Skip to main content

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 3

 valmeeki,lava&kusa seethai_lava,kusa

காட்சி மூன்று

துறவகத்தில் இலவா, குசா இரட்டையர் பிறப்பு
 இடம்: வால்மீகி முனிவரின் துறவகம்.
நேரம்: மாலை
அரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதையை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார்.
 பெண்சீடர்கள்: மகரிசி! காட்டில் மயக்கமுற்ற இந்தப் பெண்ணை நாங்கள் அழைத்து வந்தோம். இந்தப் பெண்மணி ஒரு கர்ப்பிணி மாது. பார்த்தால் பெரிய வீட்டைச் சேர்ந்தவர்போல் தெரிகிறது. யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை. இங்கே சிறிது காலம் தங்க வைக்கலாமா ? அவருக்கு இப்போது யாருமில்லை! ஆனால் அவரது கணவர் சிறிது காலம் கழித்து அழைத்துச் செல்ல இங்கு வருவாராம்.
 வால்மீகி: (சற்று உற்று நோக்கி) …. எனக்குத் தெரியும் இந்த மாது யாரென்று! கோசல நாட்டுப் பேரரசி சீதாதேவி. மாமன்னர் இராமனின் தருமப்பத்தினி. மிதிலை நாட்டு மன்னரின் மூத்த புத்திரி! ஓய்வெடுக்க உள்ளே அழைத்துச் செல்லுங்கள். சீதாதேவியைக் காட்டிலே தனியாகவா கண்டீர்கள் ? …. கோசல நாட்டுப் பேரரசி கானகத்து வரக் காரணம் என்ன ?
 சீடர் அனைவரும்: (ஒருங்கே) மதிப்புக்குரிய பேரரசி சீதாதேவியாரா ? (எல்லாரும் கைகூப்பி வணங்குகிறார்கள்). எங்களுக்கு முதலில் தெரியாமல் போனதே! … ( சீடர்களில் ஒருத்தி) மகரிசி! அவர் கிடந்த நிலையைப் பார்த்தால் எங்களுக்குப் பரிதாபமாக இருந்தது! தாயாகிய பேரரசிக்குப் பணிவிடைகள் செய்ய அரண்மனைச் சேடியர் யாருமில்லை! காட்டில் விடப்பட்டுத் தனியே விழுந்து கிடந்தார். (இருவர் மட்டும் சீதாவை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள்). (சீடர்களில் ஒருத்தி) அவர் தனியாக வரவில்லை. உடனிருந்தவர் இருவர். பேரரசியாரின் கொழுந்தன் ஒருவர்! மற்றொருவர் படகோட்டி போல் தெரிந்தது. விட்டுச் சென்ற இருவரும், பேரரசியார் காலைத் தொட்டுக் கும்பிடும் போது எங்களுக்கு யாரென்று தெரியாமல் போனது. யாரென்று கேட்கவும் தவறி விட்டோம், மகரிசி! பேரரசியாரின் கொழுந்தன்தான் எங்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.
வால்மீகி: சீதையை அழைத்து வந்த கொழுந்தன் யாரென்று தெரியவில்லை ? பரதனா ? இலட்சுமணனா ? அல்லது சத்துருக்கனனா ? கங்கை நதியில் படகோட்டியவன், குகனாக இருக்க வேண்டும். எதற்காகச் சீதாதேவியைக் காட்டில் விட்டுச் சென்றார்கள் ?
 சீதா: (படுத்திருந்தவள் மயக்கம் மெதுவாக தெளிந்து எழுந்து கொண்டு) …. நான் … இப்போது … எங்கிருக்கிறேன் ?
 வால்மீகி: … அஞ்ச வேண்டாம் சீதா! … என் துறவகத்தில்தான் இருக்கிறாய். நான் வால்மீகி முனிவர். இவர்கள் யாவரும் துறவகத்தில் பயிலும் என் சீடர்கள். உன் மாமனார் தசரதப் பேரரசர் எனக்கு மிகவும் வேண்டியவர். உன் தந்தை மிதிலை நாட்டு மன்னரும் எனக்குத் தெரிந்தவர். மன்னர் உனக்குச் சுயம்வரம் நடத்தியது, வில்லை முறித்து இராமன் உன்னைத் திருமணம் செய்தது, நீங்கள் வனவாசம் செல்ல நேர்ந்தது, இலங்காபுரிக்கு உன்னை இராவணன் கடத்திப் போனது, போரில் அவனைக் கொன்று நீ மீட்கப் பட்டது, அயோத்தியா புரியில் இராமன் பட்டம் சூடியது எல்லாம் எனக்குத் தெரியும். …. ஆனால் எனக்குத் தெரியாதது, நீ இப்போது காட்டில் விடப்பட்ட காரணம்! … அதுவும் தாய்மை நிலையில் உன்னைத் தனியாக விட்டுப் போன காரணம்!
 சீதை: (மெதுவாக எழுந்து … காலைத் தொட்டு வணங்கி) மகரிசி! எனக்குப் புகலிடம் அளித்த உங்களுக்குக் கோடி புண்ணியம். என்னைக் கனிவுடன் அழைத்துவந்த உங்கள் சீடர்களுக்கு நான் கடமைப்பட்டவள். துறவகத்தைக் காட்டுவதாக என்னை அழைத்து வந்தவர், கொழுந்தன் இலட்சுமணன். என்னைச் சீடர்கள் வசம் ஒப்படைத்துச் சென்றவரும், அவரே.
 வால்மீகி: ஆச்சரியப்படுகிறேன். உனது வருகையை யாரும் எனக்குத் தெரிவிக்க வில்லையே. தெரிந்தால் நானே நேராக உங்களை வரவேற்க வந்திருப்பேன். மாமன்னர் இராமன் உன்னை ஏன் அழைத்து வரவில்லை ? முன் கூட்டியே எனக்கு ஏன் அறிவிக்கவில்லை? எதற்காக உன்னைத் தனியாக விட்டுச் சென்றார் இலட்சுமணன்? எனக்கு ஒன்றும் புரியவில்லை.
 சீதை: அது ஒரு பெரும் கதை, மகரிசி! பட்டம் சூடிய என் பதிக்குப் பல அரசாங்கப் பணிகள்! கோசல நாட்டுக் குடிமக்களின் புகார்கள்! தங்களுக்கு அவற்றைத் தனியாகச் சொல்ல விரும்புகிறேன்.
 வால்மீகி: சீடர்களே! உங்கள் அறைகளுக்குச் செல்லுங்கள். போகும் போது கதவை மூடிச் செல்லுங்கள். (கதவை மூடிச் சீடர்கள் வெளியேறுகிறார்கள்)
 சீதை: (கண்ணீருடன் அழுகை முட்டிக் கொண்டு வர) மகரிசி! … எப்படிச் சொல்வேன் என் அவல நிலையை! …. என் இல்வாழ்க்கை மீண்டும் முறிந்து போனது! முதல் வனவாசத் தண்டனையின் மனப்புண் ஆறுவதற்குள், இரண்டாம் வனவாசத் தண்டனை எனக்கு! என்னைப் புறக்கணித்து நாடு கடத்தி விட்டார் ..என்னுயிர்ப் பதி! (கதறி அழுகிறாள்).
 வால்மீகி: (பெருவியப்படைந்து) என்ன ? மாமன்னர் உன்னை மணவிலக்கு செய்து விட்டாரா ? அன்று வனவாசத்தில் நீ பட்ட இன்னல் போதாதா ? இப்போது உனக்கு ஏன் இரண்டாம் வனவாசம் ? மீட்டு வந்த உன்னை மீண்டும் காட்டுக்கனுப்ப எப்படி மனம் வந்தது மன்னருக்கு ? உன்மேல் சுமத்திய குற்றம்தான் என்ன சீதா ? எனக்குப் பெரும் புதிராக இருக்கிறது!
 சீதை: மகரிசி! காட்டில் விடப்பட்டதற்கு மெய்யான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. என் பதி அதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்ல வில்லை! வாயிருந்தும் நான் வாதாட முடிய வில்லை! காதிருந்தும் அந்தக் காரணம் என் காதில் விழவில்லை! வைராக்கியம் இருந்தும் நான் போராட வழியில்லை! என் பக்க நியாயத்தைக் கூற ஒரு நீதி மன்றமும் இல்லை! எனக்குத் தெரியாமலே என் பதி செய்த சதி! முதல் வனவாசத்துக்குக் காரணம் என் விதி! ஆனால் இரண்டாம் வனவாசத்துக்குக் காரணம் என் பதி! இன்று இலட்சுமணன் என்னிடம் கூறிய காரண மிது. காட்டில் விட்டுச் சென்ற சில மணி நேரத்துக்கு முன்புதான் எனக்கே காரணம் தெரிந்தது. கடத்திச் செல்லும் போது இராவணன் என் மயிரைப் பிடித்து இழுத்துச் சென்றானாம்! வாகனத்தில் என்னை மடிமீது வைத்து தூக்கிச் சென்றானாம்! பல வருடம் வேறொருவன் இல்லத்தில் இருந்தவளைப் பதியானவர் எப்படி ஏற்றுக் கொள்ளலாம் ? சகித்துக் கொண்டு என் பதி அரண்மனையில் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் கேலி செய்தார்களாம்! என் பதிக்கு அப்புகார் பெருத்த அவமானமாய்ப் போனதாம்! ஆனால் என் கணவருக்கு என்மீது எந்தவித ஐயமும் இல்லையாம்!
 வால்மீகி: அட ஈசுவரா! என்ன கொடுமை இது ? தெருமக்களின் கேலிக்கும், புகாருக்கும் ஓர் மாமன்னன் செவி சாய்ப்பதா ? மன்னனை மக்கள் அவதூறு பேசுவதைத் தவிர்க்க முடியாது! ஆனால் அதுவே சரியென்று தன்னுயிர் தருமப் பத்தினியைக் காட்டுக்கு அனுப்புவதா? கொடுமை! கொடுமை!! தாங்க முடியாத கொடுமை!!! இராம கதையே திசை மாறிப் போயிற்றே!
 சீதை: முதலில் வனவாசம் போவதற்கு முன்பும் அவர் ஒரு சொல் என்னிடம் சொல்லவில்லை! பதினான்கு வருடம் கானகம் போக வேண்டும் என்றார். ஆட்டுக் குட்டிபோல் அவர் பின்னால் சென்றேன்! தந்தை சொல் தட்டாத தனயன் என்று புகழ் பெற்றார். மனைவியை அடிமைபோல் நடத்துவது ஊரில் யாருக்குத் தெரியும் ? இரண்டாம் தடவை வனவாசம் தள்ளப்பட்டது முன்னைவிட மோசம். காட்டுக்குப் போவென்று கூட எனக்குக் கட்டளை இடவில்லை! சீதாவைக் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடு என்று தம்பிக்கு இரகசிய உத்தரவு! உருகிடும் உள்ளம் படைத்தவர் என் பதி! எப்படி நேராக மனைவிக்கு இந்தக் கோரத் தண்டனையைத் தருவது என்று மனம் தாங்காமல், தம்பிமார் காதில் மட்டும் சொல்லி யிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நாடு கடத்தி என் மானத்தை ஓரளவு காப்பாற்றி யிருக்கிறார்! உத்தமக் குணமுடையவர் என் கணவர்!
 வால்மீகி: அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் சீதா. என் கருத்தை மாற்றிக் கொள்ளும் வேளை வந்து விட்டது! உத்தமப் புத்திரனாய்ப் புகழ் பெற்ற மாமன்னர், உத்தமக் கணவராகவும் இருப்பார் என்று சொல்ல முடியாது போலிருக்கிறது!
 சீதை: இராவணன் என்னைத் தொட்டுத் தூக்கிச் சென்றது உண்மை! ஆனால் அவன் என்னை பலவந்தப் படுத்தவில்லை! அப்படி ஆகியிருந்தால் நான் அன்றே உயிரைப் போக்கி என் மானத்தைக் காத்திருப்பேன். இப்போது என் மதிப்பை, மானத்தை என் பதி நசுக்கினாலும், உயிரை நான் மாய்த்துக் கொள்ளப் போவதில்லை! காரணம், என் வயிற்றில் வளர்ந்து வரும் என் பிரபுவின் குலவிளக்கு. மகரிசி! இராவணன் எனக்கிழைத்த தீரா அவமானத்தையும் தாங்கிக் கொண்டு வாழ விரும்புகிறேன் நான். இனியும் குழந்தை பெற்றுக் கணவரோடு மனைவியாய் நெடுங்காலம் வாழ விரும்புகிறேன் நான். அப்படிக் கனவு காண்கிறேன்! ஆனால் அது நடக்கக் கூடியதா ? ஒன்றாய் வாழத் தவம் செய்தவளுக்குப் பதி இரண்டகம் செய்து விட்டார்! பதியிடமிருந்து இராவணன் என்னைத் தற்காலிகமாகப் பிரித்தான்! ஆனால் பதியிடமிருந்து இப்போது நிரந்தரமாகப் பிரித்தது யாரென்று நினைக்கும் போது, என் நெஞ்சில் தீப்பற்றி எரிகிறது! (கோவென்று கதறி அழுகிறாள்).
 வால்மீகி: …. சீதா! எனக்கொரு யோசனை தோன்றுகிறது. சொல்லட்டுமா? நானே உன்னை இராமனிடம் அழைத்துச் சென்று, புனிதமானவள் என்று எடுத்துச் சொல்லி மறுபடியும் சேர்த்துவிடவா ? நான் சொன்னால் மன்னர் கேட்பார்! உங்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டு மென்று என்மனம் துடிக்கிறது. அப்படிச் செய்வது உனக்கு விருப்பமா ?
 சீதை: அது என் விருப்பம்தான், மகரிசி! ஆனால் அது நடக்காது. வேண்டா அந்த முயற்சி! பிறன் கைபட்ட மனைவிக்கு இனி இல்லற மில்லை! வேண்டாத பதியின் வீட்டு நிலை கூட இடிக்கும்! தனியாக, இருப்பதுதான் எனக்கு மதிப்பு! அவமானப் பட்டவள் மாண்டு போவது நிம்மதி. ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் துணிச்சல் இப்போது எனக்கில்லை. பதியின் புறக்கணிப்பு நாளும் நெஞ்சைக் கரையான் போல் அரித்து வருகிறது! கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுவரக் கட்டளை யிட்டபின், கணவர் முகத்தில் நான் இனி எப்படி விழிப்பேன் ? எனக்குத் தன்மானம் இருக்கிறது. அவமானத்தைக் கொடுத்த எனக்கு, அரண்மனைக் கதவுகள் இனிமேல் திறக்கப்பட மாட்டா! தனியாக இந்த வனவாசத்தில் காலம் தள்ளி மன வேதனைப் பட்டே தினமும் சிறிது சிறிதாகச் சாக வேண்டியதுதான்! குழந்தை பிறக்கும்வரை நான் எப்படியும் பிழைத்திருக்க வேண்டும். இந்த வனவாசத்தில் என்னை மீட்க இனி யாரும் வரப் போவதில்லை! … மகரிசி! எனக்குத் தந்திருப்பது ஆயுள் தண்டனை! இராவணன் கொடுத்த சிறைத் தண்டனையை விடக் கோரமான ஆயுள் தண்டனை! இதிலிருந்து யாரும் என்னை விடுவிக்க முடியாது!
 வால்மீகி: தாயாகும் நீ இந்தச் சமயத்தில் அரண்மனை வாசியாக வாழ்வதே மேல். நீ விரும்பினால், உன்னை மிதிலாபுரிக்கு அழைத்துப்போய் உன் தந்தையிடம் சேர்த்து விடுகிறோம்.
 சீதை: வேண்டா மகரிசி! நாடு கடத்தப் பட்டு நான் துறவகத்தில் இருப்பது என் தந்தைக்குத் தெரிய வேண்டா! காரணம் தெரிந்தால் மிகவும் வேதனைப் படுவார்! பதிமீது சீறி எழுவார்! சினங்கொண்டு என் பதியிடம் உடனே சண்டைக்குப் போவார்! கோசலபுரி மீது போர் தொடுக்கவும் தயங்கமாட்டார். மேலும் மிதிலாபுரிக் குடிமக்கள் என்ன சொல்வார்கள்? மானம் கெட்டுப் போனவள் பதியால் துரத்தப் பட்டு பிறந்த நாட்டுக்கு ஓடி வந்தவள் என்று ஏசுவார்! கோசல நாட்டில்தான் என்னால் என் பதிக்கு அவமானம்! மிதிலா புரியில் என் தந்தைக்கும் என்னால் அவமானம் வர வேண்டுமா ?
 வால்மீகி: சீதா! நீ வாழ வேண்டும். மரணத்தைப் பற்றி நினைக்காதே. இளமை பொங்கும் நீ நீண்ட காலம் வாழ வேண்டும். இந்தத் துறவகத்தில் உனக்கு எப்போதும் இடமுண்டு! உனக்கு எல்லா வசதிகளும் இங்கு இருக்கின்றன. துறவகத்தில் பெண் மருத்துவர் இருக்கிறார். உன் உடல் நலத்தையும், குழந்தையின் நலத்தையும் கண்காணிப்பார். கவலைப் படாதே! குழந்தையைப் பெற்று அதை ஆளாக்கு. கல்வி புகட்டி குழந்தைக்குப் பயிற்சிகள் அளிப்பது என் பொறுப்பு.
 சீதை: மிக்க நன்றி மகரிசி. அரண்மனை கைவிட்டாலும், துறவுமனை ஆதரவளிப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் ? இங்கே சும்மா இருக்காமல், உங்கள் துறவகப் பணிகளைச் செய்கிறேன். சிறு பாலர்களுக்குக் கல்வி புகட்டுகிறேன். அத்துடன் நான் இதுவரை படிக்காத வேதங்களை உங்களிடம் படிக்க விரும்புகிறேன்.
 வால்மீகி: சீதா! பிறவிப் பயனென்று நான் கருதும் என் படைப்பைப் பற்றி உனக்கு நான் சொல்ல வேண்டும். இராம கதையை நான் மாபெரும் காவிய நூலாக எழுதி வருகிறேன். நேராக நீயே துறவகத்தில் புகுந்தது எனக்கு நல்லதாய்ப் போனது. உங்கள் வனவாசக் காண்டத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். நீ துறவகவாசியாக வந்திருப்பதால், என் இராமகதை மெய்யான வரலாற்றுக் காவியமாக உயிர்த்தெழப் போகிறது. உயிரற்ற என் நூலுக்கு உண்மையான உனது திருவாய் மொழி ஆத்மாவை ஊட்டப் போகிறது. இராமாயணம் என்னும் பெயரை அதற்கு வைத்திருக்கிறேன். என் காவிய நூலுக்கு இன்னும் பல விவரங்கள், விளக்கங்கள் வேண்டும். எனக்குத் தெரியாத தகவலை நீ சொல்ல வேண்டும். ஏழு அல்லது எட்டுக் காண்டங்களில் இராம கதை முடியும் என்று நினைக்கிறேன். அயோத்தியா காண்டம், வனவாசக் காண்டம், இலங்கைக் காண்டம் ஆகியவற்றில் பல பகுதிகள் இன்னும் நிரப்பப்பட வேண்டும். பதி உன்னைக் காட்டுக்கு அனுப்பியது இராமாயணக் காவியம் பூர்த்தியாகவோ என்று நான் நினைக்கிறேன்! மெய்யான நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கூற, உன்னை இங்கே அனுப்பியது விதி என்று சொல்வேன்! எல்லாம் ஆண்டவன் செயல். இராமாயணத்தில் இதுவரை நான் எழுதிய ஓலைகளை நேரமுள்ள போது, நீ சரிபார்க்க வேண்டும். தவறுகள் இருப்பின் தயங்காமல் கூறு! நான் அவற்றைத் திருத்திக் கொள்வேன். மேலும் துறவகத்தில் புதியதாகச் சேரும் சீடர்களுக்கு நீ கல்வி புகட்டலாம். நீ விரும்பும் வேதங்களைச் சொல்லிக் கொடுப்பது என் பொறுப்பு.
