மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 28
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 27 தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 11 தொடர்ச்சி
பூரணி தேநீர் பருகிவிட்டுக் கோப்பையை வைத்தபோது வசந்தா மேலேயிருந்து எங்கோ வெளியே புறப்படுகிறார் போன்ற கோலத்தோடு வந்து கொண்டிருந்தாள்.
“வசந்தா! உன் மேல் எனக்கு ஒன்றும் மனவருத்தம் இல்லை. நீ கேட்ட கேள்விகளுக்குத்தான் அப்படி நான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே” என்று அவளைச் சமாதானப்படுத்துகிற முறையில் சொன்னாள் பூரணி. ஆனால் இந்தச் சொற்களைக் கேட்டதாகவோ, பொருட்படுத்தியதாகவோ காட்டிக் கொள்ளாமல் முகத்தைக் கோணிக் கொண்டு போய்விட்டாள் வசந்தா. அவளிடம் ஏன் பேச்சுக் கொடுத்தோம் என்று தன்னையே நொந்து கொள்ள வேண்டிய நிலையாகி விட்டது பூரணிக்கு. விடைபெற்றுக் கொண்டு புறப்படும் போது மறுபடியும் பூரணியை எச்சரித்து அனுப்பினாள் மங்களேசுவரி அம்மாள்.
“மறுபடியும் இப்படி ஏதாவது வம்பு வந்து சேராமல் பார்த்துக் கொள் அம்மா! உன்மேல் யாரும் அப்பழுக்குச் சொல்லும்படி நேரக்கூடாது. இந்தச் செய்தியைப் பற்றி வேறு யாரிடமும் மூச்சுவிடக்கூடாதென்று காரியதரிசி அம்மாளிடம் சொல்லிவிடுகிறேன் நான்.”
அந்த அம்மாளின் எச்சரிக்கையைக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறிய போது பூரணியின் மனநிலை சரியாக இல்லை. புதுமண்டபத்து வியாபாரியின் சூழ்ச்சிகளையும் முரட்டுத் தனத்தையும் பற்றி அவள் ஓரளவு அறிந்திருந்தாள். சிலந்தி கூடு போட்டுக் கொண்டு உயிர்களைப் பிடித்துக் கொண்டு அழிக்கிற மாதிரிப் பிறரை அழிப்பதில் கூடத் திட்டமிட்டுக் கொண்டு வேலை செய்கிறவர் அவர். இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ? அற்புதமான சொற்பொழிவைச் செய்துமுடித்த பெருமையில் மனம் மலர்ந்து இருந்த போது அன்று தன் மேல் சுமத்தப்பட்ட தீமையை நினைக்க நினைக்க வாழ்க்கையின் மேலும், உலகத்தின் மேலும், மனிதர்கள் மேலும் பொறுத்துக் கொள்ள முடியாத வெறுப்பு ஏற்பட்டது அவளுக்கு. வாழ்க்கையில் பொறாமை இருக்கிறது! வாழ்க்கையில் வெறுப்புகள் இருக்கின்றன! வாழ்க்கையில் சுயநலம் இருக்கிறது! வாழ்க்கையில் வாழ்க்கை தான் இல்லை என்று கொதிப்போடு எண்ணினாள் அவள். ‘ஒரு காலத்தில் வாழ்க்கையில் சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் இருந்தன. இப்போதோ அவநம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில்தான் வாழ்க்கையே இருக்கிறது‘ என்று அரவிந்தன் தன் ஏட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்ததை அவள் மீண்டும் இப்போது நினைத்துப் பார்த்தாள். அந்த வாக்கியங்களின் பொருள், ஆழம் இப்போது அவளுக்கு நன்றாக விளங்கியது. ‘கேவலம் முட்டாள்தனமாக எழுதப்பட்ட ஒரு மொட்டைக் கடிதம் காரியதரிசி அம்மாளின் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்குகிறது என்றால் சந்தேகங்களுக்கிடையே தான் வாழ்கிறோம் என்பதில் தவறு என்ன இருக்க முடியும்?’
