ஊரும் பேரும் 43 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அட்டானமும் அம்பலமும்
(ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி)
தென்னார்க்காட்டுக் கடலூர் வட்டத்தில் திருத்தளூர் என வழங்கும்
திருத்துறையூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தவநெறி என்பது சாசனத்தால்
அறியப்படுகின்றது.30
ஊரும் பேரும் 43
அட்டானமும் அம்பலமும்
துறையும் நெறியும் கோயிற் பெயர்களாக அமைந்தவாறே அட்டானம்,
அம்பலம் என்னும் ஆலயப் பெயர்களும் உண்டு.
வீரட்டானம்
தமிழ் நாட்டில் வீரட்டானம் என்று விதந்துரைக்கப்படும் சிவப் பதிகள் எட்டு என்பர். “அட்டானம் என்றோதிய நாலிரண்டும்” என்று திருஞான சம்பந்தர் அவற்றைக் குறித்துப் போந்தார். கெடில நதியின் கரையில் அமைந்த அதிகை வீரட்டானம் முதலாக விற்குடி வீரட்டானம் ஈறாக உள்ள எட்டுத் தலங்களின் சீர்மை, திருப்பாசுரங்களாலும் சில சாசனங்களாலும் இனிது விளங்கும். சிவபெருமானது வீரம் விளங்கிய தலம் வீரட்டானமாகும்.1
திரு அதிகை-வீரட்டம்
தென் ஆர்க்காட்டுப் பதிகளுள் சாலச் சிறந்த பெருமை வாய்ந்தது திருவதிகை என்பர். சூலை நோயுற்றதிருநாவுக்கரசர் அப்பிணி தீருமாறு உருக்கமாகப் பாட்டிசைத்த பெருமையும் அப்பதிக்கே உரியது.
“ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம் மானே”
என்பது அவர் பாட்டு. கெடில நதிக் கரையில் அதிகை யென்னும் ஊரில்
வீரட்டானக் கோயிலுள் அமர்ந்த இறைவனை இவ்வண்ணம் உள்ளமுருகிப் பாடினார் திருநாவுக்கரசர். திரிபுரங்களில் அமைந்து தீங்கிழைத்த தீயோரை இறைவன் சுட்டெரித்தமையால் அவ்விடம் வீரட்டானம் என்று பெயர் பெற்ற தென்பர். “ஒன்னார் புரங்கள் செற்றவர் வாழும் திருவதிகைப்பதி” என்று சேக்கிழார் கூறுமாற்றால் இவ் வைதிகம் விளங்குவதாகும்.
கெடில நதித் துறையில் அமைந்த அவ் வீரட்டானத்திறைவனைக் கெடிலவாணர் என்றும், கெடிலப் புனலுடையார் என்றும் திருநாவுக் கரசர் பாடி யருளினார். இங்ஙனம் கெடில நதியுடைய பெருமானாய் விளங்கிய ஈசனை,
“அறிதற் கரியசீர் அம்மான் தன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை
எறிகெடிலத் தானை இறைவன் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே”
என்று அவர் இரங்கிப் பாடினார். இப்பாட்டில் காணும் அதியரைய மங்கையே அதிகை யெனக் குறுகி வழங்க லாயிற்று.
திருக்கோவலூர்-வீரட்டம்
மற்றொரு வீரட்டானம் திருக்கோவலூர் ஆகும். அது பெண்ணை யாற்றின் தென்கரையில் உள்ளது. முன்னாளில் சேதி நாடென்றும், மலாடென்றும் பெயர் பெற்றிருந்த நாட்டின் தலைநகரமாகத் திருக் கோவலூர் விளங்கிற்று.2 பின்னாளில் அவ்வூர் மேலூர் என்றும், கீழூர் என்றும் பிரிவுற்றது. மேலூரே திருக்கோயிலூர் என இன்று வழங்கி வருகின்றது.3
தேவாரப் பாமாலை பெற்ற வீரட்டானம் கீழுரில் உள்ளது.
குறுக்கை-வீரட்டம்
மாயவரத்திற்கு வடமேற்கே ஐந்து கல் அளவில் உள்ள
குறுக்கையிலுள்ள திருக்கோயிலும் வீரட்டானம் என்று திருநாவுக்கரசர்
தேவாரம் குறிக்கின்றது. கண்ணப்பர் முதலிய அடியார்க்கு அருள்புரிந்த ஆண்டவனது பெருங்கருணையைக் குறுக்கையில் நினைந்து போற்றுகின்றார் நாவரசர்.
