Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 8

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 7. தொடர்ச்சி)


குறிஞ்சி மலர்

அத்தியாயம் 3

 

“ஓடுகின்றனன் கதிரவன் அவன்பின்
ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்
வீடுகின்றன என்செய்வோம் இனி அவ்
வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே”
      -நற்றிணை விளக்கம்


துன்பங்களையும் தொல்லைகளையும் சந்திக்கும்போதெல்லாம், பூரணியின் உள்ளத்தில் ஆற்றல் வாய்ந்த தெளிவான குரல் ஒன்று ஒலித்தது. “தோற்று விடாதே? வாழ்க்கையை வென்று வாகை சூடப் பிறந்தவள் நீ. துன்பங்கள் உன் சக்தியை அதிகமாக்கப் போகின்றன. மனிதர்களின் சிறுமைகளையும் தொல்லைகளையும் பார்த்துப் பார்த்து உன் ஞானக் கண்கள் மலரப் போகின்றன. குப்பைகளையும் இழிவும் தாழ்வுமான நாற்றக் கழிவுப் பொருள்களையும் உரமாக எடுத்துக்கொண்டு மணமிக்கப் பூவாகப் பூத்து தெய்வச் சிலையின் தோளில் மாலையாக விழும் உயர்ந்த பூச்செடி போல் ஏழ்மையும் துன்பமும் உனக்கு உரம் கொடுத்து உன்னை மணம் கமழ வைக்கப் போகின்றன. நீ வாழ்க்கை வெள்ளத்தோடு இழுபட்டுக் கொண்டு போகும் கோடி கோடிப் பெண்களில் ஒருத்தி அல்லள். பெண்ணில் ஒரு தனி வாழ்க்கை நீ; வாழ்க்கையில் ஒரு தனிப் பெண் நீ. வாழ்க்கை வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடப் போகிறவள் நீ.

துன்பங்களை மிக அருகில் சந்திக்கும் போதெல்லாம் பூரணியின் இதயத்தில் இந்தக் குரல் ஒலித்தது. இது யாருடைய குரல்? எதற்காக ஒலிக்கிற குரல் என்பதை யாரால் அறிய முடியும்? விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல் ஆன்மாவோடு ஒட்டி வந்த தொனி அது. வாழ்க்கை மலர மலர அதுவும் மலரலாமோ என்னவோ? மருக்கொழுந்துச் செடியும் துளசிச் செடியும் எப்படி மணக்கும் என்பதை அவை வளர்ந்து பெரிதான பின்பு கண்டு பிடிக்கலாமென்று காத்திருக்க வேண்டாமே! முளைத்து வேர்விடும் போதிலேயே தத்தமக்குரிய மணத்தையும் பரப்பும் சிறப்பும் வாய்ந்த அந்தச் செடிகளைப் போல் சில பேருக்கு உருவாகும் போதே இலட்சியம் தானாக அமைந்துவிடுகிறது.

பூரணி துளசிச் செடி போன்றவள். முளைக்கும் போதே மணந்தவள். துளசியைப் போல அகமும் புறமும் தூய்மையானவள், புனிதமானவள். உள்ளும் புறமும் தமிழ்ப் பண்பு என்னும் மணம் கமழுகிறவள். துன்பங்களை வரவேற்று ஆள்கிற ஆற்றல் அவளுக்கு உண்டு.

பூரணி உள்ளே ஓடிச்சென்று பார்த்தபோது தம்பி சம்பந்தனைக் கூடத்தில் பாய் விரித்துப் படுக்கவிட்டிருந்தார்கள். சுற்றிலும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் கூட்டம். பெரிய தம்பி திருநாவுக்கரசு என்ன செய்வது என்று தோன்றாமல் சம்பந்தனின் தலைப் பக்கம் நின்று விழித்துக் கொண்டிருந்தான். ஏதோ பெரிய தவறைச் செய்து, தவற்றில் சிக்கிக் கொண்டு படுத்துவிட்டது போல் சம்பந்தன் விக்கலும் விசும்பலுமாக அழுதுகொண்டிருந்தான். குழந்தை மங்கையர்க்கரசியும் சேர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

பூரணி பக்கத்தில் உட்கார்ந்து, பாயில் துவண்டு கிடந்த தம்பியின் இடது கையைத் தூக்கித் தாங்கினாற்போல் நிறுத்த முயன்றாள். கை நிற்கவில்லை. நடுவில் முறித்த இளம் வாழைக் குருத்து வெயிலில் வாடி விழுகிற மாதிரி துவண்டு விழுந்தது. அக்காவைப் பார்த்ததும் சம்பந்தனின் அழுகை அதிகமாகிவிட்டது.

