மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 2.
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 1. தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 1
பேரண்டப் பூச்செடியில் மறுபடியும் ஒருநாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது. மார்கழி மாதத்து வைகறை! உலகம் முழுவதுமே பனித்துளி நீங்காத (உ)ரோசாப் பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவியிருந்தது. மலரின் மென்மையில் கலந்து இழையோடும் மணம் போல் அந்தக் குளிரோடு கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும் விடியாத பேதைப் பருவத்து இளம்காலை நேரம். கீழ்வானத்து ஒளிக் குளத்தில் வைகறை நங்கை இன்னும் மஞ்சள் பூசிக் குளிக்கத் தொடங்கவில்லை.
பூரணி, கண்களைக் கசக்கிக் கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். கண்களை விழித்ததும் சன்னல் வழியாக எதிர்வீட்டுக் கோலம், மங்கிய ஓவியம்போல் அந்த மெல்லிருளிலும் தெரிந்தது. பெரிதாக வெள்ளைக் கோலம் போட்டு நடுவில் அங்கங்கே பறங்கிப் பூக்கள் பறித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த விடிகாலை நேரத்தில் வெள்ளைக் கோலத்தின் இடையிடையே பொன் வண்ணம் காட்டிய அப்பூக்கள் தங்கம் நிறைத்துத் தழல் பெருக்கி எங்கும் உருக்கி வார்த்த இங்கிதங்களைப்போல் இலங்கின. அந்தக் கோலத்தையும் அதன் அழகையும் நினைத்த போது, பூரணிக்குத் துக்கமாய்ப் பொங்கும் உணர்வின் சுமையொன்று மனத்தை அழுத்தியது. கண்கள் கலங்கி ஈரம் கசிந்தன.
அப்படி ஒரு கோலத்தை இன்னும் ஓர் ஆண்டுக்காலத்துக்கு அவள் தன் வீட்டு வாசலில் போடமுடியாது. கொல்லையில் அவள் வீட்டிலும் தான் பறங்கிப் பூக்கள் வண்டி வண்டியாய்ப் பூக்கின்றன. அவற்றை எங்கே பறித்து வைப்பது? யார் வைப்பது? துக்கத்தைக்கூட வரன் முறையாகவும் ஒழுங்காகவும் கொண்டாடுகிற அளவுக்கு வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டு பழகிவிட்ட நாடு இது. விழுதுகளைப்போல் ஊன்றிக் கொண்டிருக்கும் பழமையான பழக்கங்கள் ஆலமரம் போன்ற தமிழ்நாட்டின் படர்ந்த வாழ்க்கையைத் தாங்கிக் கொண்டிருக்கின்றனவே!
குளிர் தாங்காமல் மரவட்டைகளைப் போல் சுருண்டு படுத்துக்கொண்டு தூங்கும் தம்பிகளையும் தங்கைகளையும் பார்த்தாள் பூரணி. தலையணை போனது தெரியாமல், விரிப்புகளும் போர்வைகளும் விலகிய நிலையில் தரையில் சுருண்டு கிடந்த உடன்பிறப்புகளைப் பார்த்தபோது திருமணமாகாத அந்தக் கன்னிப் பருவத்திலேயே ஒரு தாயின் பொறுப்பைத் தான் சுமக்க வேண்டியிருப்பதை அவள் உணர்ந்தாள்.
உடன்பிறப்புகளை நேரே விரிப்பில் படுக்கச் செய்து போர்வையைப் போர்த்திவிட்டு நிமிர்ந்தபோது எதிர்ச் சுவரில் அப்பாவின் பெரிய படம் பூரணியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. அவள் அப்படியே அந்தப் படத்தைப் பார்த்தவாறே நின்றுவிட்டாள். அவர் தன்னையே பார்ப்பது போல் அவளுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று.
இயற்கையாகவே அவருக்கு அழகாக மலர்ந்த முகம். ஆழமான படிப்பும் மனத்தில் ஏற்பட்ட அறிவின் வளர்ச்சியும் அந்த அழகை வளர்த்துவிட்டிருந்தன. அவருக்கென்றே அமைந்தாற்போல அற்புதமான கண்கள். அன்பின் கனிவும், எல்லோரையும் எப்போதும் தழுவிக் கொள்ளக் காத்திருக்கிறார் போல் ஒரு பரந்த தாய்மை உணர்வும் அமைந்த கண்கள் அவை. எடுப்பாக நீண்டு அழகாக விளங்கும் நாசி. சும்மா இருந்தாலும் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தாற் போலவே எப்போதும் தோன்றும் வாயிதழ்கள். அந்தக் கண்களும், அந்த முகமும், அந்தச் சிரிப்பும் தான் மாணவர்களைக் கொள்ளை கொண்டவை. எவ்வளவு பெரிய நிலையில் எத்தனை சிறந்த பதவியில் இருந்தாலும் நான் தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் அவர்களின் மாணவன் என்று பிற்கால வாழ்விலும் சொல்லிச் சொல்லி மாணவர்களைப் பெருமை கொள்ளச் செய்த திறமை அது.
பூரணி பெருமூச்சு விட்டாள்! அப்படியே விளக்கை அணைத்துவிட்டு, மறுபடியும் இருட்டில் உட்கார்ந்து அப்பா காலமான துக்கத்தை நினைத்துக் குமுறிக் குமுறி அழவேண்டும் போல் இருந்தது. கண்ணீரில் துக்கம் கரைகிறது. அழுகையில் மனம் இலேசாகிறது.
பூரணி மெல்ல நடந்து சென்று அப்பாவின் படத்தை மிக அருகில் நின்று பார்த்தாள். கோயில் கருவறையில் உள்ள தெய்வப் படிமத்தின் அருகில் நின்று நேர்ந்தால் உண்மை பக்தனுக்கு மெய்சிலிர்க்கும் அல்லவா! அப்படி மெய்சிலிர்த்தது பூரணிக்கு. நீர்ப்படலங்கள் கண் பார்வையை மூடி மறைக்க முயன்றன.
அப்பாவின் முகத்தில் தெரிகிற சிறிது முதுமைகூட அம்மாவின் மரணத்துக்குப் பின் படிந்த முதுமைதான். அம்மா இறந்தபோது கூட அவர் வாய்விட்டு அழவில்லையே! நாங்களெல்லாம் மூன்று நாட்கள் சாப்பிடமாட்டோம் என்று பிடிவாதமாகக் குமுறி அழுதோம். படிப்பும், அனுபவங்களும் அவர் மனத்தை எவ்வளவுக்குக் கல்லாக்கியிருந்தன அப்போது.
Comments
Post a Comment