ஈழ இலக்கியத்தில் ஐரோப்பியர் ஆதிக்கம்
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 3
சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
அத்தியாயம் 2
யாழ்ப்பாண வரலாற்றில் ஐரோப்பிய இனத்தவரின் தலையீடு ஏற்படத்தொடங்கியதுடன் தமிழிலக்கியத்திலும் புதிய பண்பு ஒன்று தலைதூக்கியது. கிறித்த சமயப் பாதிப்பு வௌித்தெரியும் இலக்கியங்கள் எழத்தொடங்கியமையே இப்புதிய பண்பாகும். இதனால் இத்தகைய பாதிப்பு வௌித்தெரியும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளைத் தனித்த ஒரு பிரிவாகக் கொண்டு அக்கால இலக்கியங்களை ஆராய்தல் பொருத்தமுடைத்து. இவ்விரு நூற்றாண்டுகளிலும் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆதிக்கம் இலங்கையின் மத்திய மலைநாட்டைத் தவிர்ந்த பகுதிகளில் நிலை பெற்றிருந்தது. 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போத்துக்கேயர் இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் தமது ஆட்சியை நிறுவினரெனினும் 1620ஆம் ஆண்டில்தான் யாழ்ப்பாணத்துத் தலைநகரான நல்லூரை அவர்கள் கைப்பற்றினர். அவர்கள் தமது ஆதிக்கத்தின் கீழ் வந்த பகுதிகளில் தமது நிலைமையைப் பலப்படுத்திக்கொள்ள மதமாற்றத்தையும் முக்கிய சாதனமாகக் கொண்டனர். கத்தோலிக்க மதகுருமாரின் மதம்பரப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளையும் போத்துக்கேயர் மேற்கொண்டனர். கத்தோலிக்க மதத்தைத் தழுவியோருக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. கத்தோலிக்கரான சுதேசிகள் சிற்சில வரிகள் இறுப்பதிலிருந்து விலக்கபட்டனர். கத்தோலிக்கரானோருக்கு நீதி வழங்கும் விடயத்தில் கூட சலுகைகள் அளிக்கப்பட்டன. இவற்றைவிடச் சைவர்கள் பொது இடங்களில் வணங்குவதும் தடைசெய்யப்பட்டது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் சலுகைகளுக்கிணங்கியும், வற்புறுத்தலினாலும் சைவர்கள் பலர் கிறித்தவராயினர். மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நீண்டகாலம் வாழ்ந்த கத்தோலிக்க மதகுருவாகிய பிரான்சிஸ்சேவியர் இப்பகுதிகளிலே கத்தோலிக்க மதம் நிலைபெற முயன்று உழைத்தார். போத்துக்கேயரின் பின்னர் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சியைக் கைப்பறிய ஒல்லாந்தரும் தமது மதப் பிரிவாகிய புரொட்டத்தாந்து கிறித்தவத்தைப் பரப்ப பல்வேறு முயற்சிகளையுமெடுத்தனர். எவ்வாறாயினும் இவ்விரு இனத்தவரின் ஆட்சிக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் சமயம் சார்ந்ததாகவேயமைந்தது. 16ஆம் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகள் இலங்கை அரசியல் வரலாற்றில் போத்துக்கேயர் காலம் (1505 – 1658) ஒல்லாந்தர் காலம் (1658-1798) என இரு பிரிவுகளாக அமையினும் தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை இவை ஒருகாலகட்டமாகவே நோக்குதற்குரியன. இரு வேறு இனங்களின் ஆட்சி என்பதைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இவர்களது ஆட்சிக்காலத்தில் ஏற்படவில்லை. இவ்விரு நூற்றாண்டுகளிலும் கிறித்தவ சமயப் பொருளடக்கம் கொண்ட நூல்கள் தோன்றத் தொடங்கியதைத் தவிர இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க புதிய போக்குகள் எவையும் காணப்படவில்லை. இக்காரணங்களினால் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகள் ஒரு காலகட்டமாகவே அமையத்தக்கவை.
இக்காலப் பிரிவில் கிறித்தவ சமயத்தாக்கத்தினால் எழுந்த நூல்களை முதலில் நோக்குவது பொருத்தமாகும். ஞானப்பள்ளு கத்தோலிக்க மதத்தின் பெருமையை விளக்கும் நூல். இதை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. இது இயேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. இப் பள்ளு நூலில் இடம் பெறும் புனிதத் தலங்கள் செரு சேலமும் உரோமாபுரியுமாகும். இக்காலக் கிறித்தவ இலக்கியங்கள் பற்றி பேராசிரியர் ஆ. சதாசிவம் கூறுவது இந்நூலுக்கும் பொருந்துவதாகும்.
“அக்கால இலக்கியங்களெல்லாம் கத்தோலிக்க மத நூல்களாகையின் அவற்றிற் கூறப்படும் நாட்டு நகர வருணனைகளெல்லாம் உரோமாபுரி செருசேலம் முதலிய மேல் நாட்டுக் கத்தோலிக்க புனித தலங்களைப் பற்றியனவாய் அமைந்துள்ளன. தேசியக் கருத்துகள் அந் நூல்களிற் பொருந்தப்பெறவில்லை. ஞானப்பள்ளிலே நாட்டு வளம் கூறும் பள்ளியர் ஈழத்தைப் பற்றிச் சிந்திக்காது உரோமாபுரியைப் பற்றியும் செருசேலமைப் பற்றியும் சிந்திக்கின்றனர்.
ஞானப்பள்ளினைவிட வேறு சில நூல்களும் குறிப்பிடத்தக்கன. பேதுருப்புலவர் இயற்றிய அருச்யாகப்பர் அம்மானை, தொன்பிலிப்பு இயற்றிய ஞானானந்தபுராணம், பூலோக சிங்க முதலியாரியற்றிய திருச்செல்வர் காவியம் என்பன இவற்றுட் சில. இவற்றுடன் சந்தியோகுமையூர் அம்மானை, திருச்செல்வர் அம்மானை,மருதப்பக்குறவஞ்சி ஆகியவையும் அடங்கும். இக் கிறித்தவ மத இலக்கியங்கள் பெரும்பாலன சமூகத்தின் கீழ்மட்ட மக்கள் தொடர்புடைய சிற்றிலக்கிய வடிவங்களிலே அமைந்துள்ளன என்பதும் சுவையான அவதானிப்பாகும். 19ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மதம் பரப்பியோர் பரவலான மக்களை எட்டக்கூடியதாக வசன நடயைப் பயன்படுத்தியதற்கும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டில் அதே தேவைக்கு இச் சிற்றிலக்கியவடிவங்கள் பயன்படுத்தப்பட்டவைக்கும் உள்ளார்ந்த தொடர்பு உண்டு போலும்.
மேற்கண்டவாறு கிறித்தவ சமயப் பரப்புரை நோக்குடன் இலக்கியங்களியற்றப் பெறுதல் புதிய பண்பாகக் காணப்படினும் தொடர்ந்து சைவசமயச்சார்பான நூல்களும் பெரு வாரியாக எழுந்துள்ளன. இந் நூல்கள் அனைத்தையும் இங்கு குறிப்பிடுதல் சாத்தியமன்று. இவற்றை அவதானிக்கும் போது தலபிரபந்தங்கள், விரதமகிமை,கிரியை விளக்கம் ஆகியவை பற்றியெழுந்த நூல்கள், சமயத் தெடர்பான வடமொழி இலக்கியங்களின் தழுவல்/ மொழிபெயர்ப்புகள் என வகைப்படுத்தலாம். சின்னத்தம்பிப் புலவரின் கல்வளையமகவந்தாதி, மறைசையந்தாதி, பறாளைவிநாயகர் பள்ளு, கூழங்கைத் தம்பிரானின் நல்லைக்கலிவெண்பா வீரக்கோன் முதலியாரின் வெருகல் சித்திரவேலாயுதர் காதல் முதலியன முதலாம் பிரிவுக்கு உதாரணங்காயமையும். வரத பண்டிதரின் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம் முதலியன இரண்டாம் பிரிவுக்கும் இராமலிங்க முனிவரின் சந்தானதீபிகை போன்றவை மூன்றாம் பிரிவுக்கும் எடுத்துக்காட்டுகளாகும். இவற்றை நோக்கும் போது தொடர்ந்து சைவசமய இலக்கியங்களே தமிழிலக்கிய மரபில் கோலோச்சி வந்தமை புலப்படுகின்றது.
Comments
Post a Comment