Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 7.

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 6. தொடர்ச்சி)


குறிஞ்சி மலர்

அத்தியாயம் 2 தொடர்ச்சி

 

அதுவரை அவள் வீட்டில் காத்திருக்க முடியாது. மூன்று மணி சுமாருக்காவது புறப்பட்டுப் போனால்தான் மதுரையில் ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டு திரும்பலாம். ‘பிராவிடண்டு பண்டு’ பற்றி நினைவுறுத்தி விரைவாகக் கிடைக்கச் செய்வதற்கு அப்பா வேலை பார்த்த கல்லூரி முதல்வரைப் பார்க்க வேண்டும். வீட்டுக்காரரைச் சந்தித்து வாடகை பாக்கியைக் கொடுத்துவிட்டு ‘வீட்டை விரைவில் காலி செய்துவிடுவதாக’த் தெரிவிக்க வேண்டும். அப்பாவின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளர் ஒருவர் புதுமண்டபத்தில் இருக்கிறார். அவரைப் பார்ப்பதிலும் ஒரு பயனும் இல்லை. வழக்கம் போல் பஞ்சப் பாட்டு தான் பாடுவார்கள். ஆனாலும் பார்த்துக் கண்டிப்பு செய்ய வேண்டும். வேலைக்காக யாராவது இரண்டு மூன்று பேரைப் பார்க்க வேண்டும். வீடு கூட மதுரையில் எங்காவது நாலைந்து ஒண்டுக் குடித்தனங்கள் சேர்ந்திருக்கின்ற இடத்தில் பார்க்கலாம். ஆனால் திருப்பரங்குன்றத்தில் அவ்வளவு பெரிய வீட்டுக்குக் கொடுத்த வாடகையை மதுரையில் இரண்டு அறைகள் ஒண்டுக் குடியிருப்புக்குக் கொடுக்க வேண்டியிருக்குமே. தம்பிகளை வேறு நடு ஆண்டில் பசுமலைப் பள்ளிக்கூடத்தில் இருந்து மாற்றி மதுரையில் சேர்க்க வேண்டும். எனவே மதுரைக்கே குடிபோவது சாத்தியமில்லை என்று அவள் நினைத்தாள். மதுரையில் வீட்டு வாடகையை அவளால் கொடுத்துக் கட்டுப்படியாக முடியுமா?

மதுரையில் மிக உயரமானவை கோபுரங்களும் வீட்டு வாடகையும்தான். அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வீடுகள் மலிவாகக் கிடைக்கமாட்டா. பிச்சைக்காரர்களும், இழுவை மிதிவண்டிகளும்(சைக்கிள் ரிக்சாக்களும்) தான் மலிவாகக் கிடைக்கிற அம்சங்கள். இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குச் செலவும் நிம்மதிக் குறைவும் அதிகமாக இருப்பதுபோல் மதுரை என்கிற அழகு இரண்டு மாவட்டங்களுக்குத் தலைநகராக இருந்து தொல்லைப்படுற நிலை வெள்ளைக்காரன் காலத்துக்குப் பின்னும் போன பாடில்லை.

மணி இரண்டரை ஆகியிருந்தது. பூரணி கிணற்றடிக்குப் போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள். புடவை மாற்றிக் கொண்டு திலகம் வைத்துக் கொள்வதற்காகக் கண்ணாடி முன் நின்றபோது குழந்தை தூக்கத்திலிருந்து எழுந்து வந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றாள்.

சந்தனச் சோப்பில் குளித்த முகம் அப்போதுதான் மலர்ந்த செந்தாமரைப் பூப்போல் புதிய மலர்ச்சி காட்டியது. சித்திரக்காரன் தூரிகையால் அநாகரிகமாக இழுத்துவிட்ட கறுப்புக் கோடுகள் போல் காதுகளின் ஓரத்தில் இரண்டு கரும்பட்டுச் சுருள் மயிரிழைகள் சிவப்பு நிறத்தின் நடுவே எடுப்பாகத் தெரியும் பூரணிக்கு. அழகிய குமிழம்பூ மூக்கு மேலே முடிகிற இடத்தில் புருவங்களின் கூடுவாயில் பெரிதாக ஒரு குங்குமப்பொட்டு வைத்து அதற்கு மேலே சிறிதாக ஒரு கருஞ்சாந்துப் பொட்டு வைத்துக் கொள்வாள் அவள். அப்பா சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் அவளுடைய உடம்பை மூளியாக வைத்துவிட்டுப் போய்விடவில்லை. புன்னகையோடு சில பொன்னகைகளும் இருந்தன அவளுக்கு. பொன் வளையல்கள் இருந்தாலும் கை நிறைய கருப்பு வளையல்கள் அணிந்து கொள்வதில் அவளுக்கு மிகவும் பிரியம். இழைத்த தங்கத்தில் வரி வரியாகக் கரும்பட்டுக் கயிறு சுற்றின மாதிரிச் செழிப்பான அவளுடைய வெண்சிகப்புக் கைகளில் அந்தக் கரிய வளையல்கள் தனிக்கவர்ச்சி தரும்.

நகைப்பெட்டிக்குள் கிடந்த பொன் வளையல்கள் இரண்டையும் ஓர் அட்டைப் பெட்டிக்குள் வைத்துக் கையோடு எடுத்துக் கொண்டாள். புத்தகக் கடைக்காரரும் கையை விரித்து விட்டால், பணத்துக்கு எங்கே போவது? வாடகை பாக்கி கொடுப்பதற்கும், வேலை கிடைக்கிறவரை வீட்டுப்பாட்டை சமாளித்துக் கொள்வதற்கும் கையில் ஏதாவது வேண்டுமே. வளையல்களைப் போட்டுப் பணமாக மாற்றிக் கொள்ள நினைத்தாள் அவள்.


“அக்கா! உனக்கு இந்தப் பொட்டு ரொம்ப நல்லாயிருக்கு. இனிமேல் தினம் இது மாதிரி வச்சுக்கணும்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் மங்கையர்க்கரசி. அப்பா போன துக்கத்தைக் கொண்டாட வீட்டிலேயே அடைந்து கிடந்த நாட்களில் பூரணி குளிப்பதற்கு அதிகமாகத் தன்னை எந்த அலங்காரமும் செய்து கொண்டதில்லை. இன்று திடீரென்று அக்காவின் திலகம் குழந்தைக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது போலும்!

“ஆகட்டும் மங்கை! தினம் இதுமாதிரி பொட்டு வைச்சுப்பேன். நான் சொல்கிறபடி நீ இப்போது கேட்க வேண்டும். நான் அவசரமாக மதுரைக்குப் போய்விட்டு வரவேண்டியிருக்கிறது. உன்னை ஓதுவார் தாத்தா வீட்டிலே விட்டுவிட்டுச் சாவியையும் கொடுத்துவிட்டுப் போகிறேன். நீ அண்ணன் பள்ளிக்கூடத்திலேர்ந்து வரவரைக்கும் அங்கே சமர்த்தாக இருக்க வேண்டும். முரண்டு பிடிக்கக்கூடாது; அழவும் கூடாது.”

“நானும் உங்ககூட மதுரைக்கு வரேனக்கா?” சொல்லிவிட்டு குழந்தை கண்களை அகல விழித்துக் கெஞ்சுகிற பாவனையில் பூரணியின் முகத்தைப் பார்த்தாள்.
“நீ வேண்டாம் கண்ணு. உன்னால என்னோடு அலைய முடியாது. நான் போயிட்டு சுருக்க ஓடி வந்துவிடுவேன். கேட்டுக்கிட்டு அவங்க வீட்டிலே இரு.” குழந்தை ஒருவழியாக இருக்க ஒப்புக் கொண்டுவிட்டது போல் அடங்கிவிட்டாள். பூரணிக்குத் தலை பின்னிக் கொள்ளக்கூட நேரம் இல்லை. அப்படியே எண்ணெய் தடவி வாரி முடிந்து கொண்டாள். கருகருவென்று முழங்கால் வரை தொங்குகிற பெரிய கூந்தல் அவளுக்கு. இரட்டைச் சவுரி வைத்தும் போதாமல் நாய் வால்போலச் சிறிய பின்னல் போட்டுக்கொள்ளும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குப் பூரணியிடம் ஒரே பொறாமை. காமாட்சி ஓதுவார் தாத்தாவின் பேத்தி. அவளுக்குப் பூரணியைவிட இரண்டு மூன்று வயது குறைவு. சிறு வயதிலேயே இருவரும் நெருங்கிப் பழகின தோழிகள். இரண்டு வீடுகளும் ஒரே ஊரில் ஒரே தெருவில் எதிர் எதிரே இருக்கிற உறவில் பிறந்த ஒரு நெருக்கமும் – அந்த குடும்பங்களுக்கு இடையே உண்டு.

