என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 15, அரிதாகும் அவன் மார்பு!
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 14. மனமும் இனமும்-தொடர்ச்சி)
என் தமிழ்ப்பணி
12. அரிதாகும் அவன் மார்பு!
வேட்டுவக்குடியில் வந்த ஓர் இளைஞன் ஒருநாள் வழக்கம்போல் வேட்டைமேற் சென்றான். வேட்டைக்குத் துணைபுரியும் அவனுடைய வளர்ப்பு நாய் அவனைப் பின் தொடர்ந்து விரைந்து வந்து கொண்டிருந்தது. அன்று, அவன் தன்னை அழகிய மலர்களால் ஆன மாலையால் அணி செய்து கொண்டிருந்தான். நிறத்தைப் போலவே நாற்றத்தாலும், பற்பல வகை மலர்களைச் கொண்ட அம்மாலையின் மணம் செல்லும் வழியெங்கும் சென்று நெடுநேரம் கழிந்த பின்னரும் நாறிக் கொண்டிருந்தது.
இவ்வாறு அணி செய்து கொண்டு, நாயோடும் வில் அம்புகளோடும் புறப்பட்ட அவன், வேட்டையாடிக் கொண்டே பலமலைக் கடந்து விந்து விட்டான். இறுதியில் ஒரு மலைச்சாரலை அடைந்தான். ஆங்கு அழகிய குரல் ஒலி கேட்டு, அவ்வொலி வந்த இடத்திற்குச் சென்றான். ஆங்கு அவன் காட்சி, அறிவு மயங்கும் பெருமகிழ்ச்சி அளித்தது.
அது ஒரு தினைப்புனம்; புனத்தின் நடுவே உயர்ந்த பரண் ஒன்று அமைந்திருந்தது. உலகத்து அழகெல்லாம் ஒன்று திரண்டு ஓருருவானாற்போலும் உருவு நலம். வாய்க்கப் பெற்ற நங்கையொருத்தி, அப்பரண் மீது நின்றவாறே, கவண்முதலாம் கருவிகளின் துணையால் கிளியோட்டிக் கொண்டிருந்தாள். அவள் அழகையும் கிளியோட்டும் அவள் தொழில் அறிவையும், அவள் குரல் இனிமையையும் கண்ணெதிர் கண்ட இளைஞன். அவள்பால் காதல் கொண்டான். நாற்புறமும் திரும்பித் திரும்பிக் கிளியோட்டிக் கொண்டிருந்த அவள், இளைஞன் நின்றிருந்த பக்கத்தில் படிந்திருக்கும் கிளிகளை ஓட்ட அப்பக்கம் திரும்பினபோது, ஆங்கு அவன் நிற்பதைக் கண்டாள். இளமை நலம் விளங்கும் அவன் திருமேனி, அவன் மார்பில் கிடந்து மணம் நாறும் மாலை, கையில் ஏந்திய வில்லும் அம்பும் அவன் காலடியில் நிற்கும் நாயின் குறுகுறுத்த நோக்கும் உணர்த்தும் அவன் வீரம் ஆகிய அனைத்தும், அவ்வாறே அவள் உள்ளத்தில் குடி புகுந்து கொண்டன.
