நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும்! : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
அகரமுதல
நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும்!
பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம்
கனி உதிர்ந்து வீழ்ந்தற்று, இளமை; ‘நனி பெரிதும்
வேல்-கண்ணள்!’ என்று இவளை வெஃகன்மின்; மற்று இவளும்
கோல்-கண்ணள் ஆகும், குனிந்து
பொருள்: இன்று கனிந்தும் குளிர்ந்தும் விளங்கும் இளமை பின்னர் நிலைமாறிக் கெடும். ஆதலின் அழியும் இளமையை விட அழியா நற்செயல்களில் கருத்து செலுத்துக.
சொல் விளக்கம்: இளமை=இளமைப்பருவமானது; பனி=குளிர்ச்சி; படு= பொருந்திய; சோலை=சோலையில், பயன்= பலனைத்தரும்; மரம் எல்லாம்= எல்லா மரங்களிலும்; கனி=பழங்கள்; உதிர்ந்து=உதிர்ந்து; வீழ்ந்தற்று= கீழே விழுவது போலும்; (ஆதலால்), நனி=மிக; பெரிதும்=பெரிய; வேல்=வேல் போலும்; கண்ணள் என்று=கண்களையுடையவள் என்று; இவளை=இப்பெண்ணை; வெஃகன்மின்=விரும்பாதிருங்கள்; மற்று இவளும்=பின்பு இப்பெண்ணும்; குனிந்து=கூனியாகி; கோல்=வழி தெரிந்து நடப்பதற்கு ஊன்று கோலையே; கண்ணள் ஆகும்= கண்ணாக வுடையவள்
இளமையில் வேல்கண்ணுடையவள் முதுமையில் பாதையில் நடந்து செல்லக் கைத்தடியைக் கண்ணாகக் கொண்டு கோல்கண்ணுடையவளாக இருக்கிறாள் என்று நயம்படக் கூறியுள்ளார்.
நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
என்னும் வாலியின் பாடல் ‘மரியான்’ படத்தில் வரும்.
இப்பாடல் காதல் பிரிவைக் கூறினாலும் இளமை இன்ப நிலையாமையையும் சுட்டிக் காட்டுகிறது. நிலையில்லா இன்பத்தில் கருத்து செலுத்தாமல் நிலையான அறச்செயற்பாட்டு இன்பத்தில் கருத்து செலுத்த வேண்டும்.
என்றாலும் நாளை முதுமை வருவது இயற்கை. அதற்காக இன்றைய இளமையை வீணாக்கக் கூடாது. இன்ப நாட்டத்தை அளவாகக் கொண்டு நல்வினைகளுக்கான வாய்ப்புகளைத் தேடி நல்லன ஆற்றி நிலையான இன்பம் பெற வேண்டும்.
காய் கனிவதும் அதைப் பயன்படுத்தாவிட்டால் மரத்திலேயே பழுத்து விழுவதும் இயற்கை. பயன்படுத்தாப் பழ மரத்தால் பயனில்லை. வெறுமனே வாழ்ந்து பயனில்லை. பழங்களை நாமும் சுவைத்தும் பிறருக்கும் வழங்கியும் இன்பம் காணலாமே! இளமையில் நல்வினைகளால் நாமும் பயனுற்றுப் பிறர் பயன்படவும் வாழலாமே!
Comments
Post a Comment