பொருள்: நட்புகளும் பிணைப்பு அறுந்தன; நல்லோரும் அகன்றனர்; அன்புக் கட்டுகளும் அவிழ்ந்தன; உனக்குள்ளே ஆராய்ந்து பார். ஆழ்கடலில் கப்பல் மூழ்கும்போது கப்பலில் உள்ளோரால் ஏற்படும் அழுகுரல் ஓசைபோல் சுற்றத்தார் அழுமோசை வந்தது அல்லவா? அப்படியானால் வெறுமனே வாழ்ந்து என்ன பயன்?
பிறந்த மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்று எண்ண வேண்டுமே தவிர வாழ்ந்து எனன பயன் என்று சலித்துக் கொள்ளக் கூடாது. வாழ்தல் என்றால் உண்டும் உடுத்தும் ஆரவாரச் செயல்களில் ஈடுபட்டுக் களித்தும்(மகிழ்ந்தும்) வாழ்வதல்ல. இளமை நிலையற்றது என்பதை உணர்ந்து நிலையான நற்செயல்களைச் செய்து பிறர் உள்ளத்தில் வாழ வேண்டும்.
‘சபாசு மாப்பிளே’ படத்தில் கவிஞர் மருதகாசியின்
“வெள்ளிப் பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகுதூரம்”
என்னும் பாடல் வரும்.
அப்பாடலில்
“பிள்ளை யெனும் பந்த பாசத்தைத் தள்ளிப்
பிரிந்தோடும்-தன்
உள்ளத்தை இரும்புப் பெட்டகமாக்கித்
தாழ் போடும்!”
எனவும் வரும். இவ்வாறு பணம் சேரும்பொழுது அதுவரை உடன் இருந்தவர்களிலிருந்து விலகி விடுகின்றனர்.
பணம், பணம் என அலைந்து குடும்பத்தார், சுற்றத்தார் நட்பினர் வட்டத்திலிருந்து அகலக்கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களின் அன்பு வட்டத்திலிருந்து அகல வேண்டி வரும். உழைப்போடு அன்பு வட்டத்துடன் உறவாடவும் நேரம் ஒதுக்க வேண்டும். பயனின்றி வாழாதே! நற்செயல்புரிந்து வாழ்!
Comments
Post a Comment