பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1 தொடர்ச்சி)
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2
அமுதவல்லி – உதாரன்
அறுசீர் விருத்தம்
அமுதவல்லி : கவிதை யாக்கும் மரபெல்லாம்
கன்னித் தமிழின் நிலைகொண்டு
குவியும் படியாய் எனதுள்ளம்
குறித்தீர் என்றும் என்நன்றி
புவியோர் போற்றும் இலக்கியங்கள்
பொருந்தும் மரபைச் சொல்வீரேல்
கவியோர் நெஞ்சின் போக்குணர்ந்து
கவிதை சுவைத்தல் எளிதாமே
உதாரன் : பாடெலாம் வறுமை யாகப்
பாழ்பட நேர்ந்த போதும்
ஏடெலாம் தமிழே யாக
இருந்திட வளர்த்த முன்னோர்
நாடெலாம் போற்றும் பான்மை
நவிலுறு இலக்கி யத்தின்
பீடெலாம் விரியச் சொன்ன
பெற்றியை இன்று காண்போம்
நாடக வழக்கின் ஊடாக
நானில வழக்கும் இணைவதுதான்
ஏடகந் தன்னில் பொதிகின்ற
இலக்கிய மென்றார் காப்பியனார்
பாடகந் தன்னில் இயற்பெயரும்
பயிலல் தவிர்க என்றுரைத்தார்
ஊடகம் பயிலுங் கதைமாந்தர்
உரைக்குங் கிளவி வகுத்துரைத்தார்
பாடல் சான்ற நெறியென்றே
பகர்ந்த நுட்பம் என்னென்றால்
ஏடகம் பதிக்கும் இலக்கியங்கள்
இயற்ற முனையும் புலவரெலாம்
நாடகம் நாட்டின் நடப்பிரண்டில்
நன்றுந் தீதும் உண்டேனும்
கேடகம் பதிக்கும் நிகழ்வுகளைக்
கிளத்தல் தவிர்க்க என்பதுவே
இல்லதும் இனிதும் நல்லனவாய்
இயற்று கென்றார் களவியலார்
இல்லதும் நாட்டில் உள்ளதுமாய்
இனிமை சேர்க்கும் நல்லனவே
நில்லென நெஞ்சில் நிறுத்தும்படி
நிகழ்த்தல் தமிழர் மரபாகும்
அல்லன சொல்லல் பயிர்வார்க்கே
அல்லல் விளைக்கும் அதனாலே
அமுதவல்லி : உள்ளது மறைத்தல் வழுவன்றோ
உற்ற துரைத்தல் சிறப்பன்றோ
பள்ளம் மேடு வாழ்வியலில்
பழகி நடக்கத் துணையாகக்
கள்ளம் பலவும் உள்ளபடிக்
கழறல் எவ்வா றிழுக்காகும்
எள்ளல் இன்றி யிதுபற்றி
எனக்கு விளங்க உரைப்பீரே
உதாரன் : பொய்யும் வழுவுந் தோன்றியதால்
புனைந்தார் மன்றல் மரபென்றால்
பொய்யும் வழுவும் காப்பியனார்
புகலா மையின் காரணமென்
மெய்யாய் முந்தை யிலக்கியமே
மேவு மன்றோ இலக்கணமாய்
மெய்யாய் முந்தை யிலக்கியங்கள்
பொய்யும் வழுவும் விலக்கியதேன்
தீயன பலவும் விரித்துரைத்தால்
திகழும் உலகில் இவைபோலும்
ஏயன சிலவும் உண்டென்றே
எண்ணி விலக்கார் எல்லாரும்
வாயென அவ்வா றொழுகுதற்கு
வழியா யதனைக் கொள்ளுதலே
தோயும் உளநூல் உண்மையெனத்
துணித்தார் தீதை இலக்கியத்தில்
நாட்டா ரெல்லா மறிவார்கள்
நாட்டில் நடக்கும் நாலுவகை
கூட்டல் கழித்தல் எவையென்றே
குழம்பித் தவிப்பர் பலபேரும்
நாட்டங் கொண்டோர் மக்கட்கு
நன்மை விளைக்குஞ் செயற்பாட்டில்
கூட்டல் மட்டும் விரித்துரைத்தல்
குறிக்கோள் பொருந்தும் வழியாகும்
உளவியல் உண்மை உணராரே
உள்ளது கூறல் கடனென்றே
அளவி றந்த தீமைகளை
அடுக்கிக் கூறி மக்களிடை
களவும் பொய்யுங் கலையாக்கிக்
காசு பறித்தல் குறிக்கொண்டார்
வளமை யான தமிழ்ப்புலவோர்
வகுத்த நெறியே நன்றாகும்.