 சீதை: உங்கள் பணியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன், மகரிசி! உங்கள் வரலாற்றுப் படைப்பான இராம கதைக்கு என் கசந்த வாழ்க்கையும், நேரடிப் பங்களிப்பும் உதவி செய்ய முடியும் என்று கனவிலும் நான் கருதவில்லை. இரண்டாம் வனவாசத்தில் என் குழந்தை பிறக்கவும், மகரிசி மூலம் நான் வேதக் கல்வி பயிலவும், இராம காவியத்தை முடிக்கவும் வாய்ப்புக் கிடைக்கப் போவது அறிந்து ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சியே!
 வால்மீகி: சீதா! நீ இன்று ஓய்வெடுத்துக் கொள். நாளை முதல் இராமகதை எழுதும் கூட்டுப் பணியைத் துவங்குவோம். இராமகதை வரலாற்றுக் காவியமாக அமைய இறைவன் எனக்களித்த வாய்ப்பை என்ன வென்று சொல்வது! (வால்மீகி மகிழ்ச்சியுடன் வெளியே செல்கிறார்)
 [சில மாதங்கள் கழித்துத் துறவகத்தில் சீதைக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. வால்மீகி முனிவர் முதலில் பிறந்த பையனுக்குக் குசன் என்றும், இரண்டாவது பிறந்த பையனுக்கு இலவன் என்றும் சூட்டுகிறார். இலவா, குசா இருவரும் குருகுலவாசப் பாடசாலையில் குரு வால்மீகியின் நேர்பார்வையில் கல்வி, ஒழுக்க நெறி, ஓக உடற்பயிற்சி, மனப்பயிற்சி, விற்பயிற்சி, வாட்பயிற்சி, சூலாயுதப் பயிற்சி, குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். இறுதியில் இரட்டை இளைஞர் விற்பயிற்சியில் மேதைமை அடைந்து, வயது வந்தோரையும் வீழ்த்திடும் திறமை பெறுகிறார்கள். அன்னை சீதை: சிறுவர் மீது தீராத அன்பைப் பொழிந்து, அவளது வாழ்க்கையிலும் புது மலர்ச்சி பொங்கி எழுகிறது. இடையிடையே தன் சோக வாழ்க்கையைப் பற்றிப் பிள்ளைகளிடம் சிறிது சிறிதாகக் கூறுகிறாள். இலவா, குசா இருவருக்கும் தந்தை இராமனைப் பற்றியும், தான் பிரிக்கப் பட்டதையும் வேதனையோடு பலமுறை சொல்லியிருக்கிறாள்.]
(மூன்றாம் காட்சி முற்றும்)
seyabharathan03
அறிவியலறிஞர் சி.செயபாரதன்


Comments

  1. வணக்கம்
    ஐயா
    அருமையான இராமாயண தொடர் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்