வழக்கத்தைக் காட்டிலும் அன்று சொற்பொழிவு சற்று விரைவாக முடிந்திருந்ததனால் வீட்டுக்குத் திரும்ப நேரம் ஆகவில்லை. இன்னும் நிறைய நேரம் இருந்தது. மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போகலாமென்று அவளுக்குத் தோன்றியது. மனப்புண் ஆறுவதற்கு அந்தப் பெரிய கோயிலின் புனிதமான சூழ்நிலையை அவள் விரும்பினாள். மேற்குக் கோபுரத்தின் கீழே உரித்த பலாச்சுளையைத் தட்டு நிறையப் பரப்பிக் கொண்டு ஈக்களையும், வறுமையையும் ஒன்றாக ஓட்டிக் கொண்டிருக்கும் கூடைக்காரிகள். கோயிலுக்குள் போகிறவர்கள் கழற்றிப் போடுகிற பாதரட்சைகளை அவர்கள் திரும்புகிற வரை பாதுகாத்து அந்தப் பாதுகாப்பு வேலைக்குக் காலணாவும், அரையணாவும் கூலி வாங்கி வயிறு வளர்க்கும் ஏழைக் கும்பல். சொந்தத் தலையில் எண்ணெயோ, பூவோ இன்றி உலகத்துக்குக் கூவிக்கூவிப் பூ விற்கிற பூக்காரிகள். தூக்கணாங் குருவிக்கூடு மாதிரி தாறுமாறாக முளைத்த தாடிக்கு நடுவே பொந்துபோல் வாய் தெரிய ஏதோ கேட்கும் பஞ்சைப் பரதேசிப் பிச்சைக்காரர்கள். இவர்களெல்லாம் தான் நிரந்தர வசிப்பாளர்கள். மேலே பார்த்து அண்ணாந்து உயர்ந்த கோபுரத்தின் அடியில் கீழே பார்த்து வயிற்றுக்காகக் குனிந்து தேடும் மனிதர்கள். ‘இங்கே போ’, ‘இங்கே போ’ என்று பிடரியைப் பிடித்துத் தள்ளுகிற மாதிரி மேற்குக் கோபுரத்துக்குள் நுழைகிற வழியில் நல்ல காற்று பாய்ந்து வீசியது. கண்ணுக்கு முன் தெரிந்த உலகத்தின் துன்பங்களில் உள்ளத்தின் துன்பங்களை மறக்க முயன்று கொண்டே கோயிலுக்குள் நுழைந்தாள் பூரணி. எல்லா சந்நிதிகளிலும் வழிபாட்டை முடித்துக் கொண்டு பொற்றாமரைக் குளத்தின் படிகளில் போய் உட்கார்ந்தாள். அந்த இடத்தில் குளத்துக்கு நேரே மேலே திறந்த வெளியாக வானம் தெரிந்தது. திரையைக் கிழித்து யாரோ எழுதி வைத்திருந்த சித்திரத்தைக் காட்டினாற்போல் விண்மீன்கள் சிதறிய கருநீல வானம் அழகாய்த் தோன்றியது. அப்போதைய மனநிலையில் நட்சத்திரங்களைப் பற்றித் தமிழகத்துக் கவிஞர் ஒருவர் கற்பனை செய்திருப்பது நினைவு வந்தது அவளுக்கு. ‘உலகத்துத் துன்பங்களைப் பகற்போதெல்லாம் கண்டு கண்டு வெதும்பிக் கொதித்ததன் காரணமாக இரவில் வானத்து மேனி மீது கொப்பளித்த கொப்புளங்களே நட்சத்திரங்கள்’ – நினைத்துப் பார்ப்பதற்குச் சுவையாயிருந்தது இந்தக் கற்பனை.
“பூரணி! இங்கே உட்கார்ந்து என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” படிக்கட்டுகளுக்கு மேலேயிருந்து அவளுக்குப் பழக்கமான குரல் கேட்டது. மேலே படிகள் முடிந்து கல் தரையுடன் கலக்கிற இடத்தில் நெற்றியில் கோயில் குங்குமமும் இதழ்களில் குறுநகையுமாக அரவிந்தன் நின்று கொண்டிருந்தான். கழுத்தில் வளைத்துச் சுற்றின கைக்குட்டையும் முன் நெற்றியில் வந்து விழும் கிராப்புத் தலையுமாக வெற்றிலைக் காவியேறிய உதடுகளோடு இன்னோர் இளைஞனையும் அரவிந்தனுக்குப் பக்கத்தில் கண்டாள் அவள். மற்போர் செய்பவர்களுக்கு இருப்பது போல் தேகக் கட்டும் இருந்தது அரவிந்தனோடு பார்த்தவனுக்கு. அப்படி ஓர் ஆணோடு சேர்ந்து அரவிந்தனைப் பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தது பூரணிக்கு. இருவரும் கை கோர்த்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தால் அந்த முரட்டு ஆள் அரவிந்தனுடன் வந்தவன் தான் என்று தோன்றியது. இருவரும் படிகளில் இறங்கி அவளை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது படித்துறையில் சிறிது தள்ளித் தனக்கு வலப்பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் மேல் தற்செயலாக அவள் பார்வை சென்றது.
தேங்காய்ப் பழம் பிரசாதத் தட்டோடு அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்ததும் பூரணி மிரண்டாள். பேசிக் கொண்டிருந்த இருவரும் அவளைப் பார்த்துவிட்டனர். அவர்கள் இருவரில் ஒருத்தி மங்கையர் கழகத்துக் காரியதரிசி. மற்றொருத்தி துணைத் தலைவி. இருதலைக் கொள்ளி எறும்பு போல் இரண்டுங்கெட்ட நிலையில் தவித்தாள் பூரணி. பார்ப்பதற்குக் காலித்தனமானத் தோற்றத்தையுடைய எவனோ ஒரு முரட்டு இளைஞனோடு கைகோர்த்துக் கொண்டு முகத்தில் முறுவல் மிளிர அவளை நோக்கிப் படியிறங்கி வருகிறான் அரவிந்தன். அவள் மேல் பழியையும் அபவாதத்தையும் சுத்தத் தேடிக் கொண்டிருக்கும் இருவர் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்பம் நேரம் பார்த்து இடம் பார்த்து பொருத்தமாகச் சதிசெய்து கொண்டிருப்பதைப் பூரணி உணர்ந்தாள். திடீரென்று அவள் மனத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். அரவிந்தனைப் பார்க்காதவள் போல் இலட்சியமே செய்யாதவள் போல் எழுந்து விடுவிடுவென நடந்து விலகிப் படியேறினாள். பின்புறம் ‘பூரணி’ என்று அவன், உள்ளத்து அன்பெல்லாம் குழைத்துக் குவித்து ஒலியாக்கி அழைக்கும் குரல் அவளைத் தடுக்கவில்லை, தயக்கமுறச் செய்யவில்லை. அந்தச் சிறிது நாழிகை நேரத்தில் அவள் தன் மனத்தை நெகிழ முடியாத கல்மனமாகச் செய்து கொண்டிருந்தாள். ஓட்டமும் நடையுமாகத் தெற்குக் கோபுர வாசலுக்குச் சென்று தெருவோடு போய்க் கொண்டிருந்த ஒரு சைக்கிள் ரிக்சாவில் ஏறிக்கொண்டாள். வாடகை கூடப் பேசிக் கொள்ளவில்லை. நேரே திருப்பரங்குன்றத்துக்கு விடச் சொன்னாள். பயத்தால். . . அல்லது பயத்தைப் போன்ற வேறு ஏதோ ஒரு உணர்வால் உடல் வேர்த்தது அவளுக்கு. செய்யத் தகாததை, செய்யக் கூடாததைச் செய்துவிட்டுப் போவது போலிருந்தது. யாருடைய மென்மையான உள்ளத்துக்கு அவள் தன்னை தோற்கக் கொடுத்தாளோ, அதே மென்மையான உள்ளத்தை மிதித்துவிட்டுப் போகிறாள். இப்போது எந்த முகத்தில் அவள் இதயத்தை மலர்வித்த மலர்ச்சி பூத்ததுவோ அந்த முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டுப் போவதைப் போல் போகிறாள். “பாவி! எவ்வளவு பெரிய கொடுமையைச் செய்கிறாய்? இது அடுக்குமா உனக்கு” என்று அவள் உள்ளமே இறுக்கத்திலிருந்து தானாக நெகிழ்ந்து அவளைக் குடைகிறதே.
Comments
Post a Comment