நேபாளத்தில் சீற்றமடா ! – சி. செயபாரதன், கனடா
இமயத் தொட்டிலில் ஆட்டமடா !
இயற்கை அன்னை சீற்றமடா !
பூமாதேவி சற்று தோள சைத்தாள் !
பொத்தென வீழும் மாளிகைகள்
பொடி ஆயின குடி வீடுகள் !
செத்து மாண்டவர் எத்தனை பேர் ?
இமைப் பொழுதில்
எல்லாம் இழந்தவர் எத்தனை பேர் ?
கட்டிய இல்லம், சேமித்த செல்வம்
பெட்டி, படுக்கை, உடுப்பு,
உணவெல்லாம் மண்ணாய்ப் போச்சு !
அந்தோ !
வேனிற் கால வாடைக் காற்றில்,
அழும் சேய்க ளோடு
தெரு மேடையில் தூங்குகிறார் !
வானமே கூரை !
சுவரில்லை ! கதவில்லை !
போர்த்திக் கொள்ள
துணி யில்லை !
மானம் போனது, மதிப்பு போனது !
தானம், தருமம் நாடி
வானம் நோக்கித் துதிக்கிறார் !
கடவுளுக்குக்
கண்ணில்லை; காதில்லை !
கருணையும் இல்லை !
எண்ணிலா நேபாளியர் புதைபட்டார்
உயிரொடு !
இடிந்த வீடுகள் புதை காடாயின !
எங்கெங்கு வாழினும்
இன்னலடா!
ஏழு பிறப்பிலும் தொல்லையடா !
சூழ்வெளி மட்டும்
பாழாக வில்லை யடா!
ஆழ் பூமிக் குள்ளும்
புற்று நோய் தொற்றுமடா
– சி. செயபாரதன், கனடா
Comments
Post a Comment