Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 31

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 30 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர் 12 தொடர்ச்சி

சில நாட்களாகவே அவன் போக்கு ஒரு மாதிரி விரும்பத்தகாத விதத்தில் மாறியிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து நேரங்கழித்து வீடு திரும்புதல், அந்தச் செலவு, இந்தச் செலவு என்று அடிக்கடி காசு கேட்டல், வீட்டில் தங்காமல் வெளியே சுற்றுதல் என்ற பழக்கங்கள் உண்டாயிருந்தன. பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வயது வரையுள்ள வயது ஆண்பிள்ளையின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. எண்ணெய் வழுக்குகிற கையில் கண்ணாடிக் குவளையை எடுத்துக் கொண்டு கல் தரையில் நடந்து போகிற மாதிரிப் பருவம் இது. இந்த வயதில் நல்ல பழக்கங்கள் கீழே விழுந்து சிதறிவிட்டால் பின்பு ஒன்று திரட்டி உருவாக்குவது கடினம். இதனால்தான் பூரணி தம்பி திருநாவுக்கரசைப் பற்றிக் கவலைகொள்ளத் தொடங்கியிருந்தாள். பள்ளிக்கூடத்தில் திருநாவுக்கரசு எப்படி நடந்து கொள்கிறான் என்று சிறிய தம்பி சம்பந்தன் மூலம் விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தாள் பூரணி. “அண்ணனுக்கு விடலைப் பிள்ளைகளோடு பழக்கம் அதிகரித்திருக்கிறது அக்கா. வகுப்புகளுக்கு வராமல் ஏமாற்றிவிட்டு எங்கெங்கோ போய்விடுகிறான். ஆசிரியர்களுக்கு அடங்குவதில்லை. நான் ஏதாவது கேட்டால், ‘அக்காவிடம் சொன்னாயோ, உன் முதுகுத் தோலை உரித்து விடுவேன்’ என்று என்னைப் பயமுறுத்துகிறான், அக்கா” என்று சம்பந்தன் அவளுக்குச் சொல்லியிருந்தான். இருக்கிற கவலைகள் போதாதென்று இப்போது தம்பியைப் பற்றிய இந்தப் புதுக் கவலையும் அவளைப் பிடித்துக் கொண்டிருந்தது.

அவளுக்குச் செய்தித்தாளைப் படிப்பதில் மனம் இலயிக்கவில்லை. திருநாவுக்கரசு பணம் எடுத்துக்கொண்டு போன பின் அலமாரியில் போய்த் தொகையை எண்ணிப் பார்த்தாள். ஐந்து உரூபாய்க்குப் பதில் பத்து உரூபாய் குறைந்தது. அவள் திகைத்தாள். ‘இந்தப் பிள்ளையை இனிமேலும் இப்படியே விட்டுக் கொண்டிருக்க முடியாது. அடித்துத் திருத்த வேண்டிய காலம் வந்து விட்டது’ என்று கடுமையான சினத்தோடு மனத்தில் எண்ணிக்கொண்டு அலமாரிக் கதவைச் சாத்தியபோது “உள்ளே வரலாமா?” என்று அவளுக்குப் பழக்கப்பட்ட அழகிய குரல் வாயிலில் கேட்டது. நெஞ்சில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த தாகமெல்லாம் தணியப் பூரணி திரும்பிப் பார்த்தாள்.

அரவிந்தன் மட்டும் தனியாக வந்திருந்தால் பூரணிக்கு அப்போதிருந்த துடிப்பில் அவனருகில் போய் கதறியிருப்பாள். அன்று கோயிலில் அவனிடம் அப்படி நடந்துகொண்டதற்கான காரணங்களையெல்லாம் கூறி மன்னிப்புக் கேட்டிருப்பாள். ஆனால் அரவிந்தன் அப்போது தனியாக வரவில்லை. அன்று கோயிலில் உடன் கண்ட அந்த முரட்டு ஆளும் அரவிந்தனோடு வந்திருந்ததால் ‘வாருங்கள்’ என்பதற்கு மேல் அதிகமாக எதையும் கூறித் தன் ஆர்வத்தைக் காட்டிக் கொள்ள முடியவில்லை பூரணிக்கு. பயண அலைச்சல்களின் காரணமாக அரவிந்தனின் எழில் முகத்தில் சிறிது கருமை நிழலிட்டிருந்தது. அவனுடைய நீண்ட நாசியின் நுனியில் சிறிதாக அழகாக ஒரு பரு அரும்பியிருந்தது. தாமரை இதழ் முடிகிற இடத்தில் முக்கோணமாக வடித்துக் கத்தி நுனிபோல் கூராக இருக்குமே, அதுபோல் அவன் நாசிக்கு எடுப்பாயிருந்தது அந்த அழகுப் பரு. அருகில் வந்து அன்போடு அவளை விசாரித்தான் அரவிந்தன்.

“உனக்கு உடம்பு எப்படியிருக்கிறது இப்போது? நான் ஊருக்குப் போவதற்கு முதல்நாள் உன்னைக் கோயிலில் பார்த்தேன். உன்னிடம் சொல்லிக் கொள்ளலாமென்று நினைத்துத்தான் உன்னைக் கூப்பிட்டேன். உனக்குக் காதில் விழவில்லை போலிருக்கிறது. நீ திரும்பிப் பாராமல் போய்விட்டாய். . .” என்று ஒரு பிணக்குமில்லாமல் அரவிந்தன் இயல்பான மலர்ச்சியோடு, இயல்பான புன்னகையோடு பேசத்தொடங்கியபோது பூரணி திகைத்தாள். தன்னைப் பற்றி அரவிந்தன் மனத்தில் அன்றைய நிகழ்ச்சி எத்தனை வெறுப்பை உண்டாக்கியிருக்கும் என்று அவள் கற்பனை செய்து வைத்துக் கொண்டிருந்தாளோ, அதற்கு நேர்மாறாக இருந்தது அவன் இப்போது நடந்துகொள்கிற முறை.

‘உங்கள் மனதுக்கு எதையும் நன்றாகப் புரிந்து கொள்ளவே தெரியாதா, அரவிந்தன்? பிறருடைய துன்பத்தைக் கண்டு இரக்கப்படும் போதுதான் நீங்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வீர்கள் என்று எண்ணியிருந்தேன்! அன்பு செலுத்துவதில் கூட நீங்கள் குழந்தைதான் போலும்’ என்று நினைத்த போது அவள் உள்ளத்தில் அவன் முன்பிருந்ததைக் காட்டிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டான். ‘காது கேட்காமல் போகவில்லை. வேண்டுமென்றே உங்களை ஏமாற்றிவிட்டுத்தான் போனேன்’ என்று சொல்லிவிட நாக்கு துடித்தது. உடனிருந்த மனிதருக்காக அதை அடக்கிக் கொண்டாள் அவள். அரவிந்தன் கையோடு கொண்டு வந்திருந்த பழக்கூடையைப் பிரித்து அவளுக்கு முன் வைத்தான்.

“இதெல்லாம் எதற்கு?” என்று உபசாரமாகச் சிரித்துக் கொண்டே கேட்டாள் பூரணி. அன்பு கனிய அவன் கூறலானான்:

“இன்றைக்குக் காலையில்தான் சென்னையிலிருந்து வந்தேன், பூரணி! அச்சகத்துக்குள் நுழைந்ததும், பெரியவர் உன்னைப் பற்றிச் சொன்னார். இப்போது எப்படி இருக்கிறது? உனக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டதும் நான் பதறிப் போய் விட்டேன். நேரே இங்குதான் வருகிறேன்.”

“நாளைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம் என்று வைத்தியர் கூறிவிட்டுப் போயிருக்கிறார். உங்களைப் பார்த்ததும் பேசித் தீர்த்துவிட வேண்டுமென்று மனத்தில் என்னென்னவோ சேர்த்து வைத்திருந்தேன். இப்போது ஒன்றுமே நினைவு வரமாட்டேன் என்கிறது. உடம்புக்கு ஒன்றுமில்லை. . . . மனக்குழப்பங்களால் நானாக இழுத்து விட்டுக் கொண்டதுதான் எல்லாம். . .”

