தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 8/17 தொடர்ச்சி)
தனித்தமிழ்க் கிளர்ச்சி : 9/17
திருமணம்
காதலனும் காதலியும் கருத்தொன்றிக் கலந்ததமிழ்க்
காதல் மணமேயக் காலத்தில் அம்மானை
காதல் மணமேயக் காலத்தி லாமாயின்
ஈதல் கிழவனுக்கின் றேற்றதோ அம்மானை
சாதல் கிழமணத்தின் சாலவுநன் றம்மானை (41)
நந்தமிழ் மக்கள்செய் நல்லதொரு திருமணத்தில்
செந்தமிழினால் நிகழ்ச்சி செய்யவேண்டும் அம்மானை
செந்தமிழி னால்நிகழ்ச்சி செய்யவேண்டு மாமாயின்
வந்தவட மொழிபோகும் வழியென்ன அம்மானை
வந்தவழி யேபோகும் வடமொழிதான் அம்மானை (42)
தமிழர்தம் திருமணத்தில் தக்கமண நிகழ்ச்சிகளைத்
தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே தகுதிகாண் அம்மானை
தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே தகுதியாம் என்பதைநம்
தமிழ்க்கிழவர் சிலரின்று தடுக்கின்றா ரம்மானை
தடுப்பவரை மணமக்கள் தடுக்கவேண்டும் அம்மானை (43)
அரசர்
பல்லார் வணக்கப் படைப்புக்கா லந்தொட்டே
பல்லாண்டு தமிழ்மன்னர் பாராண்டார் அம்மானை
பல்லாண்டு தமிழ்மன்னர் பாராண்ட துண்டாயின்
வல்லாரோ அரசியலில் வகுத்துரைப்பாய் அம்மானை
ஐயமானால் குறளிலுள்ள அரசியல்பார் அம்மானை (44)
வடநாடு முழுவதையும் வண்தமிழ்கொண் டாண்டசேரன்
வடஇமயங் கொள்இமய வரம்பனாம் அம்மானை
வடஇமயங் கொள்இமய வரம்பன் இருந்ததுண்டேல்
படையுடன் சென்றொருகை பார்ப்போம்நாம் அம்மானை
பார்த்தல் தவறாம்நம் பகுதிபோதும் அம்மானை (45)
– பேராசிரியர் சுந்தர சண்முகனார்
(ஆக்கம்: 1948)
தொடரும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
குறிப்புரை :-
41 – காதலனும் காதலியும் கருத்தொருமித்த காதல் மணமே வேண்டற்பாலது.
45 – அன்று வடக்கே படையெடுத்துச் சென்று, வடநாடு முழுவதையும் வென்று, இமயமலையில் தமிழ்க்கொடி நாட்டி, இந்தியா முழுவதும் தமிழையே பொதுமொழியாக வைத்து ஆண்டதால் இமயவரம்பன் என ஒரு சேரன் பெயர் பெற்றான். ஆனால், இன்று தமிழ்நாடு தமிழர்க்குக் கிடைத்தால் போதும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]
Comments
Post a Comment