Skip to main content

தமிழ் வளர்த்த நகரங்கள் – அ. க. நவநீத கிருட்டிணன் 3. தமிழும் குமரகுருபரரும்

 






(தமிழ் வளர்த்த நகரங்கள் 2. : தன்னேரிலாத தமிழ் – தொடர்ச்சி)

தன்னேரிலாத தமிழ்

தமிழும் குமரகுருபரரும்


நெல்லை நாட்டின் தெய்வக் கவிஞராகிய குமரகுருபரர் தாம் பாடிய முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழில் நம் மொழியின் இனிமையைத் தித்திக்கப் பேசுந்திறம் தமிழர் சித்தத்தை இன்பவெள்ளத்தில் ஆழ்த்துவதாகும். முத்தமிழ்க் கடவுளாகிய முத்துக்குமரனின் செங்கனிவாயில் பசுந்தமிழின் நறுமணம் கமழ்கின்றதாம். அம்முருகவேளும் சங்கத்தில் புலனாக வீற்றிருந்து தமிழை ஆய்ந்தான் என்பர். ஆதலின் அவன் சங்கப் புலவர்கள் வகுத்தமைத்த துங்கத் தமிழ் நூல்களைத் திருவாயால் ஓதிய அருளாளன் ஆவான். அவர்கள் வகுத்த தமிழ் நூல்கள் தீஞ்சுவைக் கனியும் தண்டேன் நறையும் வடித்தெடுத்த சாரம் அத்தகைய தமிழ் மணம், முருகன் திருவாயில் கமழ்த் தூறுகின்றது என்று குமரகுருபரர் கூறியருளினார்.

‘’ முதற்சங்கத்
தலைப்பா வலர் தீஞ் சுவைக்கனியும்
தண்டேன் நறையும் வடித்தெடுத்த
சாரங் கனிந்தூற் றிருந்தபசுங்
தமிழும் நாற”‘

என்பது அவர் பாடற் பகுதியாகும். இப்புலவர் தாம் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மையைத் தமிழ்ச்சுவையாகவே கண்டு உள்ளம் தழைக்கின்றார், “நறை பழுத்த துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே!”’ என்று மீனாட்சியம்மையை அவர் விளிக்குங்திறத்தால் தமிழின் இனிமையையும் அவ்வினிமைக்குக் காரணமான அகத்துறை, புறத்துறைகளையும் குறித்தருளினர்.



ஒண்டீந்தமிழ்

பிற மொழிகள் எல்லாம் எழுத்தும் சொல்லும் பற்றிய இலக்கணங்களேயே பெற்றிருக்கவும், தமிழ் ஒன்றுமட்டும் பொருள் இலக்கணமும் பெற்றுப் பொலிகின்றது. மக்கள் வாழ்வியலை வகுத்துரைக்கும் அப்பொருள் இலக்கணம் அகம், புறம் என்னும் இரு பகுதிகளையுடையது. காதல் கனியும் அகவாழ்வும் வீரம் சொரியும் புறவாழ்வும் பொருள் இலக்கணத்தால் போற்றியுரைக்கப்பெறுவனவாகும். இவையே அகத்துறை, புறத்துறை யெனப்பட்டன.


புறத்துறை இலக்கண இலக்கியங்களால் புகழும், அகத்துறை இலக்கண இலக்கியங்களால் இனிமையும் பெற்று விளங்கும் தமிழின் பெற்றியை மாணிக்கவாசகர் “ஒண்டீந்தமிழ்” என்ற தொடரால் குறித்தருளினர். அவரும் கூடலில் திகழ்ந்த தமிழ்ச் சங்கத்தில் சிவபெருமான் புலவராய் அமர்ந்து செந்தமிழாய்ந்த திறத்தைக் குறித்துள்ளார்.

“சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்
பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதில் கூடலின்
ஆய்ந்தஒண் டீந்தமிழ்”

என்பது அவர் அருளிய திருக்கோவையார்ப் பாடல் அடிகளாகும்.

வில்லி சொல்லுவது


பாரதம் பாடிய நல்லிசைக் கவிஞராகிய வில்லிபுத்தூரார் தமிழ்மொழியாகிய நங்கை பிறந்து வளர்ந்த பெற்றியை ஒரு பாடலில் அழகுறப் பேசுகின்றார். அவள் பொருப்பிலே பிறந்தாள் ; தென்னன் புகழிலே கிடந்தாள் ; சங்கப்பலகையில் அமர்ந்தாள் ; வையையாற்றில் இட்ட பசுந்தமிழ் ஏட்டில் தவழ்ந்தாள் ; மதுரையில் நிகழ்ந்த அனல் வாதத்தின்போது நெருப்பிலே நின்றாள் ; கற்றாேர் நினைவிலே நடந்தாள் ; நிலவுலகில் பயின்றாள் ; இன்று தமிழர் மருங்கிலே வளர்கின்றாள் என்று குறித்தார் அப்புலவர்

.

பரஞ்சோதியார் பாராட்டுவது

திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் தமிழின் சிறப்பைத் தக்கவாறு குறிப்பிடுகின்றார். “கண்ணுதற் கடவுளும் கழகத்தில் கவிஞனாக வீற்றிருந்து கன்னித்தமிழைப் பண்ணுறத் தெரிந்தாய்ந்தான்; அத்தகைய அருந்தமிழ் சிறந்த இலக்கண வரம்பையுடையது; மண்ணுலகில் வழங்கும் இலக்கண வரம்பில்லாத பிற மொழிகளுடன் ஒருங்கு வைத்தெண்னும் இயல்புடையதன்று” என்று இயம்பியுள்ளார். மேலும், அச்சிவபெருமான் தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற்றம்பலவனாகத் திகழ்வதற்கும் தீந்தமிழ்ச் சுவையே காரணம் என்று கூறிப்போந்தார். கயிலையில் ஆடிய கூத்தன் ஆலங்காட்டு மணிமன்றத்திலும், தில்லைப் பொன்னம்பலத்திலும், ஆலவாய் வெள்ளியம்பலத்திலும், நெல்வேலிச் செப்பறையிலும், குற்றாலச் சித்திரமன்றிலுமாகத் தென்றிசை நோக்கி ஆடிக்கொண்டே தமிழ்ச்சுவை நாடி வந்தான் என்று பாடினார் பரஞ்சோதி முனிவர். அவ்விறைவன் இடையறாது ஆடுவதால் ஏற்படும் இளைப்பையும் களைப்பையும் போக்கும் மருந்து, அருந்தமிழும் நறுந்தென்றலும் என்று நினைந்தான்.

“கடுக்க வின்பெறு கண்டனும் தென்றிசை நோக்கி
அடுக்க வந்துவந் தாடுவான் ஆடலின் இளைப்பு
விடுக்க வாரமென் கால்திரு முகத்திடை வீசி
மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ !”

என்பது பரஞ்சோதி முனிவரின் பாடல்.


அற்புதம் விளைத்த அருந்தமிழ்

இறைவனும் விரும்பிய இன்பத்தமிழ் தனது தெய்வத்தன்மையால் பற்பல அற்புதங்களையும் ஆற்றியுள்ளது. சுந்தரர் பாடிய செந்தமிழ்ப் பாடலில் சிந்தை சொக்கிய சிவபெருமான், அவர்பொருட்டுத் திருவாரூரில் பரவையார் திருமனைக்கு நள்ளிருளில் இருமுறை தூது சென்று வந்தான். அவிநாசித் தலத்தில் முதலையுண்ட பாலனை மீண்டும் உயிர்பெற்று வருமாறு செய்தது அச்சுந்தரர் பாடிய செந்தமிழே. எலும்பைப் பெண்ணுருவாக்கியது சம்பந்தரின் பண்ணமைந்த ஞானத்தமிழ். திருமறைக்காட்டில் அடைபட்டுக் கிடந்த திருக்கோவில் கதவங்களைத் திறந்தது நாவுக்கரசரின் நற்றமிழ். இன்னும் எண்ணிலா அற்புதங்கள் பண்ணமைந்த தமிழால் நிகழ்ந்தன.

பாரதியும் பைந்தமிழும்

இத்தகைய தெய்வநலங்கனிந்த தீந்தமிழின் சிறப்பை இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் புலவர்களும் பாடிக் களிக்கின்றனர். தேசீயக் கவிஞராகிய பாரதியார் பன்மொழியறிந்த பைந்தமிழ்ப் புலவர். அவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று வியந்தோதினர். இளங்குழந்தைக்குத் தமிழின் சிறப் பைக் கூற விரும்பிய அப் புலவர், சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே-அதனைத்-தொழுது படித்திடுக ” என்று அன்போடு எடுத்துரைத்தார்.

பாரதிதாசனாரும் பைந்தமிழும்


தமிழின் இனிமையைப் பகரவந்த பாரதிதாசனார், “முதிர்ந்த பலாச்சுளையும் முற்றிய கரும்பின் சாறும் பனிமலர்த்தேனும் பாகின்சுவையும் பசுவின் பாலும் இளநீரும் தமிழின் இனிமைக்கு ஒப்பாக மாட்டா” என்று உரைத்தார்.

“தமிழுக்கு அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !”

என்று இன்பக் கூத்தாடுகின்றார்.


திருக்குறளும் தொல்காப்பியமும்

இத்தகைய தமிழ் ஆயுந்தொறும் ஆயுந்தொறும் அளவிலாத இன்பந்தரும் இயல்புடையது என்று போற்றினார் பொய்யாமொழிப் புலவர். ஆய்தொறும் இன்பூட்டும் அரிய நூல்கள் பல இம்மொழியில் தோன்றியுள்ளன. அவற்றுள் தலையாயது உலகப் பொதுமறையாகிய திருக்குறள் நூலாகும் ; தொன்மை வாய்ந்தது ஒல்காப் புகழ் படைத்த தொல்காப்பியம் என்னும் இலக்கணப் பெருநூலாகும். மொழிநலம் குன்றாது காத்துநிற்கும் மொய்ம்புடையது தொல் காப்பியம். தமிழ் நலத்தை வையம் அறியச்செய்து வான்புகழைத் தேடித்தந்தது திருக்குறள். இதனைப் பாரதியார்,

“வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்று வாயார வாழ்த்தினார். இத்திருக்குறள் ஒன்றே தமிழைத் தன்னேரிலாத தனிப்பெருமையுடைய மொழி என்று போற்றப் போதியதாகும்.

(தொடரும்)

அ. க. நவநீத கிருட்டிணன்

தமிழ் வளர்த்த நகரங்கள்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue