ஆட்சிமுறை குறித்த பெரியார் சிந்தனைகள் : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 16 இன் தொடர்ச்சி)
தந்தை பெரியார் சிந்தனைகள் 17
1. ஆட்சிமுறை.
இதுபற்றித் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளைக் காண்போம்.
(1) ஆட்சிமுறை என்பது யார் நம்மை ஆள்வது என்கின்ற விஷயமல்ல. நமது மக்களுக்கு எந்த மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாகக் கருதப்பெற வேண்டியது.
(2) “ஓர் இணைச்செருப்பு 14 ஆண்டுக்காலம் இந்த நாட்டை ஆண்டதாக உள்ள கதையை மிகுந்த விசுவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் இழிவான மிருகம், நாய், கழுதை, ஆண்டால்கூட அஃது அதிகமான அவமானம் என்றோ குறை என்றோ நான் சொல்லவரவில்லை. ஆனால் மனிதனானாலும் கழுதையானாலும் எந்தக் கொள்கையோடு எந்த முறையோடு ஆட்சி புரிகின்றது? அதனால் பொது மக்களுக்கு என்ன பலன் என்பதுதான் எனது கவலை” என்கின்றார்.
(3) மக்களை வருணசிரமத் தர்ம முறைக்கும், காட்டு மிராண்டிக் காலத்துக்கும் கொண்டு போகாமல் இருக்கும்படியானதும் அறிவு உலகத்திற்கு இட்டுச் செல்வதுமான ஆட்சி யாருடையதானாலும், அப்படிப் பட்ட ஆட்சி வேண்டுமென்று தான் போராடுகின்றோம். (4) உலகத்தில் பாடுபடும் மக்கள் 100க்கு 90 பேர்கள் உள்ளனர். சோம்பேறிகள், பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் 100க்கு 10 பேர்கள்தாம் இருப்பார்கள். ஆதலால் 100க்கு 90 பேர்களுக்கு அனுகூலமான ஆட்சி அவர்களுடைய நலனுக்காக அவர்களாலேயே ஆட்சி புரியக்கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும்.
(5) எந்த ஆட்சியாயிருப்பினும் நம் நாட்டார்களே ஆள வேண்டும். அந்த ஆட்சியும் மான உணர்வுள்ளதாக, ஏழைகளை வஞ்சிக்காத முறையில் இருக்க வேண்டும். வடநாட்டான் முதல் எந்த வெளிநாட்டானுக்கும் எவ்விதத்திலும் அடிமைப்பட்டதாகவும் இருக்கக்கூடாது. நேசப்பான்மையில் வேண்டுமானால் எல்லா நாடுகளுடன் ஒன்று சேருவோம்.
(6) நகரச் சுகாதாரம், கல்வி, தெரு பாதுகாப்பு முதலியவவை அரசாங்கத்தின் முழு சுதந்திரத் துறையாகவே இருந்து நடந்து வருமானால்தான் ஓர் அளவுக்காகவது பொறுப்பும் ஒழுக்கமும் நாணயமும் நல்லாட்சியும் நடைபெற முடியும். அதை ஒரு சனநாயகத் துறையாக ஆக்கி வைத்திருப்பது நிருவாகக் கேடும், ஒழுக்கம், நாணயம் பொறுப்பற்ற தன்மையும் தாண்டவமாடவே செய்யப்பெற்றிருக்கும் ஒரு சாதனமேயாகும்.
(7) இன்றைய சுதந்திர ஆட்சியில் முழு முட்டாள்களுக்கும் முழுப் பித்தலாட்டக்காரர்களுக்கும் முழுக் கசடர்களுக்கும் தான் இடம் இருந்து வருகின்றது. எனவேதான் பெருத்த அறிவாளியானவர்கள் இவ்வாட்சியில் மயங்கி இருக்கக் காண்கின்றோம். நாம் பரம்பரையாக முட்டாள் பட்டத்தை ஏற்றிருப்பதனாலேயே இதனைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.
(8) காவல்துறையினர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். காவல்துறைக் காவலன் ஒருவன் ஏதோ தப்பு செய்திருக்கலாம். அனைத்துத் துறைகளிலும் உள்ளவர்களைப் போல் அவனும் ஒருமனிதன்தானே. அவனை மக்களுக்குக் காட்டிக் கொடுக்காமல் துறைமூலம் கண்டிப்பும் நடவடிக்கையும்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். காவல் துறைக் காவலன்மீது எல்லோரும் அறிய நடவடிக்கை எடுப்பது விருப்பத்தக்கதன்று. அப்படி எடுத்தால் அவனுக்கு நாளை எவன்-அய்யா பயப்படுவான்? எப்படி அய்யா அவனுக்கு மதிப்பு இருக்கும்? என்று கேட்கிறார் ஐயா. இதனால்தான் காவல்துறைக் காவலர்கட்கு (Police men)ப் பரிந்து கொண்டு பேசவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றார். இந்த அறிவுரையை அரசு கடைப்பிடிக்குமா? திருக்குறள் கூறும் அறிவுரை போன்றது. இது.