இவ்வாறு அவள் கூறிக்கொண்டு வந்தபோதே அரவிந்தன் குறுக்கிட்டுப் பேசினான். “இவன் இருக்கிறானே என்பதற்காக நீ மனம்விட்டுப் பேசத் தயங்குகிறாய். இவன் அன்னியனில்லை. எனக்கு உயிர்த்தோழன். நாங்கள் இருவரும் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். ‘ஆளைப் பார்த்தால் இப்படிக் காலிப்பயல் போல் முரட்டுத்தனமாக இருக்கிறானே’ என்று நினைக்காதே. தங்கமான குணம். கொஞ்சம் வாயரட்டை, முருகானந்தம் என்று பெயர். நம்முடைய அச்சகம் இருக்கிறதே, அதே தெருவில் பெரிய தையல் கடை வைத்திருக்கிறான். தையல் தொழிலில் நிபுணன். அதற்காகப் பம்பாயில் போய் பயிற்சி பெற்றுச் சிறப்பான பட்டங்களெல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான். இந்த ஊரிலுள்ள நவநாகரிக இளைஞர்களுக்கெல்லாம் இவனுடைய தையலில் ஒரே மோகம். . .”

அரவிந்தன் பாதி வேடிக்கையாகவும், பாதி உண்மையாகவும் முருகானந்தத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அந்த அறிமுகத்தை ஏற்றுக் கொள்கிற பாவனையில் பூரணியை நோக்கிக் கைகூப்பினான் முருகானந்தம். அவளும் பதிலுக்குக் கை கூப்பினாள். முருகானந்தம் எப்படிப்பட்ட ஆள் என்பதை உடனே விளங்கிக் கொள்ளப் பூரணிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. “அக்கா! உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். நீங்கள் வருத்தப்படக் கூடாது. எனக்கு எதையும் மனத்தில் ஒளித்து வைத்துக் கொண்டுப் பழகத் தெரியாது. தோன்றுவதை பளிச்சென்று நேரில் கேட்டுவிடுவேன். அரவிந்தனுக்கு நன்றாகத் தெரியும் என்னைப் பற்றி. நான் மிகவும் வெள்ளை. அரவிந்தன் தான் எனக்குக் குரு, நண்பன், வழிகாட்டி எல்லாம். அவன் இல்லாவிட்டால் எப்படியெப்படியோ நான் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போயிருப்பேன் இதற்குள். அன்று நீங்கள் கோயிலில் அரவிந்தனைப் பார்க்காததுபோல் போனதற்குக் காரணத்தை நான் புரிந்து கொண்டேன். கழுத்தில் சுற்றிய கைக்குட்டையும், வாராமல் நெற்றியில் விழுந்து புரளும் கிராப்புத் தலையும், வெற்றிலைக் காவியேறிய வாயுமாக என்னை அரவிந்தனுக்கு அருகில் பார்த்ததும் அவனைப் பற்றியே சந்தேகம் உண்டாகி விட்டதில்லையா உங்களுக்கு; நான் அன்றைக்கு உங்களை நன்றாகப் பார்த்தேன் அக்கா. அரவிந்தனுடைய கையைப் பற்றி நின்ற என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு நீங்கள் முகத்தைச் சுளித்ததையும் நான் கவனித்தேன். அரவிந்தன் கூப்பிட்டது காதில் விழாமலோ, கவனிக்காமலோ நீங்கள் எழுந்திருந்து போகவில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்; வேண்டுமென்றேதான் நீங்கள் எழுந்திருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு போனீர்கள். ‘எவனோ ஒரு காலிப்பயலோடு அரவிந்தன் நிற்கினான்! அவனைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை’ என்று தீர்மானித்துக் கொண்டுதான் நீங்கள் எழுந்து விரைந்தீர்கள் இல்லையா? இதை அரவிந்தனிடம் சொன்னேன். அவன் உங்கள் மேலுள்ள அளவற்ற அன்பினால் ‘அப்படி ஒரு போதும் செய்திருக்க மாட்டீர்கள்’ என்று மறுத்துவிட்டான். ஆனால் உண்மை இதுதான். எனக்குத் தெரியும்” என்று அக்கா முறை கொண்டாடி முருகானந்தம் அவளைக் கேட்டபோது தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. அவளுடைய தலை தானாகவே தாழ்ந்துகொண்டது.

“இந்த முரடன் ஏதாவது இப்படித்தான் உளறுவான்; நீ ஒன்றும் காதில் போட்டுக் கொள்ளாதே பூரணி” என்று அரவிந்தன் அப்போதும் சிரித்துக் கொண்டுதான் சொன்னான்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue