அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 5 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின
முதல் கையேடு – 5
(புத்தக முயற்சிச் சிக்கல்)
1982-இலிருந்து புத்தக வேலையைப் பற்றிய
பேச்சை எடுத்தாலே இயேன் அம்மையாருக்கு வெறுப்பாக இருந்தது. எல்லாக்
குறிப்பேடுகளையும் கட்டித் தூக்கிவைத்துவிட்டார். என் குறிப்புகள் மட்டும்
என்னிடம் இருந்தன.
அவ்வப்போதைய தொலைபேசித் தொடர்பும்
கிறித்துமசு வாழ்த்துகளும் மட்டுமே எங்கள் தொடர்பை வளர்த்தன. 2001-இல் என்
அம்மா இறந்தபோது இயேன் அம்மையாரின் சொற்களே எனக்கு ஆதரவு. 1978-1988
ஆண்டுகளில் என் மகனைப் பிரிந்திருந்த காலத்திலும் இயேன் அம்மையாரே எனக்கு
ஆறுதல். ஆனால் 1982-இலிருந்து புத்தகப் பேச்சு மட்டும் அவருக்குப்
பிடிக்கவில்லை.
2009-இல் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்சு
பல்கலைக்கழகத்து மாநாட்டுக்குப் போகும் வழியில் என் மகனோடு சென்று அவரைப்
பார்க்க விரும்பினேன். அவரும் “நீ எப்போது வருவாய் என்று காத்திருக்கிறேன்,
உன் மகனைப் பார்க்கவேண்டும்” என்றார். நான் புத்தக வேலைக்காகத்தான் வருவேன் என்றேன். சரி என்றார்! இந்தப் பேச்சு நடந்தது 2009 ஏப்ரலில். ஆனால், சரியான விமானத் தொடர்பு கிடைக்காததால் அவர் ஊருக்கு நாங்கள் போக முடியவில்லை.
2009 சூன், சூலை, ஆகத்து மாதங்களில்
பேசியபோதெல்லாம் நான் அவரைப் பார்க்க வரவில்லை என்றும் என் மகனை அவருக்குக்
காட்டாமல் வைத்திருக்கிறேன் என்றும் சொல்லி அன்போடு நொந்துகொண்டார்.
2009-இல் ஒரு முறை பேசியபோது உலகத்தோடு
தொடர்பில்லாத முறையில் அவர் பேசிய மாதிரி தெரிந்து அதிர்ந்துபோனேன். பிறகு
பேசியபோதெல்லாம் அதே நிலை. அப்போதுதான் மறதிநோய் (Alzhiemer’s disease)
அவரைப் பீடித்திருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்.
யாரோ அவர்களிடம் புத்தக வேலை செய்யவேண்டும் என்றால் பண உதவி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
அதை மனத்தில் வைத்துக்கொண்டு நான் பேசியபோதும் யாரோ பணத்துக்காக அவரைத்
தொல்லை செய்வதாக நினைத்துக் கூச்சல். மறதிநோய் முற்றிக்கொண்டே வந்தது.
பிறகு இயேன் அம்மையாரின் கணவர் என்னுடன்
தொடர்புகொண்டு நாங்கள் எழுதிய எல்லாக் குறிப்புகளையும் எனக்கு
அனுப்பிவைத்தார். அப்போது எனக்குக் கணி ணி அலுவலகத்தில் வேலை போய்விட்ட
நிலை — நாங்கள் பலர் செய்துவந்த ஒரு செயல் திட்டம் கலைக்கப்பட்டு எங்கள்
குழுவினருக்கு வேலை இல்லை.
மிகவும் நொந்துபோயிருந்தேன். மாத வருவாய்
இல்லாத நிலையில் வீட்டை விற்க வேண்டிய நிலை வரலாம் என்று பழைய
குறிப்பேடுகளையும் கட்டுரைகளையும் குப்பையில் போட நினைத்துக்
கிளறிக்கொண்டிருந்த நேரம் 2010 உயிர்த்தெழு திருநாள்(Easter). ஏதோ உட்குரல்
சொன்னது — இந்த முயற்சியைக் கைவிடாதே என்று. உடனே கடைக்கு ஓடினேன் அலகூடி(scanner) வாங்க! கடை அடைப்பு. மறுநாள் காலையில் போய் அலகூடி
வாங்கி வந்து (அந்தச் செலவு மிகவும் பெரிய செலவு எனக்கு) எங்கள்
கட்டுரைகளை மின்வருடத் தொடங்கினேன். நாங்கள் இந்தப் புத்தக வேலை தொடங்கிய
காலத்தில் மேசைக்கணினி, மடிக்கணினி … இல்லை. பன்னாட்டு வணிகப் பொறி-ஐபிஎம்
தட்டச்சுப்பொறி-யில் இயேன் அம்மையார் தட்டியதும் என் கையெழுத்துப் படிகளும்
மட்டுமே! அனைத்துக் குறிப்பேடுகளையும் மின்னாக்கம் செய்வது பெரும்பாடு.
அத்தனை ஆண்டுகள் பழசாகிப் போன தாட்களிலிருந்து கணினிக்கு எழுத்து ஏறுவதில்
சிக்கல். அந்தச் சிக்கலைத் தாண்டி ஒருவழியாக 400+ பக்கங்களைக்
கடைத்தேற்றினேன்!
அந்தப் பக்கங்களைப் படியெடுத்து(print
பண்ணி) இயேன் அம்மையாரின் கணவருக்கு அனுப்பி, இதைத்தான் ஒரு புத்தக வடிவில்
கொண்டுவரப்போகிறேன் என்று சொல்லி அவருக்கு ஊக்கம் கொடுத்தேன்.
இயேன் அம்மையாருக்கு அது புரிந்திருக்க வழியில்லை.
(தொடரும்)
Comments
Post a Comment