என் தமிழ்ப்பணி, புலவர்கா. கோவிந்தனார், 16, வள்ளுவர்காட்டும்வழி
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 15, அரிதாகும் அவன் மார்பு!-தொடர்ச்சி)
என் தமிழ்ப்பணி
13. வள்ளுவர் காட்டும் வழி
“தமிழனுக்கு உள்ள ஒரு சிறப்பு அவன் அங்கு சென்றாலும் தமிழ்க் கலாசாரத்தைப் பரப்புவது ஆகும். கடல் கடந்து சென்று தமிழன் பரப்பிய கலாசாரத்தின் சுவடுகள் இன்று உலக நாடுகள் பலவற்றில் காணப்படுகின்றன.
மது வருந்துவதும், மங்கையரோடு கூடி இன்பம் துய்ப்பதுமே வாழ்வு என்று இருந்த நாகர்களுக்கு, பழத்தமிழன் ஒருவன் மதுவும் மங்கையும் பெற்று வாழ்வது வாழ்வாகாது என்று தமிழ்நாட்டு அறம் போதித்து அவர்களை நல்வழிக்குத் திருப்பிய சேதியை மணிமேகலை கூறுகிறது.
தமிழன் அக வாழ்வில் அதிக கவனம் செலுத்தினான். புறவாழ்வைப் பற்றி அவன் கவனிக்கவில்லை.
வானுயர் மாடி வீடு கட்டி வாழ்வது, விரைவான வாகனங்களில் பிரயாணம் செய்வது, நவீன வசதிகள் பெற்று இருப்பது முதலானவற்றை இன்று நாகரீக வளர்ச்சிக்கான அறிகுறிகள் என்று பலரும் கருதுகிறார்கள்.
சந்திர மண்டலத்துக்குச் சென்று அங்கிருந்து மண் எடுத்து வருவது விஞ்ஞான விந்தைதான். அறிவியல் வளர்ச்சியை அது காட்டுமே தவிர நாகரிக மேம்பாட்டுக்கு அது எடுத்துக்காட்டு ஆகாது.
மேலை நாட்டு வளர்ச்சியெல்லாம் புறத் துறையிலேயே இருப்பதைக் காணலாம். சிகாகோ சென்று சருவ சமய காங்கிரசிலே பேசிய சுவாமி விவேகானந்தரும் இதைத்தான் அங்கே சொன்னார். அகத்தை விட்டுப் புற வளர்ச்சியிலேயே மேற்கு நாடுகள் கரிசனை கொண்டுள்ளன என்று அவர் எடுத்துரைத்தார்.
தமிழன் அக வாழ்விலே சிறப்பு எய்துவதற்கு பழந்தமிழகம் அவனுக்கு வழி காட்டியிருச்கிறது.
யார் மனிதன்? எப்படி அவன் வாழ வேண்டும், என்றெல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவப் பெருந்தகை விளக்கியிருக்கிறார்.
“அரம் போலும் கூரியராயினும் மரம் போல்வர் மனிதப் பண்பிலார்” என்கிறார் வள்ளுவர். “மனித உறுப்புகள் இருக்கிற ஒரே காரணத்தாலோ, அல்லது சந்திர மண்டலத்துக்குப் போய் வரக்கூடிய அறிவு பெற்று விட்டதாலோ மனிதன் மனிதன் ஆதி விடமுடியாது. மனிதப் பண்பு இல்லாவிட்டால் அவன் மரத்துக்கு சமம். ஆவான்” என்பது வள்ளுவர் வாக்கு.
“எது மனிதப் பண்பு? தனக்கு என்று இல்லாமல் பிறருக்காக வாழத் துடிக்கும் பண்பே மனிதப் பண்பு. பிறருக்குத் துன்பம் வரும்போது அது தனக்கு வந்த துன்பமாகக் கருதி அதை நிவர்த்திக்க முயற்சி செய்யும் பண்பே மனிதப் பண்பு.
இந்தப் பண்பு உள்ளவர்களாகத் திகழ்ந்ததால்தான் காந்தியடிகள், அறிஞர் அண்ணா போன்றோரை இன்றும் போற்றுகிறோம். அவர்களைத் தெய்வமாக மதிக்கிறோம். அண்ணா தெய்வம் ஆக்கப்பட்டதேன்?
அமெரிக்காவுக்குச் சத்திர சிகிச்சைக்காகச் சென்று வந்த அறிஞர் அண்ணா நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அண்ணாவால் மருத்துவர்களின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடக்க முடிய வில்லை.
எப்பொழுதும் போல் மக்கள் பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டார். சென்னை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இந்தக் கட்டத்தில்
“தாம் பிறந்த தமிழ் நாட்டுக்கு “தமிழ்நாடு” என்று சட்ட ரீதியாகப் பெயர் வைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை புதுடெல்லி மத்திய அரசு ஏற்று அதற்கு வேண்டிய சட்டத் திருத்தங்களைச் செய்ததும், 1968ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று சென்னையிலே வெற்றி விழா கொண்டாட ஏற்பாடாகி இருந்தது.
அண்ணா அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டு பேச விரும்பினார். மருத்துவர்கள் அவரை எச்சரிக்கை செய்தார்கள். இந்த நிலையில் நீங்கள் கூட்டத்தில் பேசுவது உங்களுக்குக் கூடாது என்று வழி மறித்துச் சொன்னார்கள்.
அந்த மருத்துவர்களுக்கு அறிஞர் அண்ணா என்ன பதில் கூறினார் தெரியுமா? “தமிழ்நாட்டுக்கு “தமிழ்நாடு” என்று பெயர் வைத்து விட்ட வெற்றி விழாவிலே பேச முடியாது என்றால் என்னுடைய இந்த உடல் இருந்தென்ன, இல்லாமல் போனால் தான் என்ன? நான் கட்டாயம் பேசத்தான் போகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டார்.
கூட்டத்தில் அவர் பேசி விட்டுத் திரும்பவும் மருத்துவமனைக்குப் போக வேண்டியதாயிற்று. போனவர் திரும்பி வரவில்லை அவர் கடைசியாகக் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் தமிழ்நாடு பெயர் சூட்டு வெற்றி விழாதான்.
தனக்கென வாழாது பிறர்க்குரியாளராக வாழ்ந்தவர் அவர். தமிழர் வாழ்வும், தமிழ்நாட்டின் உயர்வுமே. அவருடைய இலட்சியங்களாக இருந்தன.
அந்த இலட்சிய வாழ்க்கையே வாழக்கை என்று வள்ளுவர் கூறுகிறார். அப்படி வாழ்பவர்களே வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் என்றும், வள்ளுவர் சொல்கிறார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். அதனாலேயே இராமகிருட்டிண பரமஃகம்சர், சுவாமி விவேகானந்தர். காந்தியடிகள் போன்றோரைத் தெய்வமாக்கியுள்ள நாம், அறிஞர் அண்ணாவையும் தெய்வமாக்கிக் கொண்டுள்ளோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று வாழ்க்கைக்கு வழி காட்டினார் வள்ளுவப் பெருந்தகை. அந்த வழியில் தனக்கென வாழாது பிறர்க்குரியராக வாழ்ந்தவர்களுள் அண்ணாவும் ஒருவர். அதனாலேயே அவர் தெய்வம் ஆக்கப்பட்டிருக்கிறார்.
(தொடரும்)
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்
Comments
Post a Comment