Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 61 : தந்தையின் சீற்றம்

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 60 : இசைப்பணிக்கு எழுக எனல்-தொடர்ச்சி)

          மறைபிறர் அறிய மலர்ந்தஅவ் வலர்மொழி

குறையிலாக் களமர் குலமகன் செவிபுகத்

தணியாச் சினமொடு தன்மகட் கூஉய்த்

`துணியாச் செயல்செயத் துணிந்தனை! என்குல    

          அணையாப் பெருமையை அணைத்தனை பேதாய்!         30

          நினைகுவை நீயிப் பழிசெய என்றே

நினைந்தேன் அல்லேன் முனைந்தாய் கொடியாய்!

மேதியிற் கீழென மேலோர் நினைக்கச்

சாதி கெடுக்கச் சதிசெய் தனையே!      

          வீதி சிரிக்க விளைத்தனை சிறுசெயல்! 35

          பெற்றான் ஒருவன் உற்றான் என்றும்

சற்றே நினைந்திலை! சாற்றுதல் கேள், இனிப்

புறச்செல வொழிப்பாய்! போற்றுதி மானம்!

அறச்செயல் விடுத்துநீ அகலுவை யேல்,என்  

          கதிர்அரி வாள்உன் கழுத்தினை அரியும்,         40

          மதியொடு நட!என் மானமே பெரி’தென

இடிபடப் பேசி இற்செறித் தனனே;

          கொடிபடர் முல்லையின் வெடிமலர் மணத்தைக்

கூர்முள் வேலியாய் காத்தலுங் கூடுமோ?       

          ஏர்முனை பாறையில் எவ்வணம் உழுதிடும்?  45

—————————————————————

          நினைகுவை – நினைப்பாய், மேதி – எருமை, புறச்செலவு வெளிச் செல்லல், இற்செறித்தனன் – வீட்டிலடைத்தான்.

++++++++++++++++++++++++++++++++++++

நேர்வரும் பகையால் நின்பெருங் கொள்கை

சீர்பெற் றோங்கிச் செழிப்புறல் போலப்

பொன்னியின் காதல் பொங்கிப் பொலிந்தது;

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்