(9) மக்களிடம் ஒழுக்கம், நாணயம், நேர்மை வளர வேண்டும். வளரச் செய்ய வேண்டும் என்று ஒருவன் கருதுவானேயானால் இந்த மூன்றும், பார்ப்பான், வணிகன், வழக்குரைஞன் வளர வேண்டும் வளரச் செய்யவே என்று ஒருவன் ஆக்கிய அமைப்புகளை அடியோடு அழித்தாக வேண்டும். அரசாங்கம் யோக்கியமான பயனுள்ள அரசாங்கமாய் விளங்க வேண்டுமானால் கண்டிப்பாய் இவ்வமைப்புகளைச் சட்டபூர்வமாக ஒழித்தாக வேண்டும்.2
(10) மக்கள் நலத்திற்காக எந்த அரசாங்கத்திற்கும் அடக்கு முறை என்ற ஆயுதம் இருந்தே தீரவேண்டும். அடக்குமுறை இல்லாத ஆட்சி ஆட்சிக்கவிழ்ப்பு (Anarchism) என்ற குழப்பமும் காலித்தனமும் கொண்ட அநாகரிக ஆட்சியாக முடியும்.
(11) மக்கள் பிரதிநிதிகள் கையூட்டு (Bribery) முதலிய குற்றங்கள் புரிந்து வழக்கு தொடுக்கப்பெற்று நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பெறுவார்களேயானால் அவர்கள் நிரந்தரமாகத் தேர்தலில் போட்டியிடும் உரிமையைப் பறித்து விட வேண்டும். (அ) இரண்டு ஆண்டு தண்டனை பெற்றால் ஓர் ஆறாண்டுக் காலம் தேர்தலில் நிற்கக்கூடாது என்று யோசனை கூறப்பெறுகிறது. இஃது அறிவுடைமையன்று நிரந்தர உரிமைப் பறிமுதலே உகந்தது. அதன் பிறகு அவர் கட்சியில் தொண்டாற்றட்டும். வேறு ஆட்கள் அரசுக்கு வரவாய்ப்பாக இருக்கட்டும். (ஆ) குடியரசுத்தலைவர் தேர்தல் ஆணையப் பொன் விழாவில் (சனவரி 17, 2001) பேசியபோது “பணம், உடல் பலம், தேர்தலில் சட்டப் பகைமையில் இழை”க்கப்படும் குற்றம் ஆகிய ஆரோக்கியமற்ற பங்கினைப்பற்றி” மிக்க வருத்தத்துடன் குறிப்பிட்டு அரசியல் கட்சிகள் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தலில் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதை நினைவுகூர வேண்டும். (இ) இன்று நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் 500 முதல் 800 வரை எண்ணிக்கையுள்ளவர்கள் குற்றம் இழைத்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகக் கணக்கிட்டிருப்பதையும் நினைவு கூரத்தக்கது. இந்நிலை வேலியே பயிரைத் தின்று வருவதற்கொப்பாகும்.
++++++++++++++++++++
2. இந்த அறிவுரை நடைமுறைக்கு உகந்ததன்று. இதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை.
++++++++++++++++++++++
(12) எவன் ஒருவன் பொது மக்கள் ஆதரவுகளைத் திரட்டிக் குற்றங்களை எடுத்துக்காட்டி அரசாங்கத்தை அச்சுறுத்துகிறானோ அவனைக் கண்டுதான் அரசாங்கம் பயப்படும். மற்றும், அரசாங்கம் அவன் பட்டியலிட்டுக் காட்டும் குறைகளைக் கவனிக்கும். சட்டமன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ சென்று கூப்பாடு போட்டால் அவனிடம் அரசாங்கம் பயப்படுமா?
(13) மக்கள் எப்படியோ அப்படித்தான் ஆட்சியும் அமையும். மக்கள் புத்திசாலிகளாக அறிவாளிகளாக இருந்தால் நல்லாட்சி ஏற்படும்.
(14) சட்டமன்றம் என்பது மிகமிகக் கண்ணியமான மக்களைக் கொண்டதாகவும் பெரும் கவுரவம் உடையதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அரசாங்கத்தினுடையவும் அங்கத்தினர்களுடையவும் பொதுமக்களுடையவும் ஆன உயிர்போன்ற கடமையாகும்.
(15) இந்தக் காலத்தில் அரசாங்கம் என்பதற்கெல்லாம் மக்களால் ஆக்கப்படுவதும் அழிக்கப்படுவதுமேயாகும். இதை யாராலும் மறுத்துச் சொல்ல முடியாது. அரசாங்கத்தை, ஆட்சியை அழிக்கப் பொதுமக்களுக்கு அதிகாரம் உண்டு. அதிகாரம் “வாக்கின் பலத்தால்” ஏற்படுவது.
(16) மக்களிடமிருந்து வரிவாங்காமலேயே ஆட்சியை நடத்திக் கொண்டு போகமுடியும். எப்படியெனில், இருப்பூர்தி, அஞ்சல்-தந்தி, தொலைபேசி, சாலை விளக்கு முதலியவற்றிற்கு வரி போடுகிறோமோ? செலவுக்கு சார்ஜ்-கூலி பெற்றுக் கொள்கிறோம்; அதிலும் இலாபம் பெறுகின்றோம். ஆனால் வரி என்பதாக ஒன்றும் இல்லாமலே அவை நன்றாக இலாபத்தில் நடைபெறுகின்றன. அவற்றால் மக்களுக்கு வரிச் சுமையே இல்லை.
(தொடரும்)
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’ பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்),
தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்,
சென்னைப் பல்கலைக் கழகம்
Comments
Post a Comment