றாள் என் மனைவி குறுக்கிட்டு.

“உனக்கு என்ன அண்ணி! அண்ணனுக்குச் சம்பளம், படி எல்லாம் முந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வரும். தடபுடலாகக் குடும்பம் நடத்தலாம். நாங்கள் எழுபது ரூபாய்க்கு ஏங்குகிறோம். நீ கேட்டு வந்தவள்” என்றாள் தங்கை.

தங்கையின் சொல்லைக் கேட்டதும் என் உள்ளம் வருந்தியது. ஏழைக்குக் கொடுத்தோமே என்று கவலை எங்கள் உள்ளத்திலே முதலிலிருந்தே இருந்துவந்தது. இருந்தாலும், அன்று தங்கையே வாய்விட்டுக் குடும்பத் துன்பத்தைச் சொன்னபோது வேதனையாக இருந்தது. என்ன செய்வது. கொடுத்துவிட்டோம், இனி எப்படியாவது வாழவேண்டும் என்று மனம் ஆறுதல் அடைவதைத் தவிர வேறு வழி இல்லை.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்