Skip to main content

தமிழ் வளர்த்த நகரங்கள், அ. க. நவநீத கிருட்டிணன்- 2. தன்னேரிலாத தமிழ்

 


(தமிழ் வளர்த்த நகரங்கள் 1. பதிப்புரையும் அணிந்துரையும் – தொடர்ச்சி)

தன்னேரிலாத தமிழ்

பாரில் வழங்கும் பன்னூறு மொழிகளுள் முன்னைப் பழமொழிகள் மிகச்சிலவே. அவற்றுள்ளும் முன்னைப் பழமொழியாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் மொழி தன்னேரிலாத தமிழாகும். இளமையழகும் இனிமை நலமும் இறைமை நறுமணமும் என்றும் குன்றாது நின்று நிலவும் இயல்புடையது இம்மொழி. அதனாலேயே இதனைக் ‘கன்னித்தமிழ்’ என்று கற்றோர் போற்றுவர்.



கதிரவனும் கன்னித்தமிழும்


கன்னித்தமிழைப் புலவர் ஒருவர் கதிரவனுக்கு ஒப்பிட்டார். கதிரவன் காலையில் உதயவெற்பில் உதிக்கிறான்; உயர்ந்தோர் உவந்து வணங்குமாறு வானில் ஒளி வீசுகிறான்; உலகிற் சூழும் புறவிருளையும் போக்குகிறான். அத்தகைய கதிரவனைப் போலக் கன்னித் தமிழும் பொதிய வெற்பில் பூத்து வருகிறது; கற்றுண்ர்ந்தோர் கடவுள் தன்மை வாய்ந்த மொழி யென வணங்கி வாழ்த்த விளங்குகிறது; உலக மக்களின் அகவிருளையும் ஒழிக்கின்றது; ஆதலின் ஒளியால் தன்னேரிலாத கதிரவனைப் போன்று, உயர்தனிச் செம்மையால் தன்னேரிலாது விளங்கும் தன்மையது. தமிழென்றார் அப்புலவர்.

ஓங்கல் இடைவந்(து) உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்-ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிர்ஒன்(று) ஏனைய
தன்னேர் இலாத தமிழ்.”


என்பது அப் புலவரின் பாடல்.


தமிழின் தொன்மை

இம்மொழி, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன் தோன்றி மூத்த பழங்குடியினரால் பேசப்படும் பெருமை வாய்ந்தது. படைப்புக் காலங் தொட்டு மேம்பட்டு வந்த முடிமன்னர் மூவரால் பேணி வளர்க்கப்பெற்றது. எல்லையறு பரம்பொருள், பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும், தான் முன் இருந்தபடியே என்றும் யாதொரு மாறுபாடுமின்றி இருந்து வருகிறது. அஃதேபோல் நந்தம் செந்தமிழும் எந்த மாறுபாடுமின்றி என்றும் கன்னிமையோடு நின்று நிலவுகின்றது.


தமிழின் சீரிளமைத்திறம்

தாய்மொழியாகிய இத்தமிழிலிருந்து கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் சேய் மொழிகளாகத் தோன்றியுள்ளன. பல சேய்களே ஈன்றும் தாய்த்தமிழ் இளமைகெட்டு முதுமையுற்று வளமையற்றுப் போகவில்லை. இதனோடு ஒருங்கு வைத்து எண்ணப்பெறும் உயர்தனிச் செம்மொழிகளாகிய வடமொழி, எபிரேயம், இலத்தீன் ஆகியவற்றைப் போன்று உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதைந்துபோகவில்லை. என்றும் மாறாத சீரிளமைத் திறத்தோடு விளங்குகின்ற இம்மொழி. இவ்வுண்மையைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை,


‘’ஆரியம்போல் உலகவழக்(கு) அழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
 ‘’

என்று விளக்கினார்.


தமிழ் உயர்தனிச் செம்மொழி

உலக வழக்கில் பண்டுபோல் இன்றும் நின்று உலவிவரும் உயர் தனிச் செம்மொழி தமிழ். ஒரு காட்டில் வழங்கும் மொழிகள் பலவற்றுள்ளும் தலையாயதும், அவற்றினும் மிக்க தகையாயதுமான மொழியே உயர்மொழியாகும். பிற மொழிகளின் துணையின்றித் தனித்தியங்க வல்ல ஆற்றல்சான்ற மொழியே தனி மொழியாகும். திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழியே செம்மொழியாகும். இம்மூன்று இயல்புகளும் தன்னகத்தே கொண்ட தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியன்றோ !

தமிழ் என்ற பெயரமைதி


தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்பதே பொருள். இனிமையே இயல்பாக அமைந்த இம்மொழிக்குத் தமிழ் என்ற பெயர் எத்துணைப் பொருத்தமானது! மேலும், தமிழ் என்ற சொல் தனித்தியங்கும் திறத்தையுடையது என்ற கருத்தைக் கொண்டதாகும். எழுத்துகள் வன்மை, மென்மை, இடைமையாகிய மூவகை ஓசைகளுடன் உச்சரிக்கப்பெறுவன என்பதைப் புலப்படுத்துவது போன்று த, ம, ழ என்ற மூவின எழுத்துக்களும் அப்பெயரிலேயே அமைந்துள்ளமை ஒரு தனிச்சிறப்பாகும். மெய்யெழுத்தாக நிற்கும்போது புள்ளியுடன் விளங்கிய எழுத்து, அகர உயிருடன் சேரும்போது புள்ளி நீங்குவதன்றி எந்த வேறுபாடும் எய்துவதில்லை என்பதை விளக்குவது ‘தமிழ்’ என்ற சொல்லின் முதலெழுத்தாகும். இரண்டாம் எழுத்து, மெய் அகரமல்லாத பிற உயிர்களுடன் சேருங்கால் உருவில் வேறுபடும் என்பதை விளக்கியது. மெய்யெழுத்து இத்தகையது என்பதைக் காட்டி நிற்பது மூன்றாம் எழுத்து. எனவே தமிழ் நெடுங்கணக்கு உயிர், மெய், உயிர்மெய் என்ற பாகுபாடுகளையுடையது என்றும், மெய்யெழுத்துகள் ஓசையால் மூவகையின என்றும், ‘தமிழ்’ என்ற பெயரே விளக்கி நிற்றல் உணர்ந்து இன்புறத்தக்கதாகும். தமிழுக்கே உரிய ழகர மெய்யைத் தன்பால் கொண்டிருப்பதும் மற்றாெரு சிறப்பாகும். எழுத்துகளுக்கு உயிர், மெய் என்ற பெயர்களே அமைத்து, எழுத்தைப் பயிலும்போதே தத்துவ உணர்வையும் புகுத்த முனைந்த நம் முன்னோரின் நன்னோக்கினை என்னென்பது!

தமிழ் அமிழ்து


மூவாமைக்கும் சாவாமைக்கும் காரணமாவது அமிழ்து. அது மிகவும் சுவையானதொரு பொருள். மிகுந்த சுவையுடைய நம் மொழியினுக்குப் பெயரமைக்கப் புகுந்த முன்னோர் ‘அமிழ்து’ என்றே அமைத்துவிட்டனர். அதுவே பின்னாளில் தமிழ் என்று மருவிவிட்டது என்றும் கூறுவர். இதன்கண் அமைந்த அமிழ்தனைய இனிமையைக் கண்ட ஆன்றோர் இதனை வாளா கூறாது செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், இன்றமிழ், தீந்தமிழ் என்று அடைமொழி கொடுத்தே வழங்கி வந்துள்ளனர். கவியரசராகிய கம்பநாடர், தமது இராமாயணத்தில் அயோத்தி நகரைக் குறிக்குமிடத்து,

‘செவ்விய மதுரஞ் சேர்ந்தநற் றமிழில்
சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய
கவிஞர் அனைவரும் வடநூல்
முனிவரும் புகழ்ந்தது‘

என்று பாடியுள்ளார். இங்கு எத்தனை அடைமொழிகளுடன் தமிழ் சிறப்பிக்கப்பெற்றுள்ளது! செம்மை, இனிமை, நன்மை ஆகிய மூன்று அடைமொழிகளால் தமிழைப் பாராட்டுகிறார் கம்பர்.

(தொடரும்)

அ. க. நவநீத கிருட்டிணன்

தமிழ் வளர்த்த நகரங்கள்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்