“சிறுபிள்ளைக் கைதானே அம்மா! மட்டை வைத்துக் கட்டினால் ஒன்றுகூடிவிடும். நாலு வீடு தள்ளி ஒரு நாட்டு வைத்தியர் இருக்கிறார். அவரைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லு” என்று ஓதுவார் தாத்தா பூரணிக்குப் பின்புறம் வந்து நின்று கொண்டு சொன்னார். பூரணி, திருநாவுக்கரசின் முகத்தைப் பார்த்தாள். திருநாவுக்கரசு நாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டுவர வேக வேகமாக ஓடினான்.

“அக்கா, நான் ஒண்ணுமே செய்யல அக்கா. பாலுங்கிற முரட்டுப் பையன் ஒருத்தன் எங்ககூடப் படிக்கிறான். அவன் மாடியிலிருந்து என் கணக்கு நோட்டைப் பிடுங்கி கீழே வீசியெறிந்துவிட்டான். மாடிக்கு நேரே கீழே ஒரு பெரிய மாமரம் இருக்கு. அந்த மரத்துக் கிளைக்கு நடுவே நோட்டு விழுந்து சிக்கிடுச்சு. அதை எடுக்கிறதுக்காக ஏறினேன். ஏறுகிறப்போ கால் இடறி விழுந்துவிட்டேன்” என்று அழுகைக்கிடையே நடந்ததைச் சொல்லி குற்றமின்மையை அக்காவுக்கு புலப்படுத்தினான் சம்பந்தன். மற்ற மாணவர்களை விசாரித்தாலும் ‘பாலு’ என்கிற முரட்டுப் பையனைப் பற்றி கடுமையாகத்தான் சொன்னார்கள். நோவும் வேதனையுமாகக் கை எலும்பு பிசகி விழுந்து கிடக்கும் அந்தச் சமயத்தில்கூடத் ‘தவறு தன்னுடையதில்லை’ என்று அக்காவுக்கு விளக்கிவிட வேண்டுமென அவன் துடித்துக் கொண்டிருந்த ஆர்வத்தைப் பூரணி குறிப்பாகக் கவனித்துக் கொண்டாள்.

திருநாவுக்கரசு நாட்டு வைத்தியரோடு வந்தான். பூரணி சற்று விலகினாற்போல் எழுந்து நின்றுகொண்டாள். வைத்தியர் அருகில் அமர்ந்து முழங்கையை எடுத்துத் தொட்டு அமுக்கிப் பார்த்தார். ஓதுவார்க் கிழவர் அவருக்குப் பக்கத்தில் இருந்தார்.

“ஒன்றும் பயமில்லை. விரைவில் சரியாகிவிடும்” என்று சொல்லிவிட்டு மூங்கில் பட்டைகளைக் கொடுத்துக் கையை நிமிர்த்திக் கட்டிக் கோழி முட்டைச் சாறு நனைந்த துணியால் இறுகிச் சுற்றுப் போட்டு முடித்தார் வைத்தியர். “கையை ஆட்டாமல் அசையாமல் வைத்துக் கொண்டிரு தம்பி, கொஞ்ச நாட்களில் எலும்பு ஒன்று கூடிக் கை முன் போல ஆகிவிடும்” என்று சம்பந்தனிடம் அன்போடு சொல்லிவிட்டு எழுந்திருந்தார் வைத்தியர். ஓதுவார்க்கிழவர் பூரணியின் காதருகில் ஏதோ சொன்னார். அவள் ஓடிப்போய் ஒரு தட்டில் நான்கு ரூபாய்களை வைத்து வைத்தியரிடம் மரியாதையாக நீட்டினாள்.

வைத்தியர் சிரித்தார். “உன்னிடம் வாங்கி எனக்கு நிறைந்துவிடாது அம்மா. அழகியசிற்றம்பலத்துக்கு நான் எவ்வளவோ செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். இதை நீயே வைத்துக்கொள். பையனுக்கு கை சரியான பின் அவசியமானால் ஏதாவது கேட்டு வாங்கிக் கொள்கிறேன்” என்று அவள் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டார் அவர்.

அப்பாவின் பெருமை அந்த வீட்டை ஆண்டுகொண்டு இருப்பதை பூரணி உணர்ந்தாள். காசையும் பணத்தையும் சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் அந்தக் குடும்பத்திற்கு உதவி செய்து பெருமைப்பட விரும்பும் மனிதர்களையும் உறவையும் நான்குபுறத்தும் தேடி வைத்துப் போயிருக்கிறார் அவர். பணம் வாங்க மறுக்கும் வைத்தியர், தன் குடும்பம் போல் எண்ணிச் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் ஓதுவார், தனி அனுதாபத்தோடும் அன்போடும் உதவக் காத்திருக்கும் அண்டை அயலார்கள், இவையெல்லாம் அப்பாவின் நினைவாக எஞ்சியிருக்கிற பெருமைகளல்லவா?

பள்ளிக்கூடத்துப் பையன்கள் கூட்டம் போகிற வழியாயில்லை. “உங்களுக்கெல்லாம் வேடிக்கையாயிருக்கிறதா? அவன் கையை ஒடித்துக்கொண்டு வந்து விழுந்து கிடக்கிறான். கூட்டம் போடாமல் வீட்டுக்குப் போய்ச் சேருங்கள்” என்று ஓதுவார்க் கிழவர் கூப்பாடு போட்ட பின்பே பிள்ளைகள் கூட்டம் குறைந்தது. குழந்தை மங்கையர்க்கரசிக்கு நடந்தது என்னவென்று தெரியாவிட்டாலும் “அண்ணன் சம்பந்தனுக்கு ஏதோ பெரிய துன்பம் வந்திருக்கிறது. இல்லாவிடில் பாயில் படுக்கவிட்டு வைத்தியரெல்லாம் கட்டுப்போடமாட்டார். இத்தனை பேர் கூடமாட்டார்கள்” என்று மொத்தமாக ஏதோ துக்கம் புரிந்தது. அதனால் அந்தக் குழந்தையின் அழுகை இன்னும் ஓயவில்லை. எதிர்வீட்டு ஓதுவார்க் கிழவர் விடைபெற்றுப் புறப்பட்டார். “நான் வீட்டுக்குப் போகிறேன் பூரணி. தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்; ஏதாவது வேண்டுமானால் என்னைக் கூப்பிடு; வாசல் திண்ணையில்தான் படுத்துக் கொண்டிருப்பேன். எதை நினைத்தும் துக்கப்படாதே அம்மா! இன்னாருடைய பெண் எனச் சொன்னாலே மற்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவ முன் வருகிற அத்தனைப் பெருமையை அப்பா தனக்குத் தேடி வைத்துப் போயிருக்கிறார். நீ ஏன் அம்மா கலங்க வேண்டும்?” என்று போகும்போது சொல்லிவிட்டுத் தான் போனார் அவர்.

‘எல்லோரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள். அப்பாவின் பெருமை காப்பீட்டு ஏற்பாடுபோல் மரணத்துக்குப் பின் இலாபம் சம்பாதிக்கிற இறுதிமுறி(உயில்) வணிகமா என்ன? பண்புள்ளவன் அடைந்த புகழைப்போல் பொதிந்து வைத்துப் போற்ற வேண்டிய பெருமையல்லவா அது? நான் வசதிகளை அடைவதற்காக அப்பாவின் பெருமையை செலவழித்து வீணாக்க வேண்டிய அவசியமில்லையே! என்னுடைய கைகளால் உழைத்து நான் வாழ முடியும். என் உடன்பிறப்புகளையும் வாழ வைத்து இந்தக் குடியை உயர்த்த முடியும். சிறிய ஆசைகளை முடித்துக்கொள்வதற்காக அப்பாவின் பெருமையைச் செலவழிக்க நான் ஒரு போதும் முற்படமாட்டேன். அப்பாவின் பெருமையில் மண்ணுலகத்து அழுக்குகள் படிய விடமாட்டேன்’ என்று எண்ணி நெட்டுயிர்த்தாள் பூரணி. இவற்றை நினைக்கும்போது அவளுடைய முகத்திலும் கண்களிலும் ஒளியும் உறுதியும் தோன்றின.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்