பூரணி, வீட்டுக் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு குழந்தை மங்கையர்க்கரசியோடு எதிர் வீட்டுக்குப் போய் நுழைந்தாள்.

வாசல் திண்ணையில் சிவப்பழமாக உட்கார்ந்துகொண்டு அந்த வயதிலும் மூக்குக் கண்ணாடி இல்லாமல் தேவாரப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த கிழவர் நிமிர்ந்தார். இந்தக் கிழவர் மேல், அழகிய சிற்றம்பலம் வாழ்ந்த காலத்தில் பெரு மதிப்பு வைத்திருந்தார்.


“அடடே! பூரணியா… வா, அம்மா! எங்கேயோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறதே! மதுரைக்கா?” கிழவருக்குக் கணீரென்று வெண்கல மணியை நிறுத்தி நிறுத்தி அடிப்பது போன்ற குரல்.


“ஆமாம் தாத்தா! குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். தம்பிகள் வந்தால் சாவியைக் கொடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்.” பூரணி சாவியை அவருக்குப் பக்கத்தில் வைத்தாள். குழந்தை தானாகவே உரிமையோடு கிழவரின் மடியின்மேல் போய் உட்கார்ந்துகொண்டு “இன்னிக்கு நெறையப் புது கதையாய்ச் சொல்லணும் தாத்தா… பழைய கதையாகச் சொல்லி, ‘அம்மையார்க் கிழவி’, ‘குருவி காக்காய்னு’ ஏமாத்தப் படாது” என்று தொணதொணக்கத் தொடங்கிவிட்டாள். வாசலுக்கு நேரே உள்ள கூடத்தில் காமாட்சியும் அவள் பாட்டியும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

“பூரணி! இப்படிக் கொஞ்சம் உள்ளே வந்துவிட்டுப் போயேன்” என்று குரல் கொடுத்தாள் காமாட்சி.

“அப்புறம் வருகிறேன் காமு, இப்போது நான் அவசரமாகப் போகவேண்டும்” என்று கிளம்பினாள் பூரணி.

“அப்படி என்ன அவசரம் அம்மா?” என்று கிழவர் குறுக்கிட்டார்.

தந்தைக்கு ஒப்பான அந்தக் கிழவரிடம் தன் துன்பங்களைச் சொல்வதில் தவறில்லை என்று எண்ணினாள் பூரணி. வீட்டுக்காரர் காலி செய்துவிட்டுப் போகச் சொல்வதையும் அவரிடம் கடன்பட்டிருப்பதையும் வீட்டின் ஏழ்மையையும் உடைத்துச் சொல்லிவிடலாமென்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு நா எழவில்லை. மனமும் நாவும் நெகிழ்ந்துவிட இருந்த அந்தச் சமயத்தில் தந்தையின் இரத்தத்தில் ஊறிவந்த பண்பு காப்பாற்றியது. நம்முடைய ஏழ்மையையும் துன்பங்களையும் கூடுமானவரை நம்மைக் காட்டிலும் ஏழ்மையும் துன்பமும் உள்ளவர்களிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது. குறைந்த வருவாயும் நிறைந்த மனிதர்களும், செலவுகளும் உள்ள ஓதுவார் குடும்பத்துக்கு நம்முடைய துன்பங்களும் தெரிய வேண்டியது அநாவசியம் என்று அவளுக்குப்பட்டது. தனக்கு வந்த துன்பங்களையும் பிரச்சினைகளையும் தாமே ஏற்றுக்கொண்டு சமாளிப்பதுதான் நாகரிகம் என்பது அப்பாவின் கருத்து.

அவற்றை அடுத்தவர்களுக்குத் தெரியும்படி நெகிழவிட்டு அனுதாபம் சம்பாதிப்பது கூட அநாகரிகம் என்கிற அளவு தன்மானமுள்ளவர் அப்பா.

பூரணி அப்பாவின் பெண். அதே தன்மானமுள்ள இரத்தம் தான் அவளுடைய உடலிலும் ஓடுகிறது. “ஒன்றுமில்லை தாத்தா, அப்பாவின் ‘பிராவிடண்டு பண்டு‘ விசயமாக கல்லூரி முதல்வரைப் பார்த்துச் சொல்ல வேண்டும். வேறு ஒன்றும் இல்லை” என்று நல்லதை மட்டும் அவரிடம் சொல்லி முடித்தாள்.

ஒளியும் எழிலும் நிறைந்த செங்கமலப்பூ உயரமான கொடியோடு ஒல்கி, ஒல்கித் தென்றலில் அசைந்தாடிக் கொண்டு நடப்பதுபோல் பூரணி தெருவில் செல்லும்போதுதான் எத்தனைக் கண்கள் அவளைப் பார்க்கின்றன! சந்நிதித் தெருவின் வடக்கில் வந்து, மயில் மண்டபத்தைக் கடந்து காவல்நிலையம் நிறுத்தத்தில் அவள் பேருந்துக்காக நின்றாள். எதிர்ப்புறம் தென்கால் கண்மாயின் கரையில் துணி வெளுப்போர் கும்பல் கூடியிருந்தது. சலவை செய்வோர் உலர்த்திய பலநிறத் துணிகள் உயர்ந்த மண்கரை மேல் நிறங்களின் கலவைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தன. கண்மாயின் நீர்ப்பரப்புக்கு அப்பால் வடமேற்கே நெல் வயல்களும், கரும்புத்தோட்டங்களும், கொடிக்கால்களும், தென்னைக் கூட்டமுமாக அழகு, திரைகட்டி எழுதியிருந்தது. அந்த நேரத்தில் அந்த ‘நிறுத்தத்தில் பூரணி ஒருத்திதான் தனியாக நின்று கொண்டு பேருந்தை எதிர்பார்த்தாள். தெற்கேயிருந்து சென்ட்ரல்-திருப்பரங்குன்றம் ஐந்தாம்  எண் பேருந்து வந்து நின்றது. அவள் ஏறிக்கொண்டாள். நடத்துநர் ‘வாங்க அம்மா!’ என்று முகம் மலர வணக்கம் தெரிவித்தார். அப்பாவுக்கு இப்படி எத்தனையோ பழைய மாணவர்கள். அடிக்கடி அப்பாவோடு அவளையும் பார்த்திருக்கிற காரணத்தால் எல்லாரும் அவளை இன்னாரென்று தெரிந்துகொண்டிருந்தனர். முழுமையாக இருப்பு என்ற பேரில் கைவசம் இருந்த அந்த எட்டணாவைக் கொடுத்துக் கல்லூரி நிலையத்துக்கு ஒரு சீட்டும் பாக்கியும் வாங்கிக் கொண்டாள். நடத்துநர் அருகில் வந்து நின்று அவளிடம் அப்பாவின் மரணத்துக்குத் துக்கம் விசாரித்தார். அவளும் ஏதோ பதில் சொன்னாள்.


கல்லூரியின் முதல்வர் அவளை அன்போடு வரவேற்று ஆதரவாக மறுமொழி அளித்து அனுப்பினார். அப்பாவின் பிராவிடண்ட் பண்டு பணம் இயன்ற அளவு விரைவில் கிடைக்க உதவுவதாகவும் கூறி அனுப்பினார். அங்கிருந்து புது மண்டபம் வரை நடந்தே போனாள். தெருவில் போவோரும் வருவோரும் முறைத்துத்தான் பார்க்கிறார்கள். மனிதர்களுக்குத்தான் எத்தனை விதமான பார்வை! வண்டியிலோ இழுவை மிதிவண்டியிலோ போனால் இப்படி யாரும் விழுங்குவதுபோல் பார்க்க மாட்டார்கள். ஆனால் வண்டிக்காரனும் இழுவை மிதிவண்டிக்காரனும் சும்மாவா ஏற்றிக் கொண்டு போகிறான்? கையில் இருக்கிற மொத்த சொத்து ஐந்து அணா. திரும்பிப் போகப் பேருந்துக்கட்டணம் மூன்றணா ஆகுமே! ஏழ்மையை வெளிக்காட்டி விடுவது தப்பே இல்லை. பொய்யாக நடிப்பது தான் தப்பு.

