தமிழ் வளர்த்த நகரங்கள் 4. – அ. க. நவநீத கிருட்டிணன் : தமிழ் வளர்த்த சங்கங்கள் 1/2
(தமிழ் வளர்த்த நகரங்கள் 3. – அ. க. நவநீத கிருட்டிணன் :. தமிழும் குமரகுருபரரும்-தொடர்ச்சி)
அத்தியாயம் 2. தமிழ் வளர்த்த சங்கங்கள்
தமிழ்வளர்த்த நாடும் நகரும்
தொன்மையும் தூய்மையும் இனிமையும் வளமையும் ஆகிய கலங்களால் தன்னேரிலாது விளங்கும் தமிழைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்து வளர்த்த காவலர் பாண்டிய மன்னர்களாவர். தமிழகத்தையாண்ட முடிவேந்தர் மூவரும் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் பேணிவந்தனராயினும் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாகும். அதனால் பாண்டிய நாட்டைத் ‘தமிழ்ப் பாண்டி நாடு’ என்றும், அந்நாட்டின் தலைநகராகிய மதுரையினைத் தமிழ் மதுரையென்றும் புலவர்கள் போற்றுவர். “தண்ணர் தமிழளிக்கும் தண்பாண்டி நாடு” என்றே மாணிக்கவாசகர் பாண்டியநாட்டைப் பாராட்டினர். மணிமேகலை ஆசிரியர் “தென்தமிழ் மதுரை” யென்றே மதுரையைக் குறிப்பிட்டார். ‘தமிழ் கெழுகூடல்’ என்று புறநானூறு புகழ்கிறது.
சங்கம் பற்றிய சான்றுகள்
பாண்டிய மன்னர்கள் பைந்தமிழை வளர்த்தற்கென அமைத்த சங்கங்கள் மூன்று. அவை தலை, இடை, கடை யெனக் குறிக்கப்பெறும். இம்மூன்று சங்கங்களைப் பற்றிய வரலாற்றை இறையனார் களவியல் பாயிர உரையாலும், தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைக் குறிப்புக்களாலும், சில சங்க இலக்கிய உரைகளாலும் ஒருவாறு அறியலாம். இவற்றுள் இறையனார் களவியல் உரையே சங்க வரலாற்றைச் சற்று விரிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வுரை பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பெற்றதேயெனினும் கருத்துகள் அனைத்தும் கடைச்சங்கத் தலைமைப் புலவராகிய நக்கீரனாருடையனவே என்பதில் ஐயமில்லை. இக்களவியல் உரை, சங்கம் இருந்த நகரங்களையும் அவற்றை நிறுவிய பாண்டியர்களையும், அவற்றில் இருந்து தமிழாய்ந்த புலவர்களையும், ஒவ்வொரு சங்கத்திற்கும் உரிய புலவர்களின் தொகையையும், சங்கம் நடைபெற்ற ஆண்டுகளின் அளவையும், முதலிரு சங்கங்கள் நிலவிய நகரங்கள் கடல்கோளால் அழிந்ததையும் எடுத்துரைக்கும் திறம் வரலாற்று முறைக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கின்றது. அதனாலேயே இவ்வரலாற்றில் நம்பிக்கை கொண்ட பண்டை உரையாசிரியர்கள் பலரும் தத்தம் உரையகத்தே இவ்வரலாற்றுக் குறிப்புகளை இடையிடையே எடுத்துக்காட்டினர்.
தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராகிய பேராசிரியர், “தலைச் சங்கத்தாரும் இடைச் சங்கத்தாரும் இவ்விலக்கணத்தால் செய்யுள் செய்தார்”, “அவ்வழக்கு நூல் பற்றியல்லது மூன்றுவகைச் சங்கத்தாரும் செய்யுள் செய்திலர்” என்று கூறும் உரைகளுள் களவியல் உரையிற் காணும் சங்க வரலாற்றுக் குறிப்புக்களைக் காண்கிறோம்.
