Skip to main content

தமிழ் வளர்த்த நகரங்கள் 1. பதிப்புரையும் அணிந்துரையும் அ. க. நவநீத கிருட்டிணன்

 




தமிழ் வளர்த்த நகரங்கள்

நூற்குறிப்பு:
தமிழ் வளர்த்த நகரங்கள்
ஆசிரியர் : திருக்குறள்மணி, வித்துவான், செஞ்சொற் புலவர் திரு அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழாசிரியர், ம. தி. தா இந்துக்கலாசாலை, திருநெல்வேலி
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி-6 சென்னை-1.
1960
அங்கப்ப பிள்ளை கங்காதர நவநீதகிருட்டிணன் (1921-1967)

பதிப்புரை


‘என்றுமுள தென்தமிழ் இயம்பி இசைகொண்ட’ நந்தமிழ் நாட்டின்சீர் பரவுதற்குரியது. ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே’ என்று நயந்தோன்றப் பாடியுள்ள பாரதியார் உயர்ந்த கருத்தொன்றையும் உள்ளடக்கி வைத்துள்ளார். தாயோடு மொழியும் நாடும் ஒருங்குவைத் தெண்ணப்பட்டு வருதல் தொன்மை வழக்கு. மொழியால் பெயர்பெற்ற நாடுகள் உலகில் மிகுதி. ஆக, மொழியால் நாடும், நாட்டால் மொழியும் பெற்ற சிறப்புப்பெரிது; மிகப்பெரிது. நாடின் றேல் மக்களில்லை; மக்களின்றி மொழியில்லை; மொழியின்றி ஆால்களில்லை; நூல்களின்றிப் பெருமையில்லை. நாட்டைச் சிறப்பித்ததனால் மற்றவற்றையும் சிறப்பித்ததாயிற்று.



‘தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்யும்’ இற்றைநாள் மக்கள் ‘தமிழ் வளர்த்த நகரங்கள்’ பற்றியும் தெரிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகும். தமிழின் இன்றைய சிறப்பிற்கு வித்திட்ட பெருமையுடைய. மூன்று நகரங்களைப்பற்றியும் இந்நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவ்வந்நககரங்களின் சிறப்பு, அவற்றில் வாழ்ந்த நூலறிபுலமை வாய்ந்த ஆன்றாேர், அவர்கள் ஆக்கியருளிய அருந்தமிழ் நூல்கள் ஆகியவை குறித்த செய்திகள் அழகுறத் தரப்பட்டுள்ளன. அவை யாவும் கற்பார்க்குச் சுவையும் பயனும் தருவன.

தமக்கே யுரித்தான தண்டமிழ் நடையில் இந்நூலை யியற்றித்தந்த ஆசிரியர், திரு. அ. க. நவநீதகிருட்டிணன் அவர்களுக்கு நம் நன்றி உரியதாகுக. தமிழ்மக்கள் அனைவரும், சிறப்பாக மாணவர்கள் இதனேக் கற்று மாண்புறுவார்களாக.

— சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
————

அணிந்துரை

மக்கள் உயர்வுக்குத் தக்க துணைபுரிவன அறிவும் ஒழுக்கமுமே. எல்லாருக்கும் தாய்மொழி யறிவே இன்றி யமையாதது. இறையுணர்வைப் பெருக்கும் சமய அறிவே ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் வளர்க்கும். அறிவும் பண்பாடும் மக்களிடையே தரத்தால் குறைந்துவரும் இந்நாளில், அவற்றை மாணவரிடையே தரமுடையனவாகத் தழைக்கச்செய்யும் வழிதுறைகளை நினைவூட்டிக் காக்க வேண்டுவது கல்வித்துறையினரின் தலையாய கடமையாகும்.


இத்தகைய கடமையுணர்வுடன் தமிழாகிய தாய்மொழி யறிவையும் சமயப் பண்பாட்டையும் வளர்க்கும் மூன்று நகரங்களைப்பற்றிய சிறப்பான செய்திகள் இந்நூலில் விளக்கமாகத் தரப்படுகின்றன. தமிழகத்தின் தொன்மையான நகரங்களாகிய மதுரை, நெல்லை, தில்லை என்ற மூன்றும் தமிழ் வளர்த்த வரலாற்றை விளக்கும் இந்நூல் ‘தமிழ் வளர்த்த நகரங்கள்’ என்னும் பெயரால் வெளி வருகின்றது. தமிழுலகம் எனக்குச் சில்லாண்டுகளாகத் தந்துவரும் பேரூக்கத்தாலேயே இந்நூலையும் உருவாக்கினேன். என்னை இடையறாது இப் பணியில் ஊக்கிவரும் உயர்ந்த நோக்கினராகிய சைவசித்தாந்தக் கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையாப் பிள்ளையவர்கட்கு யான் பெரிதும் கடப்பாடுடையேன்.

இதனேக் கண்ணுறும் கலாசாலைத் தலைவர்களும் கன்னித்தமிழ்ப் பணியாற்றும் புலவர் பெருமக்களும் இந் நூலைத் தத்தம் கலாசாலைகளில் பாடமாக்கி எளியேனை இத்துறையில் ஊக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

தமிழ் வெல்க !

(தொடரும்)

அ. க. நவநீத கிருட்டிணன்

தமிழ் வளர்த்த நகரங்கள்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue