Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 48 : பழந்தமிழும் தமிழரும் 8

 


(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 47 : பழந்தமிழும் தமிழரும் 7 – தொடர்ச்சி)

பழந்தமிழும் தமிழரும் 8

சிறந்தோரைப் பாராட்டிப் புகழ வேண்டா என்று கூறவில்லை. வியத்தல் வேண்டா என்றுதான் கூறுகின்றார். வியத்தல் என்றால் அளவுக்கு மீறி இல்லாத சீர்மைகளை இருப்பதாகப் புகன்று உயர்த்துதல். அதுதான் வேண்டா என்கிறார். அதனினும் ஒருவரைப் பதவியில் புகழில் பொருளில் சிறியவரென்று இகழ்தல் மிகக் கொடியது. ஆகவே இகழ்தலும் வேண்டா என்கிறார். வியந்து போற்றினாலும் போற்று; ஆனால் இகழ்ந்து விடாதே என்பதுதான் அவர் அறிவுரை. தம் இயல்பு கூறுவார் போன்று பிறர்க்கு அறிவுரை வழங்கும் பெற்றிமை நயம் தெரிந்து பாராட்டுதற்குரியது.

  இவரனைய புலவர்களும் சான்றோர்களும் நிறைந்த நாடாக இருந்தது அன்றைய தமிழ்நாடு. இவர்கள் பல்வேறு ஊர்களில் ஆங்காங்குத் தோன்றியிருப்பினும் ஒருங்கு கூடி உறைந்தனர். ஒருவரை ஒருவர் கொள்கையால் தழுவிக் கொண்டனர். அரசனால் போற்றப்பட்டு அரசவைகளில் தம் புலமையை வெளிப்படுத்துங்கால் போட்டி இருந்ததேனும் பொறாமை இருந்ததில்லை. பிறரை அறியாதவரென்று கூறினார் இலர். உண்மையாகவே ஒன்றும் அறியாதவராக இருப்பினும் அவரறியாமையை வெளிப்படுத்தாமல் அவரையும் தம்போல் புலமையுடையவராக மதிக்கச் செய்தனர்.

          நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து

          வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்

          சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி

          நல்லிதின் இயங்கும்அவன் சுற்றத் தொழுக்கமும்1

என்று புலவர் கூட்டம் போற்றப்படுதல் காண்க. பிசிராந்தையார் எனும் பெரும் புலவர் உயிர் துறக்க வடக்கிருந்தார் என்று அறிந்தவுடன் அனைத்துப் புலவர்களும் அங்குக் கூடிவிட்டனர். அதனைக் கண்ட கண்ணகனார் எனும் புலவர் சான்றோரியல்பு ஒன்றுகூடி வாழ்தலே; பிரிந்து வாழ்தலன்று என்று எடுத்துக்காட்டி மொழிந்துள்ளார்.

 பொன்னும் பவழமும் முத்தும் மணியும் எங்கெங்கோ தோன்றுகின்றன. ஆனால் அரிய அணியொன்று செய்யப்படுங்காலத்து அவை ஒன்று சேர்கின்றன. அதுபோல் பொன் என, மணி என மதிக்கத்தகும் சான்றோரும் கூடினர் என்று கூறியுள்ளார்.

          பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

          மாமலை பயந்த காமரு மணியும்

          இடைபட சேய வாயினும் தொடை புணர்ந்து

          அருவிலை நன்கலம் அமைக்கும் காலை

          ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்

          சான்றோர் பால ராப

          சாலார் சாலார் பாலரா குபவே

          (புறம் 218)

  அக்காலத் தமிழர்கள் பொன்னும் மணியும் முத்தும் பொருந்திய நகைகளை நன்முறையில் செய்து அணிந்து மகிழ்ந்தார்கள். தமிழர்கள் முதலில் கண்டு பயன்படுத்தியது பொன்னேயாகும். அதனால்தான் பொன் அடிப்படையிலேயே பிறவற்றிற்கும் இரும்பொன் (இரும்பு), செம்பொன் (செம்பு), வெண்பொன் (வெள்ளி) என்று பெயரிட்டுள்ளனர் என்று அறியலாம்.

  பெரிய பெரிய வீடுகள் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். பெரிய வீடு, நகர் என அன்று அழைக்கப்பட்டது. பெரிய வீட்டைக் குறித்த நகர் என்ற சொல், பின்னர்ப் பெரிய வீடுகள் நிறைந்த பேரூரைக் குறிக்கப் பயன்பட்டது. அப்பொழுது அம் எனும் ஆக்க விகுதி சேர்ந்து நகரம் எனல் ஆயது. இந் நகர் என்ற சொல் இன்று இந்திய மொழிகளில் எல்லாம் இடம்பெற்றுள்ளது. நகரவாழ்வு நாகரிக வாழ்வாக மதிக்கப்பட்டு நாகரிகம் எனும் சொல் தோன்றியது. நாகரிகம் எனும் சொல்லுக்கு மூலம் நகர் எனும் சொல்லே.

 வீடுகள் எல்லாம் பெரிய தெருக்களாக அமைந்திருந்தன. ஆறுபோல் அகன்ற தெரு என்றும் தேரூர் தெரு என்றும் பாராட்டப்பட்டுள்ளன.

  காலத்தைச் சிறுபொழுது என்றும் பெரும்பொழுது என்றும்

காலத்தைச் சிறுபொழுது என்றும் பெரும்பொழுது என்றும் பகுத்துக் கடமைகள்  ஆற்றினர். ஒரு நாளை ஆறு பகுதிகளாகவும் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகவும் பகுத்திருந்தனர். ஏழு நாள்களும் பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ச் சொற்களே. வடவர் கூட்டுறவு ஏற்படுவதற்கு முன்பே கொண்டிருந்தவையே. அவற்றில் சிலவற்றை வடசொல் என்பர் சிலர். அவ்வாறு கூறுதல் பொருந்தாது. மாதம் என்ற சொல்லே தமிழ்ச்சொல்தான். மதி என்பதிலிருந்து தோன்றியது. நாளும் கோளும் அறிந்திருந்தனர். வானநூல் ஆராய்ச்சியில் வல்லுநர்களும் இருந்தனர்.

          செஞ்ஞா யிற்றுச் செலவும்

          அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

          பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

          வளிதிரிதரு திசையும்

          வறிது நிலைஇய காயமும் என்றிவை

          சென்றளந்து அறிந்தோர்போல என்றும்

          இனைத்து என்போரும் உளரே     (புறம்30)

  இக் காலத்தில் சூடுள்ளதைச் சூடாகவே வைப்பதற்கும் குளிர்ச்சியுள்ளதைக் குளிராகவே வைப்பதற்கும் கலன்கள் பெற்றுள்ளோம். இவை மேனாட்டார் அறிவின் திறனால் கண்டுபிடிக்கப்பட்டவை. நம் பழந்தமிழரும் இத்தகைய கலன்களைப் பெற்றிருந்தனர். இக் கலனுக்குச் (பாத்திரத்திற்கு) சேமச்செப்பு என்று பெயர். ஒன்றை அது இருக்கும் நிலையிலேயே சேமித்து வைக்கும் இயல்பு பெற்றிருந்ததனால் அதனைச் சேமச்செப்பு என்றனர். அது குடிப்பன என்றும் சூடாக வைத்திருப்பதற்கே மிகுதியும் பயன்படுவது. அன்றும் அவ்வாறே பயன்பட்டது. குளிர் மிகுந்த பனிக்காலத்தில் வெந்நீர் சூடு அற்றுப்போகாமல் இருத்தற்குப் பயன்படுத்தியுள்ளனர்.

          ஆசில் தெருவில் ஆசில் வியன்கடை

          செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது

          ஓரில் பிச்சை ஆர மாந்தி

          அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்

          சேமச்செப்பில் பெறீஇய ரோ; நீயே

          மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை

          எக்கால் வருவது என்றி

          அக்கால் வருவர் எம்காத லோரே.

          (குறுந்தொகை277)

  இப் பாடலை இயற்றிய ஆசிரியர் பெயரும் மறைந்துவிட்டது. இதனுள் பயின்றுள்ள ஓரில் பிச்சை என்ற தொடரால் ஓரிற் பிச்சையார் என்று இதனை இயற்றியவர் அழைக்கப்பட்டுள்ளார். பிச்சை என்ற சொல் வடசொல் என்று கருதுவர் சிலர். பிச்சை என்பது தமிழ்ச்சொல்லே. பிச்சை என்பது பலரிடமிருந்தும் ஒன்றினைப் பிரிப்பது தானே. பிரிப்பது என்ற சொல் நாஞ்சில் நாட்டில் வசூலித்தல் என்ற பொருளில் வழங்குகின்றது. பிரித்தல், பிய்த்தல் என்பன ஒரு பொருள் சொற்கள். பிய்த்தல் > பிச்சல்> பிச்சை என்று வந்துள்ளது. இன்றும் பிரித்துக்கொண்டு போதலைப் பிச்சிக்கொண்டு போதல் என்று வழங்கக் காண்கின்றோம். ஆதலின், பிச்சை என்ற சொல் தமிழ்ச்சொல்லே. இது வடமொழியில் சென்று பிக்ஷா என்று உருமாற்றம் அடைந்துள்ளது. தமிழ் ஐ இறுதி வடமொழியில் ஆகார இறுதி ஆகலும், தமிழ் ச வடமொழி ட்ச(க்ஷ) வாதலும் மொழியியல் முறையில் உளவாகும் மாற்றங்களாகும்.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்