Skip to main content

நாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

அகரமுதல


நாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே!

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.
பொருள்: அறுசுவை உணவை மனைவி அன்புடன் உண்பிக்க, ஒவ்வொரு வகை உணவிலும் மீண்டும் கைப்பிடி அளவேனும் உணவு வேண்டா என்னும் அளவில்சுவையாக நிறைவாக உண்ணும் செல்வரும் வறுமையுற்று ஒரு காலத்தில் இரந்து உண்ண நேரும். எனவே, செல்வத்தை நிலையானதாகக் கருதற்க.
சொல் விளக்கம்: அறு சுவை=அறுவகை சுவையாகிய; உண்டி=உணவை; அமர்ந்து=விரும்பி; இல்லாள்=மனைவி; ஊட்ட=ஊட்டிவிட; மறு=மறுக்கப்பட்ட;சிகை=வன்மையான உணவு வகைகளை; நீக்கி=தள்ளி; உ்ண்டாரும்= மென்மையான உணவு வகைகளை உண்டாரும்; வறிஞர் ஆய்= வறுமையாளராய்; ஓர் இடத்து=வேறோர்இடத்தில்; சென்று= போய்; கூழ்=உணவினை; இரப்பர் எனில்= இரந்து கேட்பார் எனில்; செல்வம்= சொத்துகள்; ஒன்று உண்டு ஆக= ஒரு பொருள் உள்ளதாக; வைக்கல்= வைக்கும்;பற்று= பகுதியுடையது; அன்று= அல்ல.
“சிகையென் பதுவே பதார்த்த மாகும்
அதுவே வன்மை மென்மை யெனப்படும்.”
என அரும்பதக்கொத்து குறிப்பிடுகிறது.
இதனால் சிகையென்பது உணவாக அமையும் துணைக்கறிகளாகும். செல்வர்கள் வன்மையான கறி வகைகளை வருத்தமுற்றுக் கடித்து உண்ணுதல் அரிதாகலின் ‘மறுசிகை நீக்கி’ என்றார் என்பர். கறி என்றால் இறைச்சி எனப் பொருள் கொள்ளக் கூடாது. சோறு நீங்கலான துணை உணவு வகையாகும்.
சிகை என்றால், படைத்த சோறு என்றும் ஒருபிடி சொறு என்றும் சொல்லலாம். அவ்வாறெனில், சிகை என்பது இப்பாடலில் நிறைவான கைப்பிடி அளவைக்குறிக்கிறது. மீண்டும் உணவை வேண்டா அளவு சுவையும் நிறைவும் உள்ள உணவு வகைகளைக் கூறுகிறது. வகை வகையாகச் சுவை சுவையாக உண்பவரும் பின்னர்சிறிதளவு சுவையற்ற உணவிற்கும் பிறரிடம் இரக்க நேரிடும் என்கிறார்.
உணவு போடுதல் அல்லது பரிமாறுதல் என்று சொல்லாமல் அமர்ந்து ஊட்ட என்று மனம் பொருந்தி மகிழ்ச்சியோடு உண்பிப்பதைக் குறிக்கக் கூறியுள்ளார். மகிழ்சியான செல்வம் நிறைந்த மனை வாழ்வும் மங்கும் என்னும் உண்மையைக் கூறுகிறார்.
செல்வம் நிலையற்றது என்பதால் அதை ஈட்ட வேண்டா எனப் பொருளல்ல. அதை வெறுமனே வைத்திருக்காதே! தக்கவாறு நற்செயல்களில் ஈடுபடு! மேலும் அறவழியில் பொருள் சேர்த்து அதையும் சுற்றத்தாரும் பிறரும் பயனுறச் செலவிடு! இவையே இப்பாடல் கூறும் கட்டளைகள்.
செல்வம் நிலையாமை குறித்துத் திருமூலர் முதலான பிறரும் பாடி உள்ளனர். பேரறிஞர் அண்ணாவின் வேலைக்காரி திரைப்படத்தில் உடுமலைநாராயணகவியின்
ஓரிடம் தனிலே – நிலை
இல்லாதுலகினிலே
உருண்டோடிடும் பணம் காசெனும்
உருவமான பொருளே
எனப் பணம் ஓரிடத்தில் நிலைத்து நிற்காது என்பதைக் கூறும் பாடல் வந்திருக்கும்.
அக்காலம் முதல் இக்காலம் வரையிலும் செல்வம் நிலையாமையை உணர்த்தி வந்தாலும் வாழ்வையும் செல்வத்தையும் நிலை என எண்ணி அல்லலுறுவோர்தான்பெரும்பான்மையர் இருக்கின்றனர்.
பற்பல ஆண்டுகளுக்கு முன் நாலடியார் சொன்னதைத்தான், இன்று நிதி மேலாண்மை என்று பேசிவருகிறோம்.
(நாளை மறுநாள் காண்போம்)
இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் 02.09.2019

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue