Skip to main content

அறிவுக்கதைகள்நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 7. பொன்னும் பொரிவிளங்காயும், 8. வீண்பேச்சு & 9. போகாத இடம்



(அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 4. கண்டதும்கேட்டதும், 5. கொள்ளும் குத்துவெட்டும், 6. தூங்கு மூஞ்சிகள்-தொடர்ச்சி)

ஒரு கிழவன் தான் தேடிய சிறு பொருளைத் தானும் உண்ணாமல், பிறர்க்கும் வழங்காமல் பொன்கட்டியாக, பொரிவிளங்காயளவு உருட்டி, அடுக்குப் பானை இருக்கும் இடத்தின் அடியில் புதைத்து வைத்திருந்தான்.

அவன் மக்களிடமும்கூட இதைச் சொல்லி வைக்கவில்லை. சொன்னால் சொத்துப் பறிபோய்விடும் என்பது அவன் கருத்து.

திடீரென ஒரு நாள் நோய்வாய்ப்பட்டான். படுத்து விட்டான். தொண்டையும் அடைத்துவிட்டது. அவனால் பேச முடியவில்லை.

கடைசிக் காலத்தில் அதைத் தன் பிள்ளைகளுக்குக் கொடுக்க எண்ணி, அனைவரையும் கூப்பிட்டு, அடுக்குப் பானை இருக்கும் இடத்தைக் காட்டி தன் 3 விரல்களையும் அடுப்புக் கட்டிபோல சேர்த்துக் காட்டி ‘அங்கே இருக்கிறது போய் எடுத்துக் கொள்ளுங்கள்’ எனச் சாடை காட்டினான்.

அவன் மக்கள் கூடி, அவனுக்குச் சாகப்போகிற நேரத்திலே பொரிவிளங்காய் மேல் ஆசை வந்திருக்கிறது என எண்ணி, அடுக்குப் பானையில் இருக்கும் பொரி விளங்காய் என்ற பலகாரத்தை எடுத்து வந்து தட்டி நசுக்கிக் கிழவன் வாயில் திணித்தார்கள். ஏற்கனவே அடைத்துக் கொண்டிருந்த தொண்டையில் இதுவும் சேர்ந்து அடைத்து, அப்போதே உயிரும் பிரிந்து போய் விட்டது.

பாவம்! அவனைப் பொறுத்தவரையில் பொன்னும் பொரிவிளங்காயாய்ப் போயிற்று.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
கேடுகெட்ட மானிடரே! கேளுங்கள் – கூடுவிட்டு
ஆவிதான் போன பின்பு யாரே அனுபவிப்பர்
பாவிகாள் அந்தப் பணம்!

என்ற ஒளவையாரின் வாக்கு எவ்வளவு உண்மையாயிற்று.

———–

புதிதாகத் திருமணம் செய்து கொண்ட கணவனும், மனைவியும் ஒரு வேலையும் இல்லாதபோது வீண் பேச்சுகளைப் பேசிக்கொண்டிருந்தனர்.

கணவன் சொன்னான் ‘நான் நாள்தோறும் பால் குடிக்க வேண்டும்’ என்று. மனைவி சொன்னாள்: ‘நல்ல யோசனை: ஒரு பசு வாங்கி விடுங்கள்.’

கணவர் : நேற்றே ஒரு பசு , மாட்டைப் பார்த்து வந்தேன். நாளைய தினம் போய் வாங்கி விடுவேன்.

மனைவி : மாடு வாங்கி வரும்போதே இரண்டு பித்தளைச்சொம்பும் வாங்கி வந்துவிடுங்கள்.

கணவர் : எதற்காக இரண்டு பித்தளைச் சொம்பு?

மனைவி : ஒன்று பால் கறக்க; மற்றொன்று எங்கம்மா வீட்டுக்குப் பால் அனுப்ப.

கணவர் : ஏண்டி! நான் பணம் போட்டு வாங்கும் மாட்டுப் பாலைக் கறந்து உங்க அம்மா வீட்டுக்கு அனுப்புவது எதற்காக?

