நல்வழியின் சொல்வழியே… சந்தர் சுப்பிரமணியன்

50Rain
நம்மை அணுகி நலங்காப்போம் நாமென்றே
நிம்மதியாய் நிற்கும் நிழற்சுற்றம் – வெம்மைவரின்
கோதுவேர்த் தாகமறக் கொட்டுமழை போன்றதுவே
தீதொழிய நன்மை செயல்
செயற்கண் நுணங்கித் திறஞ்சேர்த்துப் பின்னர்
அயல்நின்றாங்(கு) ஆர்குறைகள் ஆயும் – இயல்பதனைத்
தட்டாதார் வெல்வார், தகவிலார்க்(கு) ஏதுசெயம்
பட்டாங்கில் உள்ள படி
படிக்கும் பொருளுணர்ந்து பட்டறிவோ டுள்ளம்
துடிக்குநிலை கொண்டோர் தொழிற்செய்! – விடுத்ததனை
அஞ்சுமனம் கொண்டே அறிவில்லா மூடராய்த்
துஞ்சுவதோ மாந்தர் தொழில்
தொழிற்சிறக்கப் போராடித் தொல்லைபல பெற்றும்
உழைப்பினுல கென்றும் உதவும் – குழியடிகாண்
கல்லை உடைக்கின்நீர் காட்டும் நிலமொத்தார்
இல்லைஎன மாட்டார் இசைந்து
இசையறியா துள்ளிருந்தும் இன்பப்பூப் பூக்க
விசையொடு நீர்சேர்க்கும் வேர்போல் – மசையனுக்கும்
கற்பனையும் சொற்றிறனும் காட்டும் மதியொன்றே
அற்புதமாம் என்றே அறி
அறிவுடையோர் ஆன்றோர் அமையரங்கில் கல்விச்
செறிவில்லார் பேச்சென்று செல்லும்? – நிறைந்த
அறிவன்றோ மேல்நுரைக்கும்? அஃதன்றித் தீயால்
வெறும்பானை பொங்குமோ மேல்?
மேலோன் மிகச்சிறியோன் வெவ்வேறு பண்புடையோர்
போலோர் உருத்தோற்றப் பொய்ம்மாயை – காலமெலாம்
வாழும் வகைஒன்றே, மாறாப் பசியாற்றும்
நாழி அரிசிக்கே நாம்
குறிப்பு: ஒளவையார் அருளிய நல்வழியின் ஈற்றடிகளைக் கொண்டு அந்தாதி அமைப்பில் முயன்றது.

 சந்தர் சுப்பிரமணியன்ChandarS01

http://movingmoon.com/node/234


- அகரமுதல73: பங்குனி22, 2046/  ஏப்பிரல்05,2015


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்