அமுதவல்லி : மரபு மாற்றல் தீங்கென்றால்
மனித வளர்ச்சி குன்றாதோ
பரவுஞ் சமயச் சடங்குகளாய்ப்
பாவின் மரபைக் கொளலாமோ
விரவும் மரபுக் கூறுகளால்
விலகிப் பழைமை மாயாதோ
நறவுத் தமிழின் இயல்புணர்ந்தோய்
நவில்க உமது கருத்தினையே
உதாரன் : பழைமை என்று சொன்னாலும்
பாரில் புதுமை என்றாலும்
விழையும் பயனே அடிப்படையாம்
விருப்பும் வெறுப்பும் வேண்டாமே
பழைமை மாற்றிப் போட்டாலே
புதுமை யாகும் என்றுசிலர்
விழைவுக் கேலா புரிகின்றார்
விளங்கச் சொல்வேன் கேட்டுணர்க
எண்சீர் விருத்தம்
மதிமுகத்தாள் என்றுசொன்னார்
முன்னோர் பெண்ணை
மறித்ததனைப் புதுமையாகச்
சொல்ல வேண்டி
கொதியொளியாம் பரிதிமுகப்
பெண்ணா ளென்றே
கூறுதலைப் புரட்சியெனக்
கொள்ளார் யாரும்
நதிதன்னை நங்கையாய்க்
கொண்டார் முன்னோர்
நற்றமிழ்ப்பாச் சுவையுணர்ந்த
கம்பன் தானும்
கதியாகி வளஞ்சேர்க்குங்
கவிதை யாகக்
கண்டுசொன்னான் கோதாவரி
அதுதான் மாற்றம்
மன்னவனே மன்பதையின்
உயிரா மென்றான்
மண்டுபுகழ்ப் புறங்கண்ட
புலவன் தானும்
பொன்னம்பல வாணரையே
புகழ்ந்து பேசும்
புகழ்ச்சோழர் புராணத்தும்
அதுவே சொன்னார்
மன்னவனாம் தயரதனை
உடலா யாக்கி
மக்களெலாம் உயிரென்றான்
கம்பன் தானும்
உன்னுகநீர் உடலுயிராம்
இரண்டி னோடும்
உலகினையும் மன்னனையும்
ஒப்பு நோக்கி
உணர்வின்றி இயக்கமின்றி
அழிந்தே போகும்
உயிரற்ற உடல்தானும் ;
உடலே யின்றேல்
கணமேனும் உயிர்நிலைக்க
வழியே யில்லை
கனத்தமுடி சூடுகின்ற
அரசன், அன்றேல்
இணக்கமுறு அரசென்னும்
அமைப்பை விட்டால்
எந்நாடும் உருமாறிச்
சிதைந்தே போகும்
பிணக்கமிலா நாடென்னும்
அமைப்பு மின்றேல்
பெருமைகொள அரசேது
மன்னன் உண்டோ
உடலாக உலகினையும்
உடலை யாக்கும்
உயிராக அரசினையும்
உவமித் தல்தான்
திடமான உவமையாகப்
பொருந்தக் காண்பீர்
திருப்பியதால் கம்பன்சொல்
புதுமை யாமோ
கடனாகக் கொள்ளுகநீர்
எதுவேன் றாலும்
கணக்கிட்டுப் பயனெண்ணிக்
காழ்ப்பு நீக்கி
விடமென்றும் அமுதென்றும்
இருசா ராரும்
வீணாகச் சண்டையிடல்
நகைப்பா மென்க
அரசொன்று மக்கட்கு
வேண்டும் ; ஆனால்
அரசுரிமை தனியுரிமை
ஆதல் தீதே
முரசுடையார் காலத்திற்கு
முன்னே மக்கள்
முறையாகத் தலைமையினைத்
தெரிவு செய்தார்
உரமுடையார் தமதாக்கி
உரிமை பூண்டார்
உடல்வலியால் உலகாளல்
அந்தக் காலம்
விரகாக எண்ணாதே
விருப்பஞ் சொன்னேன்
வெறுப்பேதும் நுந்தையின்பால்
மனத்த லில்லை
அமுதவல்லி : விரகாக எண்ணவில்லை
என்ற னுள்ளம்
விரும்புவதைத் தான்நீரும்
சொல்ல லுற்றீர்
அரசென்னும் அதிகாரம்
ஒருவர் கையில்
அடுத்தடுத்துக் குடிமரபாய்
அமைதல் தீதே
மரத்துப்போம் வழிவழியாய்க்
குடும்ப ஆட்சி
மாறாதேல் நாட்டுநலன்
அவர்தம் நோக்கில்
அரசுரிமை பொதுவாக்கும்
எண்ணம் என்றன்
அடிமனத்துள் நெடுநாளாய்
உண்டென் றாலும்
பனிமறைந்து பகலொளியால்
உருவங் காணும்
பான்மையதாய் உளங்கொண்டேன்
உறுதி சொல்வேன்
இனியிந்த நாட்டினிலே
குடும்ப ஆட்சி
இல்லாத படிசெய்து
எல்லார் வாழ்வும்
நனிசிறக்க நாட்டுநலன்
மேலுங் கூட
நாடாளும் உரிமையினைப்
பரவ லாக்கிக்
கனிவோடு துணிவுடையார்
கடமை யாற்றக்
கற்கண்டு தமிழ்வளரத்
துணையாய் நிற்பேன்
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Comments
Post a Comment