அவளும் அவன் நிலையினளாயினாள். இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு விட்டனர்; அன்று முதல், இளைஞன் வேட்டைத் தொழிலை மறந்து ஆங்கு வருவதும், இவள் காத்தல் தொழிலைக் கைவிட்டு அவன் வருகையை எதிர்நோக்கிக் கிடப்பதும்அவன் வந்ததும் இருவரும் கூடி மலையருவியில் ஆடியும் மலர் பறித்துச் சூடியும் மகிழ்வதும் வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் நாட்கள் மெல்லச் சென்று கொண்டிருந்தன. இடையறா இன்பவெள்ளத்தில் மூழ்கியிருப்பவர் இடையிடையே ஓரிரு நாட்கள் துன்புறவும் நேர்ந்தது. இளைஞனுக்குரிய ஊர் பலமலைகளுக்கு அப்பால் இருந்தமையால் அவன் எவ்வளவு முயன்றும், எதிர்பாரா இடையூறுகளால் ஒருசில நாட்களில் வர இயலாது நின்றுவிடுவான். அந்நாட்களில் அவள் உள்ளம் ஆற்றொணாத்துயர் உறும்; கடமையிலும் கருத்துச் செல்லாது. இவ்வாறு அவன் வாராது போவது அடிக்கடி ஏற்படவே, அவள் உள்ளத்தில் புதுக்கவலை ஒன்றும் புகுந்து கொண்டது. அவனோ மலைகள் பலவற்றைக் கடந்து வருகிறான். அவன் தொழிலோ வேட்டையாடுவது; வேட்டையில் எதிர்ப்படும் விலங்குகளில், அவன் ஆற்றலுக்கு மிஞ்சியனவும் சில இருக்கும்; அவற்றால் அவனுக்கு ஊறு நேர்தலும் உண்டாம் என்ற எண்ணம் எழ அலைபாய்ந்தது அவள் உள்ளம். அதனால் அவள் செயலிழந்து கிடந்து வருந்தத் தலைப்பட்டாள்.
தினைப்புனத்தில் தம்மை ஓட்டுவார் இல்லாமையால் கிளிகள் தம் விருப்பம் போல் தினைக்கதிர்களைக் கொய்து சென்றன. தினை கதிரீன்று விட்டது என்றாலும் அக்கதிர்கள் இன்னமும் முற்றவில்லை.
இன்னும் சில நாள் கழித்தே அவை கொய்யப் பெறுதல் வேண்டும். ஆனால் கிளிகள் அதற்குள்ளாகவே அவற்றைக் கொண்டு போகத் தலைப்பட்டன. அதனால் கதிர் கொண்ட தாளினும் கதிரியிழந்து போன தாள்களே மிகுதியாகக் காட்சி அளித்தன. தினைப்புனத்தின் அவ்வழி நிலையை அப்பெண்ணின் தோழி கண்ணுற்றாள். புனத்தை இவ்வாறு பாழாகவிடுத்து அப்பெண்யாது செய்கிறாள் எனச் சென்று அவளைப் பார்த்தாள். ஆங்கு அவள் சித்தம் பிறழ்ந்தவள் போல் செயலிழந்து கிடப்பதைக் கண்டான், அவளை அணுகி வினாவினாள்.
இளைஞனைக் கண்டது, அவன்பால் காதல் கொண்டது சின்னாட்களாக அவன் வாராமை, அதனால் தன் உள்ளம். படும்பாடு ஆகிய அனைத்தையும் அப்பெண் ஒன்று விடாது உரைத்தாள். அச்செய்தி கேட்டு தோழி நனிமிக நடுங்கி விட்டாள். இவளை ஈன்ற தாய் இவளைத் தன் உயிரினும் சிறந்தவளாக ஓம்புகிறான்.
அவள் இவளை இந்நிலையில் கண்டால் என்னாவது? மகள் மணப்பருவம் அடைந்து விட்டாள்; ஆகவே மணமாகி விட்டால் இவள் துயர் மறைந்து போம் என உணர்ந்து இவள் காதலைப்பற்றி ஏதும் அறியாமையால் தான் விரும்பும் ஓர் இளைஞனுக்கு இவளை மணஞ்செய்து கொடுத்து விட்டால், இவள் காதலும் கற்பும் என்னாம்?” என எண்ணிக் கவலை கொண்டாள். உடனே, “இதற்கு ஒரு வழி காண வேண்டும்.
இவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அவ்விளைஞனுக்குத் தாயின் இயல்பை எடுத்து உரைத்தல் வேண்டும்; அவளால் தன் காதலிக்குக் கேடு நேர்வதற்கு முன் அவன் இவளை வரைந்து கொள்ள வேண்டிய இன்றியமையாயினை, அவன் உணரும் வகையில் எடுத்து இயம்ப வேண்டும்” எனக் கருதினாள்.
அந்நிலையில் அவனும் அப்புனம் நோக்கி வந்து, கொண்டிருந்தான். புனத்தை அடைந்தவன், பரண்மீது தன். காதலியோடு வேறு ஒரு பெண்ணும் அமர்ந்திருப்பதைக் கண்டு அப்பரணுக்கு அணித்தாக அவர் அறியாவாறு ஒளிந்து கொண்டான். அதைப் பார்த்து விட்டாள் தோழி. உடனே, –
‘பெண்ணே! புனம் – அழிந்து போகிறது. அதை பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாது, காதலனைக் காண வேண்டும்; அவன் இன்னமும் வந்திலன்; வேட்டையாடிக் கொண்டே பல மலைகளைத் தாண்டிவரும் அவனுக்கு வழியில் வேட்டை விலங்குகளால் யாதேனும் இடையூறு நேர்ந்திருக்குமோ என்ற எண்ணம் அலைக்க, இங்கே கிடந்து வருந்துகிறாய்; நம் தாயின் இயல்பு உனக்கு நன்கு தெரியும்.
நாளை அவள் வந்து இப்புனத்தைப் பார்த்தால், உன் நினைவெல்லாம் நிலை குலைந்து விடும். புனத்தில் கிளிகள் வந்து அமரும் இடங்களுக்கெல்லாம் ஓடி ஓடி அவற்றை நீ ஓட்டாமையால், புனத்தில் கதிர் இழந்த தாள்களே மிகுதியாக நிற்பதைக் காணும் தாய், கதிர்கள் முற்றாத இப்போதே இவ்வளவு கேடு; அவை முற்றிவிட்டால் புனம் முற்றிலும் பாழாகி விடும்: இப்போது வரும் சில பறவைகளையும் ஓட்டமாட்டாத இவள், அவை முற்றி விட்டால், பறவைகள் கூட்டங் கூட்டமாய் வந்து படியுமே, அப்போது என்ன செய்வாள்? புனத்தைக் காக்கும் திறம் இவளுக்கு இல்லை என் எண்ணி காவலுக்கு வேறு சிலரை அமர்த்திவிட்டு உன்னை வீட்டிற்கு அனுப்பி விடுவாள்.
அந்நிலை உண்டாகி விட்டால், பின்னர் காதலனைக் காண்பதோ அவனையே உனக்கு உரியவனாக்கிக் கொள்வதோ இயலாதாகிவிடும்! ஆகவே புனங்காவல் உரிமை பிறர் கைக்குப் போகாது, அது உன் கையிலேயே நிற்குமாறு ஓரிரு முறையேனும் எழுந்து போய் கிளிகளை ஓட்டு எனக் கூறினாள்.
தோழி கூறிய அனைத்தையும் கேட்டான் இளைஞன். நுண்ணிய அறிவுச் செல்வம் வாய்ந்தவன் அவன். அதனால், தோழி அவ்வாறு கூறியது, “ஏடா! எங்கள் தாய் தன் உடைமைகளிடத்தில் கருத்துடையவள். தன் உடைமை அழிந்துபோக அவள் பார்த்திராள்.
அதை அழியாதவாறு காப்பதற்கு வேண்டுவ அனைத்தையும் விரைந்து செய்து முடிப்பாள்; புனங் காக்கும் பொறுப் பேற்றுக் கொண்டவள் தன் மகளே ஆயினும், அவளால் அப்புனத்தை அழியாது காப்பது இயலாது என்பதை அறிந்து கொள்வாளாயின் அறிந்துகொண்ட அப்போதே, அவள் தன் மகள் என்பதையும் பாராது அவளை அகற்றி விட்டுப் பிறரை அமர்த்துவள்.
தினை முற்று முன்பே இத்துணை விழிப்பாயிருப்பவள், அது முற்றிவிட்டதைக் கண்ட பின்னர் எத்துணை விழிப்பாயிருப்பள் என்பதை நீயே எண்ணிப்பார்: திணைப்புனத் திற்கே, அவள் அவ்வளவு கருத்துடையளாயின், தான் பெற்ற தன் மகள்பால் அவள் எவ்வளவு கருத்துடையளாவள் என்பதை இயம்புவது ஒண்னுமோ? காதல் அளிக்கும் மனக் கவலையால் நலனிழந்து கிடக்கும் இவளை இந்நிலையில் அவள் பார்த்து விட்டால் என்னாவது? அவள், தன் மகளை இன்னமும் பேதைப் பருவத்தினள் என்றே கருதியுள்ளாள்.