மற்றாேர் உரையாசிரியராகிய உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் தாம் வரைந்துள்ள தொல்காப்பிய உரைக்கண், “அவ்வாசிரியராவார், அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் தலைச்சங்கத்தாரும் முதலியோர்” என்றும், புறத்திணையியல் உரையில், “தமிழ்ச் செய்யுட் கண்ணும், இறையனரும் அகத்தியனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச் சங்கத்தார் செய்தன இடையும், கடைச்சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க” என்றும் கூறுமாற்றான் களவியல் உரைக்குறிப்புக்களை அவர் எடுத்தாளுந்திறம் புலனாகின்றது.
தலை இடைச் சங்கங்கள்
சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், தம் உரைக்கண், “இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் இடைச்சங்கம்” என்றும், “கடைச்சங்க மிரீஇய பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாணனார் நாடகத் தமிழ் நூல்” என்றும், “முதலூழி இறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது உரைப்பகுதியில் முதலிடைச் சங்கங்கள் இருந்த நகரங்களும் கவியரங்கேறிய பாண்டியர்களும் குறிக்கப் பெற்றிருத்தலைக் காணலாம்.
“இவ்வகை யரசரிற் கவியரங்கேறினார்
ஐவகை யரசர் ஆயிடைச் சங்கம்
விண்ணகம் பரவும் மேதகு கீர்த்திக்
கண்ணகன் பரப்பிற் கபாடபுர மென்ப”
என்ற பழைய பாட்டானும் கபாடபுரத்தில் சங்கமிருந்த செய்தி அறியப்படுகின்றது. சேக்கிழார் பெருமானும் தாம் இயற்றிய தெய்வத்தன்மை வாய்ந்த பெரியபுராணத்தில், “சாலுமேன்மையிற் றலைச்சங்கப் புலவனார் தம்முள்” என்று தலைச்சங்கப் புலவரைக் குறித்துள்ளார். இடை கடைச் சங்கங்கள்
கடைச்சங்கப் புலவருள் ஒருவராய மாங்குடி மருதனார் தாம் பாடிய மதுரைக் காஞ்சியில் முதலிடைச் சங்கங்களைப் பற்றிய செய்திகள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்:
“தென்னவற் பெயரிய துன்னருந் துப்பில்
தொன்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந,”
“தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலங்தரு திருவின் நெடியோன் போல”
என வரும் மதுரைக்காஞ்சி அடிகளால் பாண்டியன் ஒருவன் அகத்தியரைத் தலைவராகக்கொண்டு முதற் சங்கத்தை நிறுவித் தானும் அச்சங்கத்தில் அகத்தியருக்கு அடுத்து வீற்றிருந்த செய்தியும், நிலந்தரு திருவின் நெடியோனாகிய முடத்திருமாறன் இடைச்சங்கம் நிறுவிப் புலவர்களைக் கூட்டித் தமிழாய்ந்த செய்தியும் விளக்கமாகின்றன.
இடைச்சங்கக் கபாடபுரம்
இடைச்சங்கம் இருந்த கபாடபுரத்தைப் பற்றிய செய்தி, வான்மீகி இராமாயணத்திலும் வியாசபாரதத்திலும் சுட்டப்பட்டுள்ளது. தென்பாற் செல்லும் வாணர வீரர்க்குச் சொல்லும் இராமன் வார்த்தைகளாக, ‘வானர வீரர்களே! பொன் மயமானதும் அழகானதும் முத்துகளால் அணி செய்யப்பட்டதும் பாண்டியர்க்கு உரிய தகுதியுடையதுமான கபாடபுரத்தைக் காணக் கடவீர்!’ என்று வான்மீகியார் குறிப்பிட்டுள்ளார். வியாசர் தம் பாரத நூலுள், ஒரு பாண்டியன், தன் தந்தையைக் கொன்று கபாடபுரத்தை அழித்த கண்ணனையும் கடிமதில் துவாரகையையும் அழிப்பதற்குப் படையெடுத்த செய்தியொன்றைக் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியர் தம் பொருள் நூலில் முத்தின் வகைகளைப் பற்றி மொழியுமிடத்துக் கபாடபுரத் துறையில் குளித்த முத்தின் வகையைப் பாண்டிய கவாடகம் என்று பகர்ந்துள்ளார்.
(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்
Comments
Post a Comment