அரிகண்டமும் யமகண்டமும் முனைவர் சரளா இராசகோபாலன்

அரிகண்டமும் யமகண்டமும் முனைவர் சரளா இராசகோபாலன்


ஒரு முறை அதிமதுரகவி, மூச்சுவிடும் முன்பே 300, 400 எனப் பாடல்களைப் பாடுவதாகப் பெருமை பேசினார். அதைக்கேட்ட காளமேகப் புலவர், ""பிள்ளாய் இம்மென்னும் முன்னே 700, 800 பாடல்களைப் பாடுவேன்; அம்மென்றால் ஆயிரம் பாட்டுகளைப் பாடுவேன்; சும்மா இருந்தால் இருப்பேன்; வெகுண்டெழுந்தால், யானையின் துதிக்கையைப் போலப் பெரிய தாரைகளாகப் பொழியும் மேகம் நான் என்று நினைப்பாயாக'' என்றார்.
இப்பாட்டைக் கேட்ட அதிமதுரகவி இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் மெய், பொய் எல்லாம் பட்டப்பகலாய்த் தெரியப்போகிறது என்று நினைத்துக் கொண்டு காளமேகப் புலவரை நோக்கி, ""கூர் அம்பாயினும் வீரியம் பேசேல் என்பதை அறியாயோ? நீ இவ்வளவு வீரியம் பேசுகிறாயே, அரிகண்டம் பாடு, பார்ப்போம்'' என்றார்.
காளமேகம், ""அரிகண்டம் என்றால் என்ன?'' என்று வினவினார்.
அதைக்கேட்ட அதிமதுரகவி, ""கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு, எதிரி கொடுக்கும் பொருளுக்கு ஏற்பப் பாடுவதுதான்'' என்றார். அப்படிப் பாடும்போது ஏதாவது தவறினால் அந்தக் கத்தியாலேயே வெட்ட வேண்டி வரும்.
இதைக்கேட்ட காளமேகம், கைகொட்டிச் சிரித்து, ""இதுதானா அரிகண்டம் என்பது?  இத்தனை சுலபமானதை ஒரு விஷயமாகத் தேடிச் சொல்ல வந்தீரே; இதில் என்ன அருமை இருக்கிறது? யமகண்டம் பாடுவதல்லவா மிகக் கடினம்? அதைப் பற்றிப் பேசுவதுதானே பெருமை?'' என்றார்.
இதைக் கேட்ட மதுரகவி ""யமகண்டம் என்ற ஒன்று இருக்கிறதா? அஃது எப்படிப்பட்டது?'' என்றார்.
பூமியில் 16 அடி நீளம், 16 அடி அகலம், 16 அடி ஆழமாக சதுரத்திற்குச் சதுரம் ஒரு பெரிய குழியை வெட்ட வேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் 16 அடி இரும்புக் கம்பங்கள் நட வேண்டும். கம்பத்தின் மேல் நான்கு சட்டமும், நடுவே ஒரு சட்டமும் அமைக்க வேண்டும். நடுக்கட்டத்தில் உறிகட்ட வேண்டும். குழியினுள் பழுத்த புளியங்கொம்புகளை நெருங்க அடுக்கி, கட்டைக்குள் நெருப்பை மூட்டி அது கனன்று எரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்நெருப்பில் ஆள் உயரமான இரும்புக் கொப்பறை வைத்து, கொப்பறை நிறைய எண்ணெய் விட்டு அதில் அரக்கு, மெழுகு, குங்குலியம், கந்தகம், சாம்பிராணிகளை நிரப்பி அவை நன்றாய்க் காய்ந்து உருகிக் கொதித்துக் கொண்டிருக்க வேண்டும். நான்கு யானைகளைப் பாகர்கள் மதமேற்றிக் கொண்டு வந்து கம்பத்திற்கு ஒவ்வொன்றாக மலைகளைப் போல நிறுத்தி வைக்க வேண்டும். பின்புறத்தில் வளையம் வைத்து வளையத்தில் சங்கிலி கோர்த்து, எஃகினால் கூர்மையாக உருவாக்கிப் பளபளவென்று மின்னும்படி சாணை பிடித்த எட்டுக் கத்திகளைக் கழுத்தில் நாலும் அரையில் நாலுமாகக் கட்ட வேண்டும்.
கத்திகளின் புறத்திலுள்ள சங்கிலிகளை மேற்படி யானைகளின் துதிக்கையில் கொடுத்து வைக்க வேண்டும். தான் கொப்பறைக்கு நடுவாகத் தொங்குகின்ற உறி நடுவில், ஏறியிருந்து பாட வேண்டும். எவரெவர் என்னென்ன பொருள் கொடுத்தாலும் அவற்றை அந்நொடியில் தானே தடையின்றிக் குறித்த கருத்தின்படி இசைத்துப் பாட வேண்டும். அவ்வாறு பாடும்போது சிறிதளவு வழுவினாலும் பாடச் சொன்னவர்கள் யானைப் பாகர்களுக்குக் கண் சைகை காட்டுவர். அவர்கள் யானைகளை மத்தகத்தில் அங்குசத்தால் குத்தி அதட்டுவர். அந்த யானைகள் துதிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் சங்கிலிகளை விசையுடன் இழுக்கும். இழுத்தவுடனே புலவனின் கழுத்தும் இடுப்பும் கத்திகளால் துண்டிக்கப்படும். தலையொரு துண்டமும் இடுப்பு முதல் காலளவும் ஒரு துண்டமுமாகி, அந்த எண்ணெய்க் கொப்பறையில் விழுந்துவிடும். இதுதான் யமகண்டம்'' என்று விளக்கம் தந்தார் காளமேகப் புலவர்.
யமகண்டத்திலிருந்து எழுபது புலவர்கள் கேட்கப் பாடிய புலவர் "காளமேகம்' மட்டும்தான் என்று கூறப்படுகிறது.

Comments

  1. அதிசயத்தகவல்! அருமையான தகவல்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue