Skip to main content

திருநங்கையரின் வாழ்வியலைப் படம் பிடிக்கும் புதினம் – பொட்டு வைத்த பொழுதில்

 அகரமுதல





இல.அம்பலவாணனின் பொட்டு வைத்த பொழுதில்

அணிந்துரையும் பதிப்புரையும்

அணிந்துரை

 



வணக்கம்,

இந்தப் புதினத்தைப் படித்த போது எனது சின்ன வயதிற்குள் மூழ்கிப்போனேன். இப்படியெல்லாம் நடந்து விடாதா என ஏங்கிய நாட்களே எனக்கு நினைவில் வந்தன. எனது கண்களைக் குளமாக்கியது.

            ஒரு திருநங்கையாய்ப் பிறந்தவள் வாழ்வில் என்னவெல்லாம் நடக்குமோ அனைத்தையும் எழுத்துகளால், காட்சிகளால் உருவாக்கி இருக்கிறார், திரு. அம்பலவாணன் அவர்கள்.

            அற்புதமான புதினம் என்பதற்கு புதினத்தினுள்ளே பல இடங்கள் உணர்த்துகின்றன. ஒரு மனிதனைப் போல் மற்றவர் இருப்பதில்லை. ஆனால் புதினத்தை எழுதி முடிக்கும் வரை கதையாசிரியர் திருநங்கையாக மாறி விட்டாரோ என நினைக்க வைக்கிறார்.

            இரம்யாவான செல்வத்தை, அவளின் உணர்வுகளை அவளே கூட இவ்வளவு துல்லியமாக எடுத்துரைக்க முடியாது. இரம்யாவின் காதலை ஆசிரியர் கூறும் பொழுது  மீண்டும் உருமாறி அங்கு இராசாவாகிறார். இராசாவைக் குறித்து கதையில் படிக்கும் போது நீங்கள் எல்லாரும் இராசாவைப் பார்க்க ஆசைப்படுவீர்கள். அவ்வளவு சீர் வடிவான மனிதன்.

            திருநங்கையின், பெற்ற குடும்பம், அவளின் திருநங்கை உறவுகள், வழக்காடு மொழி, காதல், சடங்குகள் என எல்லாமே அடங்கிய புதினம் இது.

            குறிப்பாகத் திருநங்கைகளின் உணர்வுகள் குறித்த ஆராய்ச்சிக்கு இந்நூலைப் பயன்படுத்தலாம். இந்நூலின் நோக்கமே சமூகம் எப்படி திருநங்கையரை அணுக வேண்டும் என்பதே!

ஒவ்வொரு நிலையிலும் அவளுக்கு ஆதரவாய் எல்லாரும் எப்படி இருக்க வேண்டும் என்பது ஒரு பாடமாக அமைகிறது.

காதலை மட்டும் ஏனோ இப்படிச் சொல்கிறாரே என உங்களுக்குத் தோன்றும். அதற்கு விடையை புதினத்தில் இரம்யாவே கூறியிருக்கிறார்.

திருச்சி, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI)  எனும் தொண்டு நிறுவனம் மூலம் திருநங்கைகளுக்குப் பணி செய்பவர் திரு. அம்பலவாணன் அவர்கள். திருநங்கைகளுக்குப் பல பணிகளை செய்து எல்லார் மனத்திலும் இடம் பிடித்தவர்.

ஏதோ அவர்களுக்குப் பணியாற்றினோம், போதும், என்றில்லாமல், அவர்களோடு உறவாடி அவர்களுக்கான நிலையை அறிந்து அதனைச் சமூகத்தில் எடுத்துரைக்க முடிவெடுத்ததின் தாக்கமே இந்நூல்.

ஒரு சிறுவன் திருநங்கையாக மாறும் போது குடும்பம் ஏற்க மறுக்கிறதா? அந்த குடும்பத்தினரிடம் இந்நூலைக் கொடுங்கள் 

உடன் பயணியாய்த் திருநங்கைகள் பயணிக்கும் போது எப்படி நடந்து கொள்வது என்ற கேள்விக்கு இந்நூலைப் படியுங்கள்.

நமது தெருவில் நம்மோடு பழகிய ஓர் ஆண் குழந்தை தன்னைப் பெண் என்கிறதா? பயந்து போகாதீர்! இந்நூலைத் பார்ப்பீர்!  

இப்படி பல சிறப்புகள் கொண்ட அற்புதமான நூலினைக் குறித்து அணிந்துரை எழுதுவது எனது வாழ்நாளில் எனது சமூகத்திற்கு நான் செய்யும் பாக்கியம்.

நன்றி

 கலைமாமணி

    திருநங்கை சுதா

  சென்னை

பதிப்புரை





அருத்தநாரீசுவரன் என்றால் தெய்வம் என்று அனைவரும் வழிபடுவர். அருத்தநாரி என்றால் மனிதனாகக் கூட மதிக்காமல்  இருந்தனர்.

~பேடு நீங்கிப் பிறத்தல் அரிது| என்பார் அவ்வையார். எனினும் மானிடராய் மதித்துப் போற்றினார்.

“சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழை”  என்று எழுதினாலும் கவிஞர் நா.காமராசன் எழுதியவனையே நொந்து கொள்கிறார்.

“கூடையிலே கருவாடு”  என்று திரைப்படக்காரர்கள் மட்டுமே திருநங்கைகளைப் பாலியல் விளையாட்டுப் பண்டங்களாகவும் பதுமைகளாகவும் கிண்டலும் கேலியும் செய்து வந்தனர்.

சமூகம் மட்டுமின்றித் தமிழ்க் கலை இலக்கியங்களும் இவர்களை விளிம்புநிலைக்குத் தள்ளி வேடிக்கை பார்த்தன.

காலம் மாறிவிட்டதன் அடையாளங்களாக இன்று அலி, அரவாணி, பெட்டை, பேடி என்ற சுட்டுப் பெயர்களைச் சுட்டெரித்து விட்டு திருநங்கை என்று புதுப்பெயரும் புதுப்பார்வைகளும் வளர்ந்து வருகின்றன.

தமிழில் சமுத்திரம் போன்றவர்கள் தொடங்கி வைத்ததை அம்பலவாணன் இப் புதினத்தில் அழகாகவும் ஆழமாகவும் அவர்களின் வாழ்வைச் சித்தரித்துள்ளார். இவர் வெறும் கதைச் சொல்லியல்ல. கடுமையான தன் உழைப்பால் தொண்டு நிறுவனம் மூலம் திருநங்கையரின் திருவாழ்வுக்கும் தொண்டு செய்து வருகிறார்.

தொண்டர்கள் வாழ்க!

காவ்யா சண்முகசுந்தரம்

புதினம் கிடைக்குமிடம்

காவியா பதிப்பகம்

16 இரண்டாம் குறுக்குத் தெரு, டிரசுட்புரம்,

கோடம்பாக்கம், சென்னை 600 024

பேசி 044 23726882   98404 80232

விலை உரூ.180/-

 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்