ஆயிரமாயிரம் சின்னத்தனமான மனிதர்களின் கண்களில் மிதந்து கொண்டு, பூரணி என்கிற அழகு – பழமை வாய்ந்த மதுரை நகரின் தெருக்களில் பூம்பாதங்கள் கொப்பளித்துக் கன்றிப் போகும்படி வெறுங்கால்களால் நடந்து கொண்டிருந்தது.

புது மண்டபத்தின் தெருக்கோடியில் புகுந்து கவனமின்றியோ  வேண்டுமென்றோ இடிப்பதுபோல் வரும் ஆண்கள் கூட்டத்துக்குத் தப்பி மெல்ல விலகி நடந்து அப்பாவின் பதிப்பாளர் முன் போய் நின்றாள் பூரணி.

“வாங்க தங்கச்சி; ஒரு வார்த்தை சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேன். நீங்க எதுக்கு சிரமப்படணும்” என்று தம்முடைய வயதின் உரிமையை நிலைநாட்டுவதுபோல் விளித்து வரவேற்றார் அவர்.

பூரணி நெருப்புப் பிழம்புபோல் அந்தக் கும்பலின் நடுவே நின்றுகொண்டு அவரை உறுத்துப் பார்த்தாள். அந்தப் பார்வைக்குக் கடைக்காரனிடம் பதில் இல்லை. அவளுடைய கண்கள் அபூர்வமானவை; கூர்மையானவை. அவற்றுக்குத் தூய்மை அதிகம்.

“தங்கச்சிக்கு கோபம் போலிருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே கழுத்தறுக்க முயன்றார் அவர்.

“எனக்கு வேண்டியது இந்தச் சிரிப்பும் இந்த மழுப்பல் வார்த்தைகளும் இல்லை. வியாபாரியின் சிரிப்பில் குற்றம் மறைக்கப்படுகிறது. மறைந்து கொள்கிறது. அப்பாவின் புத்தகங்களுக்கு மூன்று வருட இராயல்டித் தொகை உங்களிடம் பாக்கி நிற்கிறது. கேட்டால் புத்தகம் போதுமான அளவு விற்கவில்லை என்று பொய் சொல்கிறீர்கள். உங்களிடமிருந்து நியாயமான பதில் கிடைக்கவில்லையானால் நான் சட்டப்படி ஏதாவது செய்துதான் ஆகவேண்டும்!” என்று பூரணி கொதிப்போடு முறையிட்டாள்.

அவ்வளவு பெரிய கும்பலுக்கு நடுவில் ஒரு பெண் பேசி மானத்தை வாங்கிவிட்டதே என்ற உறைப்பு இருந்தாலும் விநயமாகச் சமாளித்தார் பதிப்பாளர். “இந்த மாத முடிவுக்குள் கணக்கெல்லாம் பார்த்து ஏதாவது செய்கிறேன் அம்மா!” என்று விடை கொடுத்ததுபோல் கைகூப்பினார். அந்த கைகூப்புதலுக்கு ‘இனிமேலும் நின்று, பேசிக்கொண்டிருக்கக்கூடாது, போய்விடு’ என்பது அர்த்தம்போலும்!

பூரணி அங்கிருந்து வெளியேறினாள். அப்பாவே மனம் வெறுத்துச் சலித்துப்போய், “அவன் பணம் தந்தாலும் சரி, தராவிட்டாலும் சரி” என்று கைவிட்ட ஆள் அந்தப் பதிப்பாளர். “அறிவைப் பெருக்குகிற புத்தக வெளியீட்டுத் தொழிலில், பணத்தைப் பெருக்குகிற மனமுள்ள வியாபாரிகள் ஈடுபட்டு, எழுதுகிறவன் வாயில் மண் போடுகிறார்களே” என்று வேதனையோடு கூறுவார் அப்பா.

புதுமண்டபத்துக்கு எதிரே மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் அழுக்குப் படாத உண்மையாய் மனித உயரத்தைச் சிறிதாக்கிக் கொண்டு பெரிதாய் நின்றது. அதே இடத்தில் தெருவில் இரண்டு ஓரமும் பழைய பூட்டுச் சாவி குடை பழுதுபார்க்கும்க் கடைகள் தெருவை அடைத்துக் கொண்டிருந்தன. மாலை நேரமாகிவிட்டாலே அந்த இடத்துக்குத் தனிக் கலகலப்பும் அழகும் வந்துவிடும். பழைய காலத்தில் அதற்கு ‘அந்திக்கடை வீதி’ என்றே பெயர் இருந்ததாக அப்பா சொல்லுவார்.

அந்தக் கோபுரத்தையும் பெரிய கோயிலையும் ஆரவாரமும் நறுமணங்களும் மிகுந்த அம்மன் சந்நிதி முகப்பையும் கடந்து நடந்தாள் பூரணி. இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் ஆயிரம் செயற்கைகள் வந்து கலந்தாலும், மதுரையின் தெய்வீகப் பழமையை யாராலும் மாற்றிவிட முடியாதென்று தோன்றியது பூரணிக்கு. அம்மன் சந்நிதிக்குள் நுழைந்தாள். பூக்கடைகளும் சந்தனமும் மணத்தன. வளையல் கடைகள் ஒலித்தன. சீவகோடிகள் நுழைந்து புறப்படும் பிரகிருதி வாசலைப் போல் அந்த வாசலில் புனிதமான ஆரவாரம் குறையாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. பொற்றாமரைக் குளத்தைக் கடந்து அம்மன் சந்நிதிக்குள் போய்த் தரிசனத்தை முடித்துக் கொண்டு தெற்குக் கோபுரவாயில் வழியாகத் தெற்காவணி மூலவீதியை அடைந்தாள் பூரணி. தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் ஒரு தடவை பார்த்துக் கொண்டு கூட்டமில்லாத ஒரு நகைக்கடைக்குள் நுழைந்தாள்.

நான்கு பவுன் வளையல்கள். ஏறக்குறைய முந்நூறு ரூபாய்க்கும் அதிகமாகப் பழைய விலைப் பொருளாக எடுத்துக் கொண்டு பணத்தை எண்ணிக் கொடுத்தார்கள். பேசாமல் பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு வீட்டுக்காரர் வீட்டுக்குப் போனாள். ஆறுமாத வாடகைப் பாக்கியைக் கொடுத்து ரசீது வாங்கிக் கொண்டு, “இந்த மாத முடிவுக்குள் காலி செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தாள். வளையல் போட்ட பணத்தில் ஏழு ரூபாயும் பழைய ஐந்து அணாவும் மடியில் இருந்தன.

அப்பாவுக்கு வேண்டியவரும் நகரத்தில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவருமான பிரமுகர் ஒருவருடைய வீடு பக்கத்துத் தெருவிலே இருந்தது. அவர் நேர்மையானவர். போய்ப் பார்த்துத் தன் நிலையைச் சொன்னால் ஏதாவது வேலைக்கு வழி செய்வார் என்று நம்பினாள் பூரணி. ஆனால் அங்கேபோய் விசாரித்ததில் அவர் வெளியூர் போயிருப்பதாகவும், வர இரண்டு நாட்களாகுமென்றும் தெரிந்தது. வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பினாள்.

மறுபடியும் சென்ட்ரலுக்குப் போய் பேருந்து ஏறி அவள் திருப்பரங்குன்றத்தை அடைந்தபோது இருள் மயங்கும் போதாகிவிட்டது. குன்றின் உச்சியிலிருந்து மசூதிக்கருகில் நீல மின்விளக்கு ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தது. தெருவில் கோயிலுக்குப் போகும் கூட்டம் மிகுந்திருந்தது. தெருவில் தன் வீட்டு வாசலில் புத்தகமும் கையுமாக நிறையப் பள்ளிக்கூடத்துப் பையன்கள் கூடி நிற்பதைப் பூரணி கண்டாள். குதிரை வண்டி ஒன்று நின்றிருந்தது. ஓதுவார் தாத்தாவும் இருந்தார்.

பூரணி வீட்டை நெருங்கியதும் ஓதுவார்த் தாத்தா, கவலையும் பரபரப்பும் நிறைந்த முகத்தோடு அவளை எதிர்கொண்டு வந்து சொன்னார். “உனக்கு இருக்கிற கவலையும் துக்கமும் போதாதென்று சின்னத்தம்பி சம்பந்தன் பள்ளிக்கூடத்தில் மரமேறி விழுந்து கையை வேறு ஒடித்துக் கொண்டு வந்திருக்கிறான் அம்மா…”

பூரணி பையன்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே வேகமாக ஓடினாள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்