”நிறைகடல் மண்ணும் விண்ணும்
நீண்ட வானுலகும் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும்
குறுக்கை வீரட்ட னாரே”
என்னும் திருப்பாசுரத்தால் அரந்தை கெடுத்து வரந்தரும் இறைவன் பெருமை இனிது விளங்குவதாகும். ஈசன்மீது மலர்க்கணை தொடுத்த மன்மதன் அவர் கண்ணழலாற் காய்ந்திடக் கண்டது குறுக்கை வீரட்டம் என்பர்.
திருக்கடவூர்-வீரட்டம்
மாசற்ற பூசை புரிந்த மார்க்கண்டனுக்காகக் காலனைக் காலால் உதைத்தஈசனது பெருங்கருணைத் திறம் தேவாரத்தில் பல பாசுரங்களிற் பாராட்டப்படுகின்றது. திருக்கடவூரில் அமைந்த வீரட்டானம் அவ் வைதிகத்தைக் காட்டுவதாகும்.
“மாலினைத் தவிர நின்ற
மார்க்கண்டர்க் காக அன்று
காலனை உதைப்பர் போலும்
கடவூர் வீரட்ட னாரே”
என்று திருநாவுக்கரசர் அவ்வூரைப் பாடியுள்ளார். கடவூர் வீரட்டானத்து
இறைவனைக் காலகால தேவர் என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.4
திருக்கண்டியூர்-வீரட்டம்
திருவையாற்றுக்குத் தென்பால் உள்ள திருக்கண்டியூரில் அமைந்த கோயிலும் வீரட்டானமாகும். பிரமதேவனது செருக்கை அழிக்கக் கருதிய சிவபெருமான் அவன் சிரங்களில் ஒன்றையறுத்திட்ட செய்தியை இப் பதியோடு பொருத்தித் தேவாரம் போற்றுகின்றது. அச் செயலை “ஊரோடு நாடறியும்” என்று அருளினார் திருநாவுக்கரசர்.5
திருப்பறியலூர்-வீரட்டம்
இந் நாளில் பரசலூர் என வழங்கும் திருப்பறியலூரில் அமைந்த வீரட்டானத்தைத் திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.
“திரையார் புனல்சூழ் திருப்பறிய லூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே”
என்பது அவர் தேவாரம். தருக்குற்ற தக்கன் தலையறு பட்ட இடம் திருப்பறியலூர் என்பர்.
வழுவூர்-வீரட்டம்
மாயவரத்துக்குத் தெற்கே நான்கு மைல் அளவில் உள்ளது வழுவூர் வீரட்டானம். அது சயங்கொண்ட சோழ வளநாட்டில் திருவழுந்தூர் நாட்டைச் சேர்ந்த தென்று சாசனம் கூறும்.6 இரண்டாம் இராசராசன் முதலாய இடைக்காலச் சோழ மன்னர் அவ் வீரட்டானத்தை ஆதரித்த பான்மை கல்வெட்டுகளால் விளங்குகின்றது.7
விற்குடி-வீரட்டம்
தஞ்சை நாட்டு நன்னில வட்டத்திலுள்ள விற்குடியில் அமைந்த கோயிலும் வீரட்டானம் என்று தேவாரம் கூறுகின்றது.8 “விடைய தேறும் எம்மான் அமர்ந்து இனிதுறை விற்குடி வீரட்டம்” என்று திருஞான சம்பந்தர் அதனைப் போற்றினார். சலந்தரன் என்னும் அசுரனை ஈசன் சங்காரம் செய்த இடம் அவ் வீரட்டம் என்பர்.
ஆரூர்-மூலட்டானம்
திருவாரூர் பழமையும் பெருமையும் வாய்ந்த பல திருக்கோயில்களையுடையது. அவற்றுள்ளே தலை சிறந்தது பூங்கோயில் என்னும் புகழ் பெற்ற மூலட்டான மாகும். அங்குப் பழங் காலத்தில் புற்றிலே ஈசன் வெளிப்பட்டமையால் புற்றிடங் கொண்டார் என்றும், வன்மீகநாதர் என்றும் அவர் வழங்கப் பெறுவர்.
“இருங்கனக மதிலாரூர் மூலட்டானத்
தெழுந்தருளி யிருந்தானை”
என்ற திருநாவுக்கரசர் பாசுரத்தில் மூலட்டானம் குறிக்கப்பட்டுள்ளது.
