Skip to main content

நாலடி இன்பம் 6 – காலத்தினால் செய்த உதவி! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

அகரமுதல


நாலடி இன்பம் 6 – காலத்தினால் செய்த உதவி!

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா – முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
தொடுத்தாறு செல்லும் சுரம்
பொருள்: ஏதேனும் ஒரு பொருள் கிடைத்தால் பின்னர் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இறுகப் பிடித்துக்கொண்டு இராதே. அதை முன்னதாகவே அறவழியில் செலவிடு. அப்போதுதான் எமன் அழைத்துச் செல்லும் துன்ப வழியில் இருந்து தப்பி நல்லுலகு அடைவாய்.
சொல் விளக்கம்: என் ஆனும் = யாதாகிலும்; ஒன்று = ஒருபொருள்; தம் = தமது; கை = கையில்; உற = பொருந்த; பெற்றக்கால் = பெற்றால்; பின் ஆவது என்று = பின் கொடுப்போம் என்று; பிடித்து இரா = பிடித்திராமல்; முன்னே = முற்காலத்தில்; கொடுத்தார் = கொடுத்தவர்கள்; கோடு = தன்செய்கையிற் கோட்டம்; இல் = இல்லாத; தீ = பொல்லாத; கூற்றம் = இயமன்; தொடுத்து = பாசத்தாற்கட்டி; செல்லும் = போகும்; சுரம் = பாலைவனத்தினது; ஆறு = வழியை (நீக்கி); உயப் போவர் = பிழைத்துப் போவார்கள்.
எமன், அரசன் – ஆண்டி, தலைவர் – தொண்டர், ஏழை – பணக்காரன், ஆண் – பெண், குழந்தை – முதியோர் போன்ற எவ்வகைப் பாகுபாடுமின்றி விருப்புவெறுப்பின்றி நடந்துகொள்வதால் குற்றமற்ற நடுநிலையாளராகச் சிறப்பித்துக் ‘கோடுஇல்’ எனக் குறிக்கப் பெற்றுள்ளது. நடுநிலையாக இருந்தாலும் உயிரைப் பறிப்பதால் தீக் கூற்றம் என்கிறார் புலவர்.
கிடைத்த பொருளை உடனே பயன்படுத்தாவிட்டால் அச்செல்வம் அல்லது பொருள் அழிய நேரிடலாம், திருட்டுக்கு ஆளாகலாம், ஏதோ ஒரு வகையில் பயனற்றுப்போகலாம். பின்னர் யாருக்கோ, எதற்கோ உதவ எண்ணியிருந்தால் அதற்கான தேவையின்றி அவரோ அந்தச் சூழலோ இல்லாமல் போகலாம் அல்லது நம் மனம் மாறி உதவுவது மேலும் தள்ளிப்போகலாம். எனவேதான் வாய்ப்புள்ளபோதே நற்செயல் புரிய வேண்டும்.
“அன்றறிவாம் என்னாது அறஞ் செய்க” (திருக்குறள் 36) எனத் திருவள்ளுவர் கூறுவதுபோல் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என எண்ணாமல் உடனே அறவினை ஆற்ற அறிவுறுத்துகிறது.
‘மகிழம்பூ’ திரைப்படத்தில் கவிஞர் மாயவநாதன், “இருப்பதை எல்லாம் கொடுக்கிற மனிதருக்கு நிலைக்கிற புகழ் இருக்கும்” என்கிறார்.
நிலைத்த புகழ் வேண்டுமெனில் இவ்வாறு பிறருக்கென நற்செயல்களைப் பொருள் இருக்கும்போதே செய்ய வேண்டும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்