நாலடி இன்பம்-4. மன்னர்களே கவனியுங்கள்!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
அகரமுதல
நாலடி இன்பம்-4. மன்னர்களே கவனியுங்கள்!
யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் – ஏனை
வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
பொருள்: யானையின் கழுத்து அழகுபட ஒளிவிட்டு விளங்கும்படி, வெண்கொற்றக் குடை நிழலில் பல படைகளுக்குத் தலைவராய் வெற்றி உலாச் சென்ற அரசர்களும் மற்றதீவினை கெடுக்க, அதன் காரணமாகக் தாம் திருமணம் செய்துகொண்ட மனைவியைப் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி முன் பெருமித நிலைக்கு மாறான வறுமையாளராகி நிலைகுலைவர்.
சொல் விளக்கம்: யானை=யானையினது; எருத்தம்=பிடரியில்; பொலிய= ஒளிவிட, விளங்க; குடை=வெண்குடையின்; நிழல் கீழ்=நீழலின் கீழே; சேனை= நால்வகைப்படைக்கும்; தலைவராய்=முதல்வராய்; சென்றோரும்=சென்ற அரசர்களும்; ஏனைவினை=தீவினை; உலப்ப=கெடுக்க; வேறாகி=வேறுபட்டு; தாம்=தாங்கள்; கொண்ட=இல்வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்ட; மனையாளை=மனைவியை; மாற்றார்=பகைவர்; கொள=கைக்கொள்ள; வீழ்வர்= கெடுவர்.
அரசர் ஏறிஅமர்ந்ததால், யானை அழகும் பெருமையும் பெற்றது என்பதிலிருந்து ஏறியவர் சிறப்பு புரிகிறது. பல படைகளுக்குத் தலைமை தாங்கும் அரசர் என்பதால் அரசரின் வலிமையும் தெரிகிறது. மாற்றார் இவர் மனைவியைக் கவர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்படும் வகையில் ஆட்சியை யிழந்தார் என்பது புரிகிறது. செல்வம் நிலையாமை என்னும் அதிகாரத்தினுள் இப்பாடல் வருவதால் அனைவரும் செல்வம் நிலையற்றது என்ற அளவில் பொருள் தருகின்றனர். செல்வம் என்பது பணமும் அணிகலன்களும் பிற உடைமைகளும் மட்டுமல்ல. ஆட்சியையும் செல்வம் என்றே சொல்லலாம். எனினும் வெற்றியும் வலிமையும் நிலையானதல்ல என்றே கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து வாகைசூடிப் பின்னர் தோல்வியுற்ற மன்னர்கள் பலரின் வரலாறுகளை நாம் படித்திருக்கிறோம். இந்த நிலையாமையைச் சுட்டிக்காட்டித்தான் ஆட்சியும் செல்வமும் நிலையற்றது என உணர்த்துகிறது இப்பாடல்.
வலிமையானவர்களும் வீழ்ச்சி அடைவர்!
உயர்ச்சி உற்றவர்களும் தாழ்ச்சி அடைவர்!
Comments
Post a Comment