மனைவி : என்னைப் பெற்று வளர்த்து உங்களுக்குக் கட்டிக் கொடுத்தார்களே அதுக்காக.

கணவர் : அப்படியானால் நீ இங்கு இருக்காதே என அதட்டினான்.

இப்படியாக வாய் முற்றி, தடியால் அடித்து, மனைவியைத் தாய் வீட்டுக்கு விரட்டிவிட்டான். அவளும் அங்கு போய் பல மாதங்கள் ஆயிற்று.

இருவருமே தங்கள் தவறுகளை உணரும் காலம் நெருங்கியது.

மனைவியோடு பிறந்தவன், ‘ஒருநாள் மைத்துனனிடம் வந்து ‘அத்தான், நீ வாங்கிய மாடு எங்கள் வீட்டுக்குவந்து வைக்கோலை மேய்ந்து கொண்டிருக்கிறதே’ என்றான்.

அதற்கு மைத்துனன், ‘நான் மாடும் வாங்கவில்லை. பாலும் கறக்கவில்லை. வேலையில்லாதபோது வீணுக்குப் பேசிய பேச்சு அது’ என்று கூறி, மனைவியை அழைத்து. வந்து குடும்பத்தை நடத்தினான்.

இல்லறம் நடத்துவோர் இம்மாதிரி வேலையொன்றும் இல்லாதபோது வீண் பேச்சுகளைப் பேசித் தொல்லைகளை விளைவித்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

————–

ஒர் ஊரிலே குயவரும் கம்மாளரும் நெருங்கிய நண்பர்கள். பிழைப்பில்லை; பெரும்பசி – வெளியூருக்குப் புறப்பட்டனர்.

வழியிலே, ஊர் நடுவிலே அக்கிரகாரம் – திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.

இருவரும் யோசித்தார்கள். நம் இருவருக்கும் பூணூல்தான் இருக்கிறதே. இந்த ஊரிலே நம்மை யார் அடையாளம் கண்டு பிடிப்பது – திருமண வீட்டிலே போய்ச் சாப்பிடலாமே, சாப்பிட்டுவிட்டே போகலாமே – என்ற முடிவுக்கு வந்து, ஐயர் வீட்டுத் திருமணத்திலே நுழைந்து விட்டார்கள். கும்பல் – ஒரே கூட்டம். இருவரும் சேர்ந்து போக முடியவில்லை. தனித்தனியாகப் பிரிந்து போய்ப் பந்தியில் உட்கார்ந்து விட்டார்கள்.

எல்லாம் பரிமாறிய பிறகு, பிராமணாள் எல்லாரும் கையில் தண்ணிரை வாங்கினார்கள். குயவரும் வாங்கினார். எல்லாரும் கண்ணை மூடுவதைப் பார்த்தார்; தானும் மூடிக் கொண்டார்.

எல்லாரும் நீர் விளாவி, சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

குயவன் கண்ணைத் திறவாததால், மற்றவர்கள் உண்பதைக் காண முடியவில்லை, அதனால் கையில் நீரோடு கண்ணை மூடியபடியே உட்கார்ந்திருந்தார்.

சாம்பார் பரிமாற வந்த ஐயர் – ‘என்னாங்காணும், குசப்பிராமணனா யிருக்கிறீரே. சாப்பிடுங்காணும்’ – என்று சொன்னார்.

இவர் உடனே கண்ணை விழித்து, ‘அதோ, கதவிடுக்கிலே உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிற அந்தக் கம்மாளப் பையலா – என்னைக் குசவன்’ என்று சொன்னான்; அவனைப் பார்த்துக்கிறேன் – என்று கூறியதும்,

பந்தியில் உள்ள அனைவரும் உண்ணாமல் எழுந்து கூடி –

பாவம்! இவர்கள்.

போகாத இடந்தனிலே போகவேண்டாம் என்ற ‘உலக நீதி’ யைப் படித்திருந்தால், இப்படி நடை பெற்றிராது.

000

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்