pragnant-lady

காட்சி – 20

அங்கம்    :     அன்பரசன், கவிஞர்
இடம்      :     குடிலின் முன்வாசல்
நிலைமை  :(நாடகக் காட்சி முடிவுபெற
“காணோமே எனது பெண்ணைத்தான்”
கேட்டது மகளிர் பகுதியிலே
அழுகுரல் புலம்பலுமாகவே)
காவலர் நிலைமையை சீர்செய்ய
அமைதி அமைந்தது ஆங்கே
பாவலர்சிறிதும் இவற்றையயெல்லாம்
பார்க்காது! ஏதோ! நினைத்திருந்தார்
அன்ப   :  மொழிவீர்! என்ன சிந்தனை?
மொழியாதிருத்தல் நன்றில்லையே?
கவி     :  விழி நீர் சொட்டக் கண்டதனை
விளக்கமாய் எடுத்தே உரைக்கின்றேன்!
சீதாராம் என்றதொரு
சின்னஞ்சிறியக் குடும்பத்தில்
இராதாகண்ணனை மணிமாலை
கேட்டதுபோல இராமனைத்தான்
ஈரல்கேட்க அன்னவனோ
திங்கள் பலவாய்க் கழிந்தபின்பு
நேரே ஈரல் வாங்கிட
சென்ற கதையைச் சொல்கின்றேன்!
இராவே இராவுத்தர் வீட்டுக்குச் சென்று
ஈரல்வேண்டும்! எனக்கோர் துண்டு!
இருப்பதோ ரூபாய் ஒன்றென்க!
ஈரல் வாங்கும் மூஞ்சியைப்பாரு!
நாவிலே வந்ததைத் திட்டியும் ராமன்
சாமி! கோவிக்க கூடாதய்யா!
மனைவியோ மாசம் ஆனது முதலாய்
ஈரலில் ஆசைவைத்தே சொல்லி
பாவிபத்து மாதத்திற்கின்றே
வாங்கவந்தேன்! என்றே சொல்ல
இராவுத்தர் சற்றே இரக்கம் கொண்டு
நாளை ஈரல் விற்காது போனால்
இராவிலே இந்தப்பொழுதையும் கடந்து
வா! நீ தருகிறேன்! என்றவன் கூற!
மறுநாள் செல்ல! இராவுத்தர் கொடுக்க!
தங்கமாய் அதனைச் செம்பினில் ஏந்தி!
ஆவலாய் அதனைப் பார்த்தே வந்து
“பாரடி! சென்றேன்! தந்தார் என்க!
அப்படியே நாம் விழுங்கிடலாமா?
வெப்பமாய் எண்ணம் எழுந்திட அவளோ!
தாவியே பார்த்து! முக்கியே எழுந்து
வெங்காயம் எண்ணெய் மிளகாய் இன்றி
தண்ணரில் ஈரலை வேகவே வைக்க!
அடுப்பை மூட்டி எரித்த வளாங்கே
“நோவு தாங்கலை” என்றவள் அலற
ஈரல் சட்டியை எடுக்கவும் மறந்து!
செந்தணல் தீயை அணைக்கவும் மறந்து!
மயங்கியே வீழ்ந்தாள் அடுப்படி அருகில்
நிலைப்படிதட்டி குப்புற விழவோ
பற்களோ உதட்டை கிழித்தது மின்றி
கற்களோ நெற்றி மேட்டையும் கிழிக்க
குருதியைக் கண்டும் விழித்தவன் விட்டு
மலைக்காமல் மருத்துவக்கிழத்தை அழைக்க
ஓடவே எண்ண! கால்களும் நோவ!
முட்டியை நோக்க! குருதியோ வழிய
நொண்டியே சென்று கிழக்குத் தெருவில்
அலைந்து கோடி வீட்டுக்குச் சென்று
இராக்காயி அம்மா! இராக்காயி அம்மா!
சீக்கிரம்! சீக்கிரம்! வாம்மா! என்றே
அடிவயிறுகிழிய அலறியும் அவளோ
சிலையாய் அதனைச் செவி மடுக்காமல்
எவ்வித உணர்ச்சி மாறுதலின்றி
கச்சிதமாக முக எழில் மாற்றி
“ஏண்டாத் தொண்டை கிழிந்தே போக”
கத்தித் தொலைத்தாய்! செத்தா போனாள்
என்றவள் கதவைத் திறந்தே (உ)ரூபாய்
பத்துள்ளதாடா வரநான்! என்க!
பத்தேது அம்மா! தம்படி இல்லை!
சுத்தமாய்க் காசு எதுவுமே இல்லை!
பனைவெல்லம் சுக்குவாங்கவே என்ன
செய்வது என்றே! முழிக்கின்றேன்! என்க!
வேறு ஆளைப் பாரடா என்க!
அம்மா! அப்படிச் சொல்லாதே; அம்மா!
கெஞ்சிக் கால்களைப் பிடிக்கிறேன்! தாயே!
ஏழையின் முகத்தைப் பாரம்மா தாயே!
புண்ணியம் உனக்கென! காலைப்பிடிக்க
சும்மா! போடா! புண்ணியம் எதற்கு?
காசு இருந்தால் வருவேன்! இல்லை!
போடா என்றே காலை உதற!
பார்த்ததும் தருவேன்! என்றவன் கூற!
தம்பிடி இல்லை! எப்படி? என்க!
என்தலை அடகு வைத்தேனும் உனக்குப்
பத்தென்ன! மேலும் தருகிறேன்! தாயே
என்னை நம்பு! நம்பெனக்கூற!
தெம்பாய்த் தலையை இப்போதே வைத்து
பத்தே (உ)ரூபாய் வாங்கிவா! என்றே!
கால்களை உதறிக் கையினை நீட்டி!
கலகலவென்றே சில்லறை நாணய
ஆண்டாண்டு அனுபவச் சிரிப்பாய்ச் சிரித்தே
திண்ணையிலின்னும் அழுத்தியே அமர
இடுப்பு வலியால் கதறிடும் தன்
மனைவியை எண்ணி வெடித்தே அலறி
ஆண்டவா! என்றே திண்ணையின் தூணைக்
கைகளால் பற்றியும் தன்னிலை மறந்து
மயங்கி வீழ்ந்தான்! இராமன் இங்கே!
மாண்டே கிடந்தாள்! சீதை அங்கே
அன்ப   :  ஈரல்?
சேச்சே! போதும்! கவிஞரே! போதும்!
மூச்சும் நின்றது? கொடுமை? கொடுமை!
(காட்சி முடிவு)
 (பாடும்)
two-sparrows05