இவளை, அக் கருத்துடைய இப்போது காணினும்,அவள், இவள் துயர் தீர்த்தற்கு வேண்டும் அனைத்தையும், உடனே விரைந்து மேற்கொள்வள். அது தீர்க்க வல்லார் எனத்தான் அறிந்த எவர் துணையையும் வேண்டிப் பெறுவள்.
அத்தகையாள், மகள் பேதைப் பருவம் கடந்து விட்டாள்; பெதும்பைப் பருவத்தை அடைந்து விட்டாள்; அப்பருவத்தில் மகளிர்க்கு இயல்பாக உண்டாகும் மன நோயே இது என உணர்ந்து கொண்டால், உடனே, அம் மனநோய் நீக்க வல்லவன் எனத்தான் நினைக்கும் ஒருவனுக்கு இவளை மணம் முடித்து வைத்து இவள் மனநோயைப் பேர்க்கத் துணிவள்; துணிந்தவாறே முடித்தும் விடுவள். அந்நிலை உண்டாகிவிட்டால், இவள், உன் மார்பையே தன் உடைமையாக அடைவதற்குப் பதிலாக யாரோ பிறன் ஒருவன் மார்பையே பெறவேண்டி நேரிடும்.
அதை இவளால் தாங்கிக் கொள்வது இயலாது; அந்நிலையே, இவள் தன் உயிரிழந்து போவள். ஆகவே அந்நிலை உண்டாகாவாறு, இவளைக் களவில் கண்டு மகிழ்வதற்கு இடையிடையே, இவளை வரைந்து கொள்வதற்கு வேண்டிய முயற்சிகளையும் இப்போது விரைந்து மேற்கொள்வாயாக” எனத் தன்னை நோக்கிக் கூறாமல் கூறியதாக உணர்ந்தான்; உடனே மணத்தில் சென்ற மனம் உடையனாய், தன் ஊர் நோக்கி விரைந்து சென்றான்.
“மெய்யில் தீரா மே வரு காமமொடு
எய்யாய் ஆயினம் உரைப்பல்: தோழி!
கொய்யா முன்னுகும் குரல் வார்பு தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்
5. இருவி தோன்றின பலவே; நீயே
முருகு முரண் கொள்ளும் தேம்பளய் கண்ணிப்
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவன பெறலோடு அமைந்தனை: யாழநின்
பூக்கெழு தொடலை நுடங்க எழுந்து எழுந்து .
10. கிள்ளைத் தெள்விளி இடை இடை பயிற்றி
ஆங்காங்கு ஒழுகாயாயின், அன்னை
சிறுகிளி கடிதல் தேற்றாள் இவள் எனப்
பிறர்த் தந்து நிறுக்கு வளாயின்
உறற்கு அரிதாகும் அவன் மலர்ந்த மார்பே”
திணை : குறிஞ்சி
துறை : தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழி
தலைமகளுக்குச் சொல்லுவானாய் வரைவு கடாயது.
புலவர் : அறிவுடைநம்பி.
1. மெய்யில் தீரா: உடலுறு புணர்ச்சி பெறாத:
மேவரு-பெறுதற்கு அரிய:
2. எய்யாய் : அறியாய்;
3. வார்பு-முற்றி.
4. ஆன்ற : அற்றுப் போன; பைங்கால்-பசியதாள்.
5. இருலி-கதிர் இழந்த வெற்றுத்தாள்;
6. முருகு-மணம்: தேம்பாய்-தேன் சொட்டும்;
கண்ணி – தலைமாலை;
7. பரியல்-விரைந்து பாயும்.
8. யாழ்-அசை.
9. தொடலை-மாலை; நுடங்கி-அசைய;
10. கிள்ளைத் தெள்விளி-ஆலோலம் என்பது போலும்
கிளி ஓட்டும் ஓசை: பயிற்றி: பல கால் ஒலித்து,
12. சிறுகிளி-சிலவே வரும் கிளிகள்: கடிதல்-ஒட்டுதல்; தேற்றாள் -அறியாள்.
14. உறற்கு-அடைதற்கு,
(தொடரும்)
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்
Comments
Post a Comment