Skip to main content

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 6/17

 அகரமுதல




(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 5/17 தொடர்ச்சி)

 

தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 6/17

 

ஏர்திருந்து வளமுடைய இன்தமிழ்நாட் டினில்இன்று
சீர்திருத்தம் மிகப்பெரிதும் செய்யவேண்டும் அம்மானை
சீர்திருத்தம் மிகப்பெரிதும் செய்யவேண்டும் என்றிடினச்
சீர்திருத்த வழியொன்று செப்பிடுவாய் அம்மானை
நாடகத்தால் சீர்திருத்தம் நாட்டவேண்டும் அம்மானை       (26)

தமிழர் நாகரிகம்

நாகரிகத் தினைப்பெரிதும் நாடுகின்ற இவ்வுலகில்
நாகரிகத் திற்சிறந்தோர் நந்தமிழர் அம்மானை
நாகரிகத் திற்சிறந்தோர் நந்தமிழ ராமாயின்
நாகரிகம் எதுவென்று நவின்றிடுவாய் அம்மானை
நயமான நற்குணமே நாகரிகம் அம்மானை       (27)

விருந்து புறத்திருக்க விலாப்புடைக்க உண்ணாநம்
அருந்தமிழ் தாய்பலரை ஆதரித்தாள் அம்மானை
அருந்தமிழ்த் தாய்பலரை ஆதரித்த தாற்பின்னர்
வருந்தும் வறுமையின் வாய்ப்பட்டாள் அம்மானை
பட்டதுகேள் பகைவர்செய் பழிச்செயலால் அம்மானை       (28)

உரங்குன்றா நெஞ்சுடைய உயர்தமிழர் எவரிடமும்
இரங்குகின்ற நெஞ்சம் இயைந்தவர்காண் அம்மானை
இரங்குகின்ற நெஞ்சம் இயைந்தவர் என்றாலவ்
இரக்கந்தான் நன்றாமோ எதிரியிடம் அம்மானை
ஏமாறா(து) அவரிடமும் இரங்கலாம் அம்மானை       (29)

அறத்துறை மாறாத ஆன்றோர்காண் அம்மானை
அறத்துறை மாறாத ஆன்றோரென் றாலவர்கள்
மறத்துறை அறியாத மண்டுகளோ அம்மானை
புறப்பொருளில் அவர்தமது போர்மறங்காண் அம்மானை       (30)

 பேராசிரியர் சுந்தர சண்முகனார்

  (ஆக்கம்:  1948)

தொடரும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்புரை :-

26 – பல துறைகளிலும் சீர்திருத்தம் செய்விக்கும் நாடகங்களே நாட்டிற்குத் தேவை.
27 – ஆடையணிகள் முதலியவற்றால் செய்துகொள்ளும் வெளியழகு நாகரிகமன்று. உள்ளழகாகிய நயமான நற்குணமே நாகரிகம்.
28 – விருந்தோம்பியதால் வறுமை வந்துவிட வில்லை. விருந்தாய் வந்த பகைவரின் துழ்ச்சியினாலேயே வறுமைவந்தது.
29 – எதிரியாயிருப்பினும் இரங்கலாம். ஆனால் ஏமாந்து விடக்கூடாது, திறத்தினில் மிக்கநம் திண்தமிழர் எஞ்ஞான்றும்

30 – புறப்பொருள் என்றால், போர்மறம் முதலியவற்றைக்கூறும் இலக்கணம், இவ்விலக்கணத்தால் அமைந்த தமிழ் நூற்களில் தமிழரின் போர்த்திறத்தைக் காணலாம். போரென்றால் அறப்போராகும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்