பொன்னம்பலம்
தமிழ் நாட்டுக் கோயில்களுள் தலை சிறந்து விளங்குவது தில்லைச் சிற்றம்பலம் ஆகும். “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்று தேவாரம் பாடிற்று. அங்கு ஆனந்த நடனம் புரியும் இறைவனை அம்பலவாணன் என்பர். சிற்றம்பலத்தின் சீர்மையறிந்த தமிழ் மன்னர் அதனைப் பொன்னம்பலம் ஆக்கினர். ஆகவே, கனகசபை என்ற வடமொழிப் பெயரும் அதற்கு அமைந்தது.9
வெள்ளியம்பலம்
மதுரை யம்பதியில் ஆலவாய் என்னும் திருக்கோயிலில் ஓர் அம்பலம் உண்டு. அது வெள்ளியம்பலம் எனப்படும். அம்பலவாணர்க்கு அவ்வம்பலமும் உரியதென்பர்.
“அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளி யம்பலத்து நள்ளிருட் கிடந்தேன்”
என்று சிலப்பதிகாரப் பதிகம் அதனைக் குறிக்கின்றது. பொன்னம்பலம், வெள்ளியம்பலம் ஆகிய இரண்டும் தமிழ் நாட்டுப் பஞ்ச சபைகளுள் சிறந்தனவாகப் பாராட்டப் பெறும்.10
அடிக் குறிப்பு
30. செ.க.அ.(M. E. R.), 1924-25
1. வீரத்தானமே வீரட்டானம் என்பர். அவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது ஒரு பாட்டு.
“பூமன் திருக்கண்டி அந்தகன் கோவல் புரம் அதிகை
மாமன் பறியல் சயந்தான் விற்குடி மாவழுவூர்
காமன் குருக்கை நமன்கடவூர் இந்தக் காசினிக்குள்
தேமன்னு கொன்றைச் சடையான் பொருதிட்ட சேவகமே”
2. திருத் தொண்டர்களுள் ஒருவராகிய மெய்ப் பொருள் நாயனார் திருக்கோவலூரில் இருந்து அரசாண்ட குறுநில மன்னர் என்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படும்.
“சேதிநன் னாட்டின் நீடு திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழிவரும் மலாடர் கோமான்”
என்று அவர் குறிக்கப்படுகின்றார். மலையமான் நாடு மலாடென்றும், அந் நாட்டினர் மலாடர் என்றும், அவர்தம் மன்னர் மெய்ப்பொருள் நாயனார் என்றும் கூறுவர். (திருத்தொண்டர் புராண வுரை, ப. 578.)
3. இப் பாகத்தில் ஆழ்வார்கள் மூவரால் மங்களா சாசனம் செய்யப் பெற்ற இடைக்கழி என்னும் பெருமாள் கோயில் இருக்கின்றது.
4. 22 / 1906
5. “பண்டங் கறுத்ததொர் கையுடையான்
படைத்தான் தலையை
உண்டங் கறுத்ததும் ஊரொடு
நாடவை தானறியும்” திருக்கண்டியூர்ப் பதிகம்,3.
6. 418 / 1912.
7. 419 / 1912, 423 / 1912.
8. ‘அட்டானம்’ என்று ஓதிய எட்டுப் பதிகளையும் ஒரு திருப்பாசுரத்திலே குறித்தருளிய திருநாவுக்கரசர் விற்குடி வீரட்டத்தை விடுத்துக் கோத்திட்டைக்குடி வீரட்டத்தைக் கூறுகிறார். கோத்திட்டை பாடல் பெற்ற தலவரிசையிற் காணப்படாமையால் அது வைப்புத் தலமாகக் கருதப்படுகின்றது. அட்டானம் எட்டுக்குமேல் இல்லை என்பது “அட்டானமென்றோதிய நாலிரண்டும்” என்ற திருஞான சம்பந்தர் வாக்கால் தெளிவாகும். எனவே, திருநாவுக்கரசர் அட்டானத் திருப்பாசுரத்திற் குறித்த கோத்திட்டைக்குடி விற்குடிதானோ என்பது ஆராய்தற் குறியது.
9. மலையாளத்திலும் அம்பலம் என்பது கோயிலைக் குறிக்கும். அம்பலப் புழை முதலிய ஊர்ப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.
10. ஏனைய சபைகள்: திருநெல்வேலியில் தாமிரசபை; திரு க்குற்றாலத்தில் சித்திரசபை; திருவாலங்காட்டில் இரத்தின சபை.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